Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

5.0  

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

விடுவித்தல் விடுதலை அல்ல!

விடுவித்தல் விடுதலை அல்ல!

6 mins
362


                                    கதை என் கையில்! முடிவு குட்டிஸ் கையில்! – 7

                                             விடுவித்தல் விடுதலை அல்ல!

                                              (கோவை என். தீனதயாளன்)

                        


ஹை விவு, அவி, ரிஷி, ரோஹன், நித்தின், தனிஷா, பசீர், ராணாசிங், நிக்கில், ராஜு மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!


நசீர், ரங்கு, ஆடென் மூன்று பேரும் நெருங்கிய சினேகிதர்கள். ஒரே பள்ளியிலே படிக்கிறவங்க. அவங்க மூனு பேரு வீடுகளும் பக்கத்து பக்கத்துலேயே இருந்துச்சி. அதனாலே வீட்டுகிட்டையும் சரி, பள்ளிக்கூடத்திலேயும் சரி. அந்த மூனு பேரும் எப்பவுமே சேர்ந்தே விளையாடுவாங்க. அவங்க ஒவ்வொருத்தருக்கும் குட்டி குட்டியா ஒரு தங்கச்சி பாப்பாவும் இருந்திச்சி. அதுங்களும் மூனும் ஒன்னோடு ஒன்னா சேந்து சின்ன சின்ன சொப்பு பாத்திரங்களை வெச்சிகிட்டு அழகா ஒத்துமையா விளையாடுற அழகே தனியா இருக்கும். மூனு குடும்பத்து பெரியவங்களும் ரொம்ப நட்பாவே இருப்பாங்க. விசேஷமான உணவு வகைகளை செஞ்சா மத்த ரெண்டு குடும்பங்களோட பகிர்ந்துக்குவாங்க. வருஷம் மூனு நாலு தடவை மூனு குடும்பமும் ஒன்னா சேர்ந்து வண்டி வாகனம் ஏற்பாடு பண்ணிகிட்டு வித்தியாசமான இடங்களுக்கு ஒரு நாள், இரண்டு நாள் சுற்றுலாவும் போய்ட்டு வருவாங்க. அப்பிடி போய்ட்டு வந்தா தங்களோட மன பாரங்களையும் சுத்தமா துடைச்சி போட்டுட்டு, ‘ஃப்ரெஷ்ஷா’ திரும்பி வருவாங்க. அவங்கவங்களுது ரெண்டு குழந்தைதான்னாலும், எல்லாக் குழந்தைகளையுமே, அவங்க குழந்தைகளாகவே நெனச்சி ஆசையா பாசமா இருப்பாங்க.


இப்பிடி இருந்தப்பொ ஒரு முறை தொடர்ச்சியா மூனு நாள் விடுப்பு வந்தது. குழந்தைகள் எங்கேயாவது சுற்றுலா போகலாம்னு வம்பு பண்ணாங்க. பெரியவங்களும் சுற்றுலா போய் ஆறு மாசமாயிருச்சேன்னு எல்லாரும் ‘ஆணைகட்டி’க்கு போகலாம்னு முடிவு பண்ணினாங்க. வார இடை நாள் அப்பிடீங்கிறதாலே கூட்டமும் அவ்வளவா இருக்காது. காலையிலே ஐந்து மணிக்கு கிளம்பி ராத்திரி எட்டு மணிக்குள்ளே திரும்பிடனும்னு திட்டம்.



நிறைய திண்பண்டங்களும், காலை-மத்தியான சாப்பாடுகளும், மாலை இனிப்பு மற்றும் நொறுக்குத் தீனிகளும், ஒழுங்கா அடுக்கப்பட்டு, ஒரு பெட்டி தயாரா இருந்துச்சி. ஒரு பெரிய ஃப்ளாஸ்கில் சூடான காப்பி. அதைத் திறந்தா அதோட மணம், போற வர்றவங்களையெல்லாம், ‘வேணுமா.. வேணுமா..’ன்னு கேட்டுகிட்டு இருந்துச்சி. இன்னொரு பக்கம் பந்துகளும், டேபிள் டென்னிஸ் மட்டைகளும், க்ரிக்கெட் மட்டையும் பைகளுக்குள்ளே தயாரா இருந்துச்சி. இன்னொரு கட்டைப் பையிலே குட்டி குட்டிஸ் விளையாட சிறிய சிறிய படகு, கப்பல்(தண்ணீரில் விட்டுப் பார்க்க), புலி, சிங்கம், பசு, ஆடு, அப்புறம் சொப்பு சாமான்கள் எல்லாம் தயாரா இருந்துச்சி. குழந்தைகள் தண்ணீரில் இறங்கி விளையாடுவதற்கான ‘ஷாட்ஸ், போன்ற ஆடைகளும் எடுத்து தயாரா வெச்சிருந்தாங்க. நீரில் மிதந்து விளையாடும் சில மிதப்பான்களையும் கூட குழந்தைகள் எடுத்து வைத்திருந்தன.


குறித்தபடி சரியா காலைலே ஐந்து மணிக்கு, பனிரெண்டு பேர் வசதியா போகக்கூடிய ஒரு ‘டெம்போ ட்ராவலர்’ வேன் வந்து நின்னுச்சி. பொருள்கள் எல்லாத்தையும் வாகனத்தில் ஏத்துனாங்க. ஓட்டுனர் பகத்தும் குழந்தைகளின் உற்சாகத்தைப் பார்த்து தானும் உற்சாகம் அடைஞ்சி எல்லாப் பொருள்களையும் வாகனத்திலே ஏற்றும் பொறுப்பை எடுத்துகிட்டு மகிழ்ச்சியா இருந்தார். ஆரம்பத்திலேயே ஓட்டுனர் பகத்தோட குழந்தைங்க சினேகமாகிட்டாங்க. பதினைந்து நிமிடங்கள்லே ‘லோட்’ செஞ்சிகிட்டு சரியா 5:15 மணிக்கு வேன் புறப்பட்டுச்சி. குழந்தைகள் விரும்புற விஜய், சிவகார்த்திகேயன் பாட்டுகளை போட்டு பகத் ஆரம்பத்திலேயே குழந்தைகளை உற்சாகமாகப் படுத்தினாரு. பெரியவங்க ஒரு பக்கம் அரட்டை அடிச்சிகிட்டு வந்தாங்க. குழந்தைங்க ஒரு பக்கம் கை தட்டி பாடிகிட்டு வந்தங்க. குட்டி குட்டிஸ்கள் மட்டும், சீக்கிரமா எழுந்திருச்சிட்டதனாலேயோ என்னமோ அவங்கவங்க அம்மா மடியிலே படுத்து ‘ஹாயா’ தூங்கிகிட்டு வந்துச்சிங்க.


சுமார் ஒன்னரை மணி நேர பிரயாணத்துக்கப்புறம், காலையிலே சரியா 6:45 மணிக்கு, வண்டி சுற்றுலா பிரதேசத்துக்குள்ளே நுழைஞ்சிது. நினைத்தது போலவே கூட்டமில்லை. ஓரிரு குடும்பஙகள் மட்டுமே இருந்தன. பகத் மாமா (குழந்தைகள் பகத்தை ‘பகத் மாமா’ என்று அழைக்க ஆரம்பிச்சிட்டாங்க.) அனைவரையும் இறக்கி விட்டுவிட்டு வாகனத்தை பாதுகாப்புடன் நிறுத்திட்டு வர போயிட்டார்.


சுற்றுப் புற சூழல் அனைவருக்குமே உற்சாகத்தைக் கொடுத்துச்சி. குழந்தைகள் பூமிக்கும் ஆகாசத்துக்கும் பறந்தாங்க. குட்டி குட்டிஸ் கூட தூக்கம் முடிஞ்சி உற்சாகமா சிரிச்சி விளையாடத் தொடங்கிட்டாங்க. பெரியவங்களும் தங்கள் மனோபாரங்களை மறந்து இயற்கையோடு ஒன்றிப் போக ஆரம்பிச்சாங்க. காடுகள் இயற்கையா அடர்த்தியா மனசை அள்ளிக்கிற மாதிரி ‘பச்சைப் பசேல்’னு ரொம்ப ரொம்ப அழகா இருந்திச்சி.


அங்கங்கே சின்ன சின்ன திருப்பங்களோட ஒரு அழகான நீரோடை ஓடிகிட்டிருந்துச்சி. அதுலே முழங்கால் அளவுக்கும் கீழே தண்ணி ஓடிகிட்டிருந்திச்சி. ‘சள.. சள..’ ன்னு மெல்லிய சத்தத்தோட, நீர் சுழித்து சுழித்து ஓடிகிட்டிருந்துச்சி. அந்த ஓட்டத்தின் நடுவுலே, அந்த அதிகாலை சூரியனோட ஒளிக் கிரணங்கள் பட்டுத் தெறித்த அந்த பொன்னிறக் கதிர்கள் - ஒரு மயிலின் தோகைகள் தங்க வண்ணத்தில் விரிந்தால் எப்படி இருக்குமோ அப்படி கண்ணைப் பறிக்கும் படி – பரந்து விரிந்து இருந்தது. ஆபத்தில்லாத அழகான தண்ணீர். குழந்தைகள் தைரியமா இறங்கி விளையாடலாம்.


அது மட்டுமா! சுத்திலேயும் பச்சைப் பசேல்னு கண்ணுக்கு எட்டுன வரை பசுமைதான். பட்டாம் பூச்சிகளும், சின்ன சின்ன பொன் வண்டுகளும், வண்ண வண்ண பூச்சிகளும் ரம்மியமா காட்சி அளிச்சிகிட்டு இருந்திச்சி. அங்கங்கே மரங்க மேலேயும் செடி கொடிகள் மேலேயும் தரையிலேயும் அணில்கள் குறுக்கும் மறுக்கும் ஓடி விளையாடிகிட்டி இருந்துச்சிங்க. சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகளும், பவள மூக்கை வெச்சிகிட்டு பச்சைக் கிளிகளும் மெலீசா பறந்து பறந்து பக்கத்துலே வந்துட்டுப் போறப்போ மெய் மறந்து போயிருச்சி


(இயற்கையில் மூழ்கி விட்டால் மீள்வது கடினம்! எனவே வலுக்கட்டாயமாக வெளியேறி கதையில் கலப்போம்!)


குழந்தைங்க தண்ணீலே இறங்கி ஒரே கொட்டமடிச்சாங்க. பெரியவங்க எல்லாம் குழந்தைகளின் அருகாமைலே இருந்த ஓடைக் கரை மேல உட்கார்ந்துகிட்டு குழந்தைகளின் சந்தோஷத்தைப் பார்த்து பரவசம் அடைஞ்சிகிட்டிருந்தாங்க. அவங்க பாதுகாப்பையும் பார்த்துகிட்டாங்க. வெகு நேரம் விளையாடிய குழந்தைங்க சுமார் பத்து மணிக்குதான் காலை உணவு சாப்பிடவே வந்தாங்க. ஓட்டுனர் பகத்தையும் வரவழைச்சி அவருக்கும் உணவு வழங்கி, எல்லாரும் சாப்பிட்டாங்க.


அப்போ கை கழுவறதுக்காக, ஓடையின் வசதியான ஒரு பக்கத்திலே ஆடென் போனான். திடீர்னு, ‘ எல்லாரும் இங்கே வாங்க.. இங்கே பாருங்க..’ என்று கத்தினான். என்னவோ ஏதோன்னு எல்லாரும் அங்க ஓடினாங்க.


‘என்னடா ஆடென்?’


‘இங்கே பாருங்க.. ஒரு எறும்பு தண்ணீலே மாட்டிகிட்டு தடுமாறுது..’


மற்ற குழந்தைகளும் பரபரப்போட எட்டிப் பார்த்தாங்க. பெரியவங்களும் பச்சாதாபத்துடன் எட்டிப் பார்த்தாங்க. ஒரு எறும்பு தண்ணிலே விழுந்து தவிச்சிகிட்டு இருந்துது.


ரங்கு ஓடிப்போய் பக்கத்துலே இருந்த ஒரு மரத்துலே இருந்து ஒரு பெரிய இலையைக் கொண்டு வந்து கொடுத்தான். பெரியவங்க எல்லாம் சேர்ந்து, மெதுவா அந்த எறும்பை அந்த இலைலே ஏத்திட்டாங்க. ஒருத்தரு, அப்படியே அந்த இலையோட கொண்டு போயி கரையிலிருந்து பத்தடி தூரத்துலே இருந்த ஒரு பெரிய தொட்டிக்குள்ளே அந்த எறும்பை மெதுவா விட்டுட்டாங்க.


நசீர் ஓடக் கரைக்குப் பக்கத்துலேயே ஒரு எறும்பு புற்று இருப்பதைப் பார்த்தான். ‘அன்கிள், அப்பா இங்கே வாங்க. அந்த தொட்டிலே விட்ட எறும்ப இங்கே கொண்டு வந்து இந்தப்புற்றுலேயே விட்டுருங்க.’ என்று கூறினான்.


‘புற்றை விட, அங்கேதாண்டா அந்த எறும்புக்கு பாதுகாப்பு.. தண்ணீலே மறுபடியும் விழாது.’ என்று கூறி விட்டனர்.


‘அதுவும் சரிதான்’கிற மாதிரி மனசுல பட்டாலும், நசீர், ரங்கு, ஆடென் மூனு பேருக்கும், மனசுக்குள்ளே, எறும்பை அந்த தொட்டிலே விட்டது, ஏதோ ஒரு புரியாத கஷ்டத்தைக் கொடுத்துச்சி.


மதியம் ஏதேதோ விளையாடும் போது கூட அவங்க மூனு பேரும் ‘அந்த எறும்பை தனியா அங்கே கொண்டு போய் விட்டுருக்கக் கூடாது’ன்னு அதைப் பற்றியே அடிக்கடி சொல்லிகிட்டிருந்தாங்க. ஆனா காரணம் சொல்லத் தெரியலே.



‘சரி! குட்டீஸ்.. இந்த இடத்துலே கதையை நிறுத்தறேன். நசீர், ரங்கு, ஆடென் மூனு பேரும் ஏன் மனசு கஷ்டப்பட்டாங்க. அந்த கஷ்டம் நியாயம்தானா? அப்புறம் என்ன நடந்திருக்கும்னு யோசிச்சு, உங்களில் யாராவது மேலும் தொடர்ந்து சொல்லி இந்தக் கதையை முடீங்க பாக்கலாம்!’ என்றேன்.


‘நான் சொல்றேன்’னு முன் வந்த ராணா தொடர்ந்தான்:

நசீர், ரங்கு, ஆடென் மூனு பேரும் எறும்பு பற்றி பேசிக்கொண்டே தங்களின் ‘க்ரிக்கெட்’ விளையாட்டைத் தொடங்குனாங்க. திடீரென ஒரு ஷாட் சிக்சருக்கும் மேலே போக பந்து காட்டுப்பகுதிக்குள் சென்று விழுந்தது. பந்தைத் தேடிப்போன ரங்கு ஐந்து நிமிடம் ஆகியும் வரவே இல்லை. அடுத்து ‘நான் பார்த்துட்டு வர்றேன் அப்பிடீன்னு போன ஆடெனும் திரும்பலே. நசீரும் அவர்களைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் நுழைந்தான். ‘ரங்கு..’ என்றும் ‘நசீர்..’ என்றும், ‘ஆடென்..’ என்றும் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி கூப்பிடறது எங்கேயோ ரொம்ப தூரத்தில் கேட்டது. மூனு பேருமே அழுகிற நிலைக்கு வந்துட்டாங்க. கடைசியா ஒருவழியாக மூனு பேரும் ஒரு அடர்ந்த மரத்துகிட்டே சந்திச்சாங்க. ஆனா காட்டுலே எங்கே இருக்கிறாங்கன்னு மூனு பேருக்குமே தெரியலே. அவங்களுக்கு வெளியே வரவும் வழி தெரியலே. பயத்தோடையும், கவலையோடவும் வெளியே போக வழி தேடிகிட்டிருந்தப்போ ஒரு முனிவர் வந்தாரு. விஷயத்தை கேட்டு, அவங்களுக்கு ஆறுதல் சொல்லி, அவங்களை காட்டை விட்டு வெளியில் கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாரு. காட்டை விட்டு வெளிலே வந்ததுக்கப்புறம்தான் அவங்களுக்கு உயிரே வந்துது. இருந்தாலும் அம்மா அப்பாகிட்டே போய் சேர்ந்தாதான் முழு உயிரும் வரும் போல இருந்துச்சி. அப்பா அம்மாவே தேட ஆரம்பிச்சாங்க.


அதுக்குள்ளே பயந்து போன மூனு குடும்பமும் அவங்களை தேடிகிட்டிருந்தாங்க. நல்ல வேளை! கொஞ்ச நேரத்துலேயே மூனு பசங்களையும் பார்த்துட்டாங்க. மூனு பேரும் அப்பா அம்மாவை கட்டிப் புடிச்சிகிட்டாங்க. நடந்ததைக் கேட்டு அந்த முனிவருக்கு மனசார நன்றி சொன்னாங்க.


எல்லோரும் கிளம்பற நேரம் வந்தப்போ ஆடெம், ரங்கு, நசீர் மூனு பேரும் அந்த எறும்பு தொட்டிகிட்ட ஓடினாங்க. நல்ல வேளை. அந்த எறும்பு அந்த தொட்டியை விட்டு வெளியே வர முடியாமல் சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்துச்சி. அதே இலையை பயன் படுத்தி மூனு பேரும் அந்த எறும்பைக் கொண்டு வந்து அந்த எறும்புப்புத்து கிட்டேயே விட்டாங்க. அந்த எறும்பும் ரொம்ப சந்தோஷமா அந்த எறும்புப் புத்துக்குள்ளே போய் சங்கமம் ஆகிடுச்சி.


‘புறப்படுற நேரத்துலே என்னடா செய்றீங்க?’ன்னு கேட்டுகிட்டே எல்லாரும் அந்த எறும்புப்புத்து பக்கத்துலேயே வந்துட்டாங்க.


அப்பொ மூணு பசங்களும் ஒருத்தரு மாற்றி ஒருத்தரு அவங்க அப்பா அம்மாகிட்ட சொன்னாங்க:

“அம்மா, அப்பா - முனிவர் எங்களைக் காப்பாத்தி காட்டைவிட்டு வெளிலே விட்டுட்டாரு. ஆனா அப்பவும் எங்களுக்கு முழு நிம்மதியும் தைரியமும் வரலே. அப்பா அம்மா கிட்டே போய் சேர்ந்தாதான் நிம்மதியா இருக்கும். இல்லன்னா அனாதைகள் மாதிரி நாம் அங்கே இங்கே அலைஞ்சிகிட்டு உயிரோட இருந்து என்ன பயன்? அப்பிடீன்னு தோணிச்சி. அப்புறம் உங்களோட சேர்ந்ததுக்கப்புறம்தான் எங்களுக்கு உயிரே வந்தது.


அது போலத்தானே தண்ணீலே இருந்து நம்ம காப்பாத்துன அந்த எறும்பும்! அதைக் கொண்டு போய் பாதுகாப்பா இருக்கட்டும்னு கரையிலிருந்து பத்தடி தூரத்துலே இருந்த ஒரு பெரிய தொட்டிக்குள்ளே விட்டுட்டோம். ஆனா அது தன்னோட அப்பா அம்மா உறவுகள் நண்பர்களை விட்டுட்டு அந்த தொட்டில உயிரோட இருந்து என்ன பயன். அதை யோசிச்சுதான் மறுபடியும் அந்த எறும்பக் கொண்டு வந்து அதோட புற்றுக்குள்ளேயே விட்டுட்டோம்.’


பெரியவங்க எல்லாம் இதைக் கேட்டு பசங்க சொல்றது ஞாயம்தான்னு உணர்ந்துகிட்டாங்க. அவங்களைப் பாராட்டினாங்க.


கடைசிலே, மறுபடியும் ஒரு தடவை, பசங்களும், பசங்களோட சேர்ந்து பெரியவங்களும், குட்டிக் குட்டீஸ்களும், ஒட்டுனர் மாமா பகத்தும் அந்த எறும்புப்புற்றைப் பார்த்து கைகளை ஆட்டி ‘டாட்டா’ சொல்லிட்டு மனசு நெறஞ்ச மகிழ்ச்சியோட கிளம்பினாங்க.


அந்த எறும்பும், அந்த புற்றிலிருந்து, இவங்களை நோக்கி, தன் கைகளை ஆட்டி, மிகுந்த நன்றியுடன் ‘டாட்டா’ சொல்லிட்டு, அதன் அம்மாவின் மடியில் படுத்து ஒரு பெருத்த நிம்மதிப் பெருமூச்சு விட்டுச்சிங்க. இதை என்னாலே பார்க்க முடியலேன்னாலும் மனசார உணர முடிஞ்சது.


                                        உங்களுக்கு?



‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று நித்தின் கேட்க, தனிஷா சொன்னாள்: ‘ஒருவரை ஒரு இக்கட்டிலிருந்து விடுவிப்பது மட்டும் அவர்களுக்கு நிம்மதியைத் தந்து விடாது. அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கி ஒரு இயல்பு நிலைக்கு கொண்டு வருவதும் நம் கடமையாகும்.’

 


குட்டீஸ்! தனிஷா சொன்னது சரிதானே! சரி குழந்தைகளே! இந்தக் கதை பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.



மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?


அன்புடன்


கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in