Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics

4.8  

anuradha nazeer

Classics

நிச்சயம் நிம்மதி நிலவும்!

நிச்சயம் நிம்மதி நிலவும்!

3 mins
358


துவாபர யுகம் முடியப் போகிற காலகட்டம். ஒருநாள், அரச சபையில் அமர்ந்திருந்த தர்மர் முன் வந்து நின்ற வீரன் ஒருவன் அதிர்ச்சியான செய்தி ஒன்றைச் சொன்னான். மன்னா, நம் அரண்மனை வாயிலில் நிற்கும் குதிரைவீரன் ஒருவனிடம் உங்கள் சகோதரர்கள் நால்வரும் அடிமைப்பட்டு நிற்கிறார்கள்! வீரன் சொன்னதைக் கேட்ட தருமர் பதைபதைப்போடு அரண்மனை வாயிலை நோக்கி ஓடினார். அங்கே ஒரு குதிரைவீரன் தனக்கு முன் போட்டிருந்த வட்டம் ஒன்றினுள் கைகட்டி அடிமைகளாக நின்று கொண்டிருந்தார்கள். பீமன், அர்ஜுனன், நகுலன் சகாதேவன். என்ன ஆயிற்று. எதற்காக இவர்களைச் சிறைபிடித்து வைத்திருக்கிறாய். மாவீரர்களான இவர்கள் உன் பிடியில் எப்படிச் சிக்கினார்கள்? படபடப்பாகக் கேட்ட தருமரை அமைதியாகப் பார்த்து மென்மையாகச் சிரித்தான் அந்த குதிரை வீரன்.


இவர்கள் நால்வரும் என்னுடைய குதிரைக்கு விலை பேசினார்கள். நானும் விற்க சம்மதித்தேன். ஆனால் நான் கேட்ட விலையை இவர்களால் தரமுடியாததால் இப்படி அடிமைப்பட்டிருக்கிறார்கள்! சொன்னான். என்ன சொல்கிறாய் நீ. தொகையைத் தரமுடியவில்லையா? பெnன்னா, பொருளா? எவ்வளவு சொல் நான் தருகிறேன். என் தம்பிகளை உடனே விடுதலை செய்! மறுபடியும் சிரித்தான் குதிரை வீரன். என் குதிரைக்கு விலையாக நான் பொன்னோ பொருளோ கேட்கவில்லை. என்னுடைய நான்கு கேள்விகளுக்கு விடை சொன்னால் குதிரையைத் தருவதாகச் சொன்னேன். அதில்தான் தோற்று அவர்கள் அடிமைப்பட்டுவிட்டார்கள்! நான்கு கேள்விகளா? அப்படி என்ன கஷ்டமான வினாக்கள்? என்னிடம் கேள்..


நான் பதில் சொல்கிறேன் என் சகோதரர்களை விட்டுவிடு!

உன் தம்பிகளைப் போல நீயும் அவசரப்படாதே தருமா, முதலில் என் கேள்விகளுக்கு பதட்டம் இல்லாமல் பதில் சொல். உன் ஒவ்வொரு சரியான விடைக்கும். அவர்களில் ஒருவர்வீதம் நான் விடுதலை செய்கிறேன்! சொன்ன குதிரை வீரன், முதல் கேள்வியைக் கேட்டான். நான் வரும் வழியில் பாழும் கிணறு ஒன்றைப் பார்த்தேன். அதன் விளிம்பில் சிறியகாசு ஒன்று இருந்தது. அதைப் பற்றியபடி பெரிய மலை தொங்கிக் கொண்டிருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று? சிறிய நாணயம் மலையின் பளுவை எப்படித் தாங்குகிறது? கேள்வியை கவனமாகக் கேட்டுக்கொண்ட தருமர் பதில் சொல்லத் தொடங்கினார்.


நீ பார்த்த காட்சி, கலியுகம் தொடங்கப் போவதைக் காட்டுகிறது. மக்கள் சிறிய அளவுக்கு தருமம் செய்துவிட்டு, பெரிய அளவுக்கு புண்ணியத்தை எதிர்பார்ப்பார்கள். காலப்போக்கில் தர்மம் சிறிது சிறிதாகத் தேய்ந்து, மலையளவு பாவத்தோடு நரகத்தில் விழுவார்கள்! தருமர் சொன்ன பதில், சரி என்பதற்கு அடையாளமாக பீமனை விடுவித்துவிட்டு, அடுத்த கேள்வியைக் கேட்டான் குதிரை வீரன், வழியில் ஓரிடத்தில் நான், நடுவில் ஒரு கிணறும், சுற்றிலும் நான்குமாக ஐந்து கிணறுகளைப் பார்த்தேன்.


மற்ற நான்கு கிணறுகளில் நீர் வற்றினாலோ, குறைந்தாலோ நடுக்கிணறிலிருந்து அவற்றுக்கு நீர் பொங்கிப் பாய்ந்தது. ஆனால் நடுக்கிணறு வற்றிடும் சமயத்தில் மற்ற நான்கும் நிறைந்திருந்தாலும் சிறிதும் தண்ணீர் தருவதில்லை. இதன் அர்த்தம் என்ன? நீ கண்ட இந்தக் காட்சியும் கலியுகத்தின் கொடுமையைத் தான் காட்டுகிறது. நடுவில் உள்ள கிணறு பெற்றோர். மற்ற நான்கு பிள்ளைகள். தங்கள் பிள்ளைகளுக்கு கஷ்டமோ, சங்கடமோ வராமல் பாடுபட்டுக் காப்பாற்றுகிறார்கள் பெற்றோர். ஆனால் பிள்ளைகளோ வளர்ந்த பிறகு பெற்றவர்களைப் புறக்கணித்துவிட்டுச் செல்கிறார்கள்! இதைத்தான் அந்தக் கிணறுகள் உணர்த்துகின்றன.


சபாஷ் ... சரியான பதில்! சொன்ன குதிரை வீரன். அர்ஜுனனை விடுதலை செய்துவிட்டு, அடுத்த வினாவைக் கேட்டான். நான் இளைப்பாறிய ஓர் இடத்தில், பசு ஒன்று தன் கன்றிடமே பால் குடிப்பதைக் கண்டேன்! இது எப்படி சாத்தியம்? நீ சொல்வதெல்லாம் கலியின் தோஷங்களே... குழந்தை ஒன்று பிறந்தால் அதைக் காரணமாகக் காட்டி உறவினர்களிடம் இருந்து பணம் கேட்பார்கள் சிலர். வேறு சிலர் காசுக்காக தாங்கள் பெற்ற பிள்ளைகளையே தகாதவர்களிடம் விற்பார்கள்.. இதையெல்லாம்தான் அந்தக் காட்சி உணர்த்துகிறது! நகுலனை விடுவித்தான் குதிரைவீரன். கடைசியாக ஒரு கேள்வி பார்ப்பதற்கே விசித்திரமான மிருகம் ஒன்று கேட்கக் கூசும்படியான வார்த்தைகளைச் சொல்லியபடி கொடூரமாக அலைந்து கொண்டிருந்தது. சிலசமயங்களில் மலத்துவாரத்தின் வழியாகவே அது உணவை உண்டதையும் பார்த்தேன் ...இது!


கேள்வியை அந்த வீரன் முடிப்பதற்கு முன்பாகவே பதறிப்போனார் தருமர், வீரனே! நீ கலிபுருஷன் என்பதைப் புரிந்துகொண்டேன். இனி உனது ஆட்சி தொடங்கப் போகிறது. அதன் விளைவாக தர்மத்தின் வேர் அறுபடும். அறிஞர்கள் அறநெறியைப் புறக்கணிப்பார்; புரட்சி முற்போக்கு சிந்தனை என்றெல்லாம் பேசி மக்கள் கடவுள் பக்தியை மறந்து வாழ்வைத் தொலைப்பர். பொய், களவு, வஞ்சகம், கொலை பாதகங்கள் அதிகரிக்கும். பேராசையும், பொறாமை, போர் வெறி தலை விரித்தாடும்! மழை பொய்க்கும், பஞ்சமும் வறுமையும் பெருகும். கொடிய நோய்கள் பரவும். வேதம் கற்றோர் இகழப்படுவார்கள்! மக்கள் இந்தக் கொடுமைகளைத் தடுத்து உன் பிடியில் இருந்து மீள வழி ஏதும் இல்லாமல் தவிப்பார்கள்...! என்று வருத்தத்துடன் சொன்ன தருமரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.


தருமரே... என்னை நன்றாகப் புரிந்துகொண்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு வாக்கு தருகிறேன். தர்மாத்மாவான உங்கள் ஆட்சி நடைபெறும் வரை நான் இங்கு வர மாட்டேன். அதோடு உலகில் தர்மமும், பெரியோரை மதிக்கும் குணம், இறைபக்தி, ஒழுக்க நெறிகள் என்று தர்மம் இருக்கும்வரை என்னால் பெரும் பாதிப்புகள் ஏதும் நிகழாது அதேசமயம், தர்மநெறிகள் தவறும்போது என் ஆதிக்கம் நிகழ்ந்தே தீரும். அதில் இருந்து எவரும் தப்ப முடியாது! சொன்ன கலிபுருஷன் சட்டென்று மறைந்தான். இது கலியுகம் கலிபுருஷனின் கடு நிச்சயம் நிம்மதி நிலவும்! மைகள் மெதுவாக வேரூன்றுவது, நாள்தோறும் உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது தெரிகிறது.


இனியாவது விழித்துக் கொள்வது அவசியம். முதல் விஷயமாக பெற்றோரையும் பெரியோரையும் மதியுங்கள். அவரவர் குலதெய்வத்தை பழைமை மாறாத முறைகளில் வழிபடுங்கள். இயன்ற அளவு தானம், தர்மத்தை தவறாமல் செய்யுங்கள். வேத, புராண, இதிகாசங்களை மதியுங்கள் மாதம் ஒருமுறையாவது ஏதாவது கோயிலுக்குச் செல்லுங்கள். இப்படியெல்லாம் செய்தால், நிச்சயம், தர்மம் அழியாமல் காப்பாற்றப்பட்டு மீண்டும் தழைக்கும். கலியின் கொடுமைகள் குறைந்து உலகிலும் உங்கள் வாழ்விலும் நிச்சயம் நிம்மதி நிலவும்! நன்றே செய்யுங்கள் ! அதை இன்றே செய்யுங்கள்!!!         *ஸர்வம்ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்*


Rate this content
Log in

Similar tamil story from Classics