anuradha nazeer

Abstract

4.6  

anuradha nazeer

Abstract

சுதந்திர போராட்ட தியாகி

சுதந்திர போராட்ட தியாகி

2 mins
12.1K


சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த 45 வயதான ஒருவர், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பினார். இந்தநிலையில் அரசின் வேண்டுகோளை ஏற்று, அந்த நபர் தாமாக முன்வந்து ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.


சில நாட்கள் சிகிச்சை பிறகு அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.


இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி அவரது 95 வயதான தந்தைக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதந்திர போராட்ட தியாகியான அவர் சென்னை சென்டிரல் அருகே டீக்கடை நடத்தி வந்தார். அவர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், கொரோனா தொற்றுக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. பின்னர் முதியவர், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார்.


மறுநாளான 14-ந்தேதி இரவு முதியவரின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதியவரின் உடல், வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு மத சம்பிரதாயங்களின்படி இறுதி சடங்குகள் நடந்தன.


அதனைத்தொடர்ந்து கடந்த 15-ந்தேதி போலீசார் அனுமதியுடன் ராயப்பேட்டை மிர்சாகிப்பேட்டை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது உடல் புதைக்கப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


இந்தநிலையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் முதியோருக்கு எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனை முடிவும் தயாரானது. பரிசோதனையில் முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட முதியவரை சிகிச்சைக்காக அழைத்துச்செல்ல மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் வாசுதேவன், அலெக்ஸ்பாண்டி தலைமையிலான குழுவினர் சென்றனர்.


அப்போது தாங்கள் சிகிச்சைக்காக அழைத்து செல்ல வந்த முதியவர் இறந்துபோனதும், அவரது உடல் புதைக்கப்பட்டதும், இறுதிச் சடங்கில் உறவினர்கள் கலந்துகொண்ட தகவலும் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். முதியவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட விவரம் அறிந்ததும் அப்பகுதியில் உள்ள அனைவரும் பீதி அடைந்தனர்.


இதையடுத்து முதியவரின் மகன் மற்றும் பேரன் ஆகியோர் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் என 34 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


இதனைத்தொடர்ந்து வெளியாட்கள் உள்ளே நுழையாமலும், உள்ளே இருந்து வெளியே யாரும் செல்லாதிருக்கும் வகையிலும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சம்பந்தப்பட்ட வேதகிரி தெரு இரும்பு தடுப்புகள் கொண்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. புதுப்பேட்டை, எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் பல பகுதிகளில் சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. சிந்தாதிரிப்பேட்டைக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களும் முடக்கப்பட்டுள்ளன.


டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியிருந்தாலும் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை. ஆனால் அவரது தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று டெல்லியில் இருந்து திரும்பியவர் கொண்டு வந்த உடமைகளில் இருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


சம்பந்தப்பட்ட முதியவர் முன்பே ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரிக்கு நோய்த்தொற்று அறிகுறிகளுடன் வந்தபோது, அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து கண்காணிப்பில் வைத்திருக்கலாம். தேவையில்லாமல் இறப்பு நேர்ந்திருக்காது, தெருவை ‘சீல்’ வைக்கவேண்டிய நடவடிக்கையும் எடுத்திருக்க தேவையில்லை என்று முதியவரின் உறவினர் கள் குற்றம் சாட்டுகிறார்கள்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract