Arivazhagan Subbarayan

Others

5.0  

Arivazhagan Subbarayan

Others

இலக்கணப் பிழை

இலக்கணப் பிழை

5 mins
70



   நான் டாக்டர் பார்த்தசாரதி. சிட்டியில லீடிங் சைக்கியாட்ரிஸ்ட் நான்தான்னு என்னுடைய சைக்கியாட்ரிஸ்ட் நண்பர்களே கூறுவார்கள். நான் பெருமையடித்துக் கொள்வதாக எண்ணாதீர்கள். எனக்கும் கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நான் என்னைப்பற்றிக் கூறினால் தான் என் கதையின் கருத்துக்களுக்கு ஓர் அழுத்தம் கிடைக்கும் என்பதற்காகக் கூறவேண்டியிருக்கிறது!

   அன்றிரவு என் ஆலோசனை நேரம் முடிந்தபின், மனநல மருத்துவ மாத இதழுக்கு எழுத வேண்டிய ஒரு கட்டுரையை முடிப்பதற்காக நான் என் கிளினிக்கிலேயே தங்க முடிவு செய்தேன்.


என அஸிஸ்டெண்டுகளையும், செவிலியர்களையும் அனுப்பி விட்டுக் கதவை மூடும் போது, ஒரு இருபத்தெட்டு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அவசரமாக உள்ளே நுழைந்தான். பார்க்க ரொம்ப டீசண்டாக இருந்தான். படிப்பு வாசனை முகத்தில் வீசியது. அவன் கண்களின் கூர்மையை என்னால் தவிர்க்க இயலவில்லை.


  "சார், என் பெயர் வினோத், உங்களைப் பார்க்கத்தான் திருச்சியிலிருந்து வர்றேன். எனக்காக ஒரு பத்து நிமிடம் ஒதுக்க முடியுமா?"

 "சரி உள்ளே வாங்க!"

  உள்ளே வந்த அந்த இளைஞன்,

எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கெண்டான்.

  "சார், உங்களுடைய 'microglial inflammation in the cingulate gyrus and suicidal ideation' என்னும் article படித்திருக்கிறேன்!"


  "நீங்க டாக்டரா? இவ்வளவு மெடிக்கல் டெர்ம்ஸ் உங்களுக்குத் தெரியுது!"

  "இல்லை சார், நான் நிறையப் படிப்பேன்!"

  "சரி, என்ன உங்கள் பிரச்சினை? சொல்லுங்கள்!"

  "ஒரு மனிதன் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் அவனா? அல்லது அவனைச் சுற்றியுள்ள சூழ்நிலையா?"

  "ஏன் இந்தக் கேள்வி? உங்களுக்கு ஏதாவது பிரச்னையா?"

  "சும்மா தெரிந்து கொள்வதற்காகக் கேட்டேன் டாக்டர்!"


  "உங்களைப் பார்த்தால் நன்கு படித்த பண்புள்ளவர் போல் தெரிகிறது. இந்த நேரத்தில் ஒரு சைக்கியாட்ரிஸ்டிடம் வீண் பேச்சிற்காக வந்தவர் போல் தெரியவில்லை!"


   "நேற்று எனக்குத் தற்கொலை எண்ணம் வந்தது டாக்டர்! அதனால்தான் கேட்கிறேன், இந்த எண்ணத்திற்குக் காரணம் நானா என்னுடைய சூழ்நிலையா?"

  "உங்களுடைய மனநிலை மூன்று காரணங்களால் தீர்மானிக்கப் படுகிறது. உங்களது பரம்பரை ஒரு நாற்பது சதவீதம், நீங்கள் வளரும் சூழ்நிலை ஒரு இருபது சதவீதம், உங்களது எண்ணங்கள் மற்றும் நீங்கள் சூழ்நிலையை எதிர்நோக்கும் முறை இவை ஒரு நாற்பது சதவீதம்!"


  "என்னுடைய எண்ணங்கள் மற்றும் நான் சூழ்நிலையை எதிர் நோக்கும் முறையை நான் முழுத்திறனோடு பயன் படுத்தினாலும், என்னுடைய பரம்பரை மற்றும் வளர்ப்பு முறைகள் சரியில்லாமல் இருந்தால், நான் நாற்பது சதவீதம் மட்டுமே பெறுகிறேன்! அதனால் என் தற்கொலை எண்ணத்திலிருந்து தப்ப முடியாமல், நான் தோல்வியடைந்து விடுவேனா டாக்டர்?"


  "இதென்ன எக்ஸாமா நீங்கள் ஐம்பது சதவீதம் பெற்றால்தான் பாஸ் என்பதற்கு?"

  "ஒரு சதவீதம் உங்கள் திறனை உபயோகித்தாலே நீங்கள் தப்பி விடலாம்!"

  "பரம்பரையும், வளர்ந்த சூழ்நிலையும் நன்றாக இருந்து, அவன் சூழ்நிலையை எதிர்கொள்ளும் மனத்திறன் மட்டும் பாதிக்கப்பட்டாலும் அவன் அறுபது சதவீதம் தேர்ச்சியடைந்து விடுகிறானே! நீங்கள் சொல்வதன் படிப் பார்த்தால் ஒரு சதவீதம் இருந்தாலும் தப்பித்து விடலாமே! அப்படியும் ஏன் சிலர் தோற்று விடுகிறார்கள்?"


   "அது அவனுடைய distorted belief system அதாவது 'முறைதவறிய நம்பிக்கைகள் கட்டமைப்பின்' காரணமாக விளைந்திருக்கலாம்! மேலும் தாங்கமுடியாத உணர்வுகளின் வலி ஒருவனுடைய லாஜிக்கல் திங்க்கிங்கை சீர்குலைத்து விடும்!"

   "distorted belief system என்றால் என்ன சார்?"


  "உங்கள் பரம்பரை ஜீன்கள், நீங்கள் வளரும் சூழ்நிலை, சமூகம், நிகழ்வுகளுக்கு நீங்கள் புரியும் எதிர்வினை ஆகியவை உங்களுடைய நம்பிக்கைக் கட்டமைப்பைத் தீர்மானிக்கும். இவற்றில் சில தவறுகள் ஏற்படுவதுதான் முறைதவறிய நம்பிக்கைக் கட்டமைப்பு!"


  "புரியவில்லை டாக்டர்!"

  "உதாரணமாக, சாதாரண மனநிலையில் இருக்கும் போது, உங்கள் மேனேஜர் உங்களை 'உதவாக்கரை, இந்த வேலையைக் கூட உன்னால் முடிக்க முடியவில்லையா?' என்று திட்டினால், நீங்கள் சிறிது நேரம் வருத்தப் படுவீர்கள். பிறகு, உங்கள் மனநிலை சரியாகி விடும். ஆனால், நீங்கள் மனச்சோர்வில் இருந்தால், 'நாம் உண்மையிலேயே ஒரு உதவாக்கரையோ?' என்று உங்களை நீங்களே தவறாக எடைபோட்டு அதே நினைவில் உழன்று கொண்டிருப்பீர்கள்! இதற்கு முன் பல சமயங்களில் மேனேஜர் உங்களைப் பாராட்டியிருப்பார். அதை மறந்து விடுவீர்கள். இதுதான் முறை தவறிய எண்ணம்! ஒரு நிகழ்வை, அதனுடைய தன்மைக்கேற்றவாறு அந்தச் சமயத்தில் மட்டும் எதிர்வினையாற்றாமல், அந்த நிகழ்வைப் பொதுமைப்படுத்தி எதிர்வினையாற்றுவது. இது over generalization மற்றும் jumping into conclusion எனப்படும் முறை தவறிய எண்ணம்!"


  "வேறு வகையான முறைதவறிய எண்ணங்கள் உள்ளனவா சார்?"

   "நிறைய உண்டு. Cognitive behavioral therapy யின் போது எல்லாவகையான cognitive distortionகளும் அதாவது முறைதவறிய எண்ணங்களும் உங்களுக்குத் தெளிவாக்கப்படும்!"


   "அப்படியென்றால் மனச்சோர்வு முறைதவறிய எண்ணங்களுக்கும், அது உருவாக்கும் முறைதவறிய நம்பிக்கைக் கட்டமைப்பிற்கும் ஒரு முக்கியமான காரணமா டாக்டர்!"

   "கண்டிப்பாக!"


   "எனவே, மனச்சோர்வு தற்கொலைக்கு ஒரு காரணமா?"

   "தற்கொலை எண்ணங்களுககுப் பல காரணங்கள் உண்டு. மனச்சிதைவு, போதைப்பழக்கம், தீடீரென்று தோன்றும் நிகழ்வுகளின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாத மனநிலை, மனச் சோர்வு போன்றவை. மனச்சிதைவு, போதைப்பழக்கம் உள்ளவர்களை அவர்களின் உடனிருப்பவர்கள் எளிதில் கண்டு பிடித்துவிடலாம். ஆனால், மனச் சோர்வின் ஆரம்ப நிலைகளை ஒரு மனநல மருத்துவரால் மட்டுமே கண்டறிய முடியும். அது ஒரு செய்யுளில் இலக்கணப்பிழை போல! அதை அறிந்தவர்கள் மட்டுமே உணர முடியும்! அது தற்கொலை எண்ணத்திற்கு மிக மிக முக்கியமான காரணம்! அதற்கு சிகிச்சையளிப்பது மிக மிக அவசியம்!"

  "மனச் சோர்வு எதனால் வருகிறது டாக்டர்?"


  "முதலிலேயே கூறினேனே!40% உங்கள் பரம்பரை, 40% உங்கள் மனத்திறன் வளர்ச்சியின்மை, 20% நீங்கள் வளர்ந்த சூழ்நிலை! ஆனால், ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடும்! சரி, உங்கள் பிரச்னையைக் கூறுங்கள்!"


   "சொல்கிறேன் சார். முதன் முதலில் நான் ஷியாமளாவைப் பார்த்தது ஸ்ரீரங்கம் பெருமாள் சன்னதியில்தான். என் எதேச்சையான ஒரு பார்வைத் திருப்பத்தில் பளீரென்று என் விழிகளின் எல்லைக்குள் மின்னலடித்தாள்! என் பார்வையை அவளும் உணர்ந்திருக்க வேண்டும். எங்கள் இருவரின் கண்களும் சந்தித்த அந்தக் கண நேரத்தில், என் உள்ளே ஆயிரம் தாமரை மொட்டுக்கள் மலர்ந்து வாசம் வீசியது. என் நரம்புகள் ஒரு வீணையின் நரம்புகளாய் மாறி ஒரு இசைக் கச்சேரியை என்னுள் துவக்கியது. அவளின் பார்வைக் கதிர் வீச்சு மீண்டும் என்னைத் தாக்கியது. அவளின் புன்னகை தென்றலில் மிதந்து வந்து என்னைத் தொட்டது. என்னை நோக்கி வந்தாள். நான் காண்பது கனவா என்று என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். 

  "நீ...நீங்க வினோத் தானே!"


  என் வாய் உலர்ந்தது. நாக்கு குழறியது. ஒரு தேவதையே வந்து என்னிடம் பேசுவதென்றால்? கடவுளின் சன்னதியில் எது வேண்டுமானாலும் நடக்கும்! ஒரு வாறு சுதாரித்துக் கொண்டு, "ஆமாம். நீங்க?" என்றேன்.

  "டேய் வினோத், நான் ஷியாமாடா. உன்னோட ஸ்கூல் மேட். தரிசனம் முடிச்சிட்டு வெளியே நில்லு பேசலாம்!"


  அப்போதுதான் தெரிந்தது. என்னுடன் டென்த் வரை படித்த ஷியாமாவா இவள்! காலம் இவளை எவ்வளவு அழகாய்க் கவிதை வடித்திருக்கிறது. தரிசனம் முடித்து வெளியே வந்தாள். பேசினேம் பேசினோம் மணிக்கணக்கில் பேசினோம்! தினமும் சந்தித்தோம். சரியாக ஆறாவது மாதத்தில் எங்களுக்குள் காதலை உணர்ந்தோம். அடுத்த ஆறாவது மாதத்தில் எங்கள் காதல் ஆழத்தில் வேரூன்றிவிட்டது. ஷியாமா இல்லாவிட்டால் நான் இல்லை என்னும் அளவுக்கு என் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தாள் ஷியாமா! அவள் இல்லாத வாழ்க்ககையை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத நிலையில் நான் இருந்தபோது ஒருநாள் என்னிடம் வந்து,"சாரி வினோத், வீட்ல அப்பா ரொம்பக் கட்டாயப் படுத்துகிறார்கள்.


என்னை மன்னிச்சிடு!" என்று என் உள்ளத்தில் ஒரு ஈட்டியைச் செருகி விட்டுச் சென்று, அமெரிக்கவாழ் இளைஞன் ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு சென்றவாரம் ஸான் ஓஸி சென்றுவிட்டாள்! அதன்பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை! தூங்கமுடியவில்லை! இனி இவ்வுலகில் வாழ்ந்து என்ன பயன்? நான் ஏன் வாழவேண்டும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நேற்றுதான் டாக்டர் எனக்குத் தற்கொலை எண்ணம் தீவிரம் அடைந்தது!"

  "இது தாங்கிக் கொள்ள மிகவும் சிரமமான ஒரு நிகழ்வுதான். ஆனால், இதைவிடக் கொடுமையான மன உளைச்சல்கள் உலகில் யாருக்கும் நிகழ்ந்ததில்லை என்று நினைக்கிறாயா?"


  "என் மனம் முழுவதையும் வியாபித்திருந்த ஒன்று, என் எதிர்காலமாய் நான் நினைத்திருந்த ஒன்று என்னிடமிருந்து பறிக்கப்படும் போது என்னால் எவ்வாறு டாக்டர் தாங்கிக் கொள்ளமுடியும்?"


  "நீ ஹிட்லரின் கான்சென்ட்ரேஷன் கேம்ப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? நரகம்! அதை விடக் கொடுமையான சித்ரவதைகளை மனித இனம் அனுபவித்திருக்காது! அதிலும் மனிதர்கள் தன் பெற்றோர், உற்றார், மனைவி, காதலி எல்லோரையும் இழந்தும் வாழவில்லையா? ஏன் சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றின் பிறகும் அனைத்து உடைமைகள், உறவுகளை இழந்தபின் மனிதர்கள் வாழவில்லையா? காதல் முறிந்தபின் வாழ்வே இல்லை எனக் கருதுவது jumping into the conclusion என்ற ஒரு முறை தவறிய எண்ணம்! அதாவது cognitive distortion! என்று இப்போது உனக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!"


   "சிலருக்கு மன உறுதி அதிகம் டாக்டர்!"

   "அதற்காகத்தான் மனச்சோர்விற்கு சிகிச்சை அவசியம் என்கிறேன். இல்லாவிடின் அது தற்கொலையில் கூட முடியலாம்!"

  "அதற்கு என்னென்ன ட்ரீட்மெண்ட் கொடுப்பீர்கள் டாக்டர்?"

  "மருந்துகள், psychoanalysis, CBT எனப்படும் cognitive behavioral therapy போன்ற மருத்துவமுறைகள் உண்டு. நபருக்குத் தகுந்தாற்போல் வேறுபடும்!"

  "மனச்சோர்வு உள்ளது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது டாக்டர்?"

  "பசியின்மை, உறக்கமின்மை, எதிலும் விருப்பமின்மை, தன் உடலைச் சரிவரப் பராமரிக்காமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் நண்பர்களிடமோ, உற்றாரிடமோ ஏன் நம்மிடமோ தென்பட்டால் உடனே ஒரு மனநல மருத்துவரை நாடுவது மிக அவசியம்!"


  "தற்கொலை எண்ணம் ஒரு நபருக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் டாக்டர்?"

  "அந்த எண்ணம் வந்தால் முதலில் தனியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்! வீட்டில் உள்ளவர்களுக்கு உடனே தெரிவிக்க வேண்டும். அதன்பின் மனநல மருத்துவரை அணுக வேண்டும்!"


  "நான் முதலிலேயே உங்களைக் கன்சல்ட் பண்ணியிருக்கலாம் டாக்டர்!" அந்த இளைஞனின் முகத்தில் வேதனையும், விரக்தியும் தெரிந்தது!

  "இப்பொழுது வந்து விட்டீர்களே! இனி ட்ரீட்மெண்ட் ஆரம்பித்து விடலாம்!"

  "அது முடியாது டாக்டர்!"

  "ஏன்?" என்றேன் குழப்பமாக!

  "நான் நேற்றே தற்கொலை செய்துகொண்டேன் டாக்டர்!"

         


Rate this content
Log in