Arivazhagan Subbarayan

Others

5.0  

Arivazhagan Subbarayan

Others

இன்னா செய்தார் நிலை...!

இன்னா செய்தார் நிலை...!

8 mins
69



  கோயம்பேடு மார்க்கெட்டில், தும்பைப் பூவாய் நரைத்த தலையுடன், வெள்ளை வேஷ்டி. வெள்ளைச்சட்டையில் குனிந்து கடைக்காரரிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கிறாரே ஒரு பெரியவர்! அவரைப்பற்றியதுதான் இந்தக்கதை!


   "மொத்தம் எவ்வளவு ரூபா ஆச்சுங்க மூர்த்தி",  சிவசங்கரன் என்ற அந்தப் பெரியவர் கடைக்காரர் மூர்த்தியிடம் கேட்டார்.

  "பேரம் பேசாம சொல்ற விலையக் கொடுக்கறது நீங்க மட்டும்தான் சார்! மொத்தம் எழுபத்தஞ்சு ரூபா கொடுங்க!"

  "பேரம் பேசவே அவசியம் இல்லாமல் நீங்களும் சரியான விலையைத்தானே சொல்றீங்க!" 

  மூர்த்தியைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, பணத்தைக் கொடுத்துவிட்டு, பையைக் கையிலெடுத்தார்.

  மூர்த்தி சிறது தயங்கி,"சார், தப்பா நெனச்சுக்காதிங்க! அந்த ப்ளாட் விஷயம் என்னாச்சு சார்?"

  "நாமல்லாம் சாதாரண மனுஷங்க மூர்த்தி! நம்பளால அந்த ரவுடிய எதுத்து என்ன பண்ண முடியும்?"

  "நீங்க கவலைப்படாதீங்க சார்! நீங்க கும்பிடற அந்தப் பிள்ளையார் உங்கள நிச்சயம் கைவிட மாட்டார்!"

  " உங்கள மாதிரி நல்லவங்க சொல்றது அந்தப் பிளளையாருக்குக் கேக்கும்னு நம்பறேன் மூர்த்தி! சரி, லேட்டாயிடுச்சு, நான் வர்றேன்!"

   

  சிவசங்கரன் செக்ரெட்ரியேட்டில் முப்பது வருடங்கள் கிளார்க்காகக் குப்பை கொட்டி, சுத்தமான கைகளைக் கொண்டிருந்ததால், ரிடையர் ஆகும்போது வந்த பணத்தில் அவரால் சென்னை விலைவாசியில் அரை கிரவுண்டு நிலம் தான் வாங்கிப்போட முடிந்தது. அவருடைய பையன் எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு வந்து அங்கே ஒரு வீடு கட்டுவான் என்ற அவருடைய நினைப்பில் திடீரென்று மண் விழுந்தது. அந்த மண்ணை அள்ளிப் போட்டவன் பெல்ட் மணி!

 *****  


   பெல்ட் மணி வடசென்னையில் ஒரு தாதா, ரவுடி, பொறுக்கி என்ற அர்த்தம் வருமாறு எந்த வார்த்தை உங்களுக்கு நினைவிற்கு வருகிறதோ அதை நினைத்துக் கொள்ளுங்கள். 'நானும் ரவுடிதான்' பார்த்திபனை உருவத்தில் கொண்டிருந்தான். கட்டப் பஞ்சாயத்து, ஹெராயின் கடத்தல், கை கால் எடுத்தல், உயிரையே எடுத்தல் போன்ற தொழில்களை படு லாவகமாகச் செய்வதில் கில்லாடி.


ஒரு கொலையைச் செய்து முடித்தபின் கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சியை தன் நியூரான்களி்ல் தேக்காமல், உடனேயே குலோப்ஜாமூன் சாப்பிடும் ஒரு sociopath! சமீபத்தில் அவன் அமௌண்ட் பார்த்த செயல், சிவசங்கரன் வாங்கிப்போட்ட ப்ளாட்டை மிரட்டித் தன் வசப்படுத்தியது! இது மாதிரி ஒரு நூறு பேருடைய ப்ளாட்களை அபகரித்திருக்கிறான். தான் கொடுக்காத கடனுக்காக, அவரவர்களுடைய ப்ளாட்களை புரோ நோட்டில் எழுதி வாங்கியிருக்கிறான்.

எதிர்த்துக் கேள்வி கேட்டால் அவனுடைய கெட்ட குணம் கொடூரமாக வெளிப்பட்டு எதிரிலிருப்பவர்கள் காலியாகி விடுவார்கள். 

******


   சிவசங்கரன் வீட்டுக்கு வந்து, ஈஸிசேரில் சோர்வாக அமர்ந்தார். அவருடைய மனைவி பார்வதியம்மாள் அவரிடம் காஃபி டம்ளரைக் கொடுத்தார்.

 "ஏங்க, அந்த இன்ஸ்பெக்டரப் பார்த்தீங்களா?"

  "பார்க்காமலா இருப்பேன் பார்வதி? கவனிக்கிறேன்னு சொன்னார்"

   பார்வதியம்மாவின் உள்ளத்தில் ஒரு பெரிய கவலை அழுத்தமாக வந்து உடகார்ந்து கொண்டது. இந்தச் சமயத்தில், ஃபைனல் இயர் எஞ்ஜினியரிங் படிக்கும் அவர்கள் மகன் வினீத் வேறு ஊரில் இல்லை. புராஜெக்ட் விஷயமாக பெங்களூரு சென்றிருக்கிறான். அவனுக்கு விஷயம் தெரியாது. அப்போது வாசலில் நிழலாடியது!

  

 "யாருப்பா!"

   "அங்கிள், இது வினீத் வீடுதானே!"

   "ஆமாப்பா!"

   "அங்கிள், நான் விநாயக். வினீத்தோட கிளாஸ்மேட். நல்லாருக்கீங்களா?"

   "நல்லாருக்கேன்ப்பா! நான் உன்னப் பார்த்ததேயில்லையேப்பா?"

   "நான் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன் அங்கிள். எப்பவாவது தான் வருவேன். இதற்கு முன்னால் ஒரு தடவை வந்திருக்கேன் அங்கிள், நீங்க அப்ப ஊர்ல இல்லை!"

   அதற்குள் பார்வதியம்மாள் விநாயக்கிடம், காஃபி டம்ளரைக் கொடுத்து,"அடிக்கடி வந்துட்டுப்போங்க தம்பி. உன்னப் பார்த்தா நல்ல புள்ளயாத் தெரியுது!" 

   "தேங்க் யூ ஆன்ட்டி"


   "வினீத் பெங்களூரு போயிருக்கான்ப்பா"

   "தெரியும் ஆன்ட்டி. அவன் தான் சொன்னான். ஒரு மாதம் அவன் புராஜக்ட் விஷயமா போறதுனால, வீட்ல வந்து அடிக்கடி உங்களப் பாத்துக்கச் சொன்னான் ஆன்ட்டி"

   

பார்வதியம்மாளுக்குத் தன் மகனை நினைத்துப் பெருமையாக இருந்தது. புள்ளை தான் ஊரில் இல்லாவிட்டாலும் நண்பனை வட்டுப் பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறானே!


   "அங்கிள்,ஆன்ட்டி உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேண்டுமானால் சொல்லுங்கள். நான் ஹாஸ்டலில் தான் இருக்கிறேன். என் செல் நம்பரை நோட் பண்ணிக் கொள்ளுங்கள்" என்ற விநாயக் ஒரு துண்டுப் பேப்பரில் தன் நம்பரை எழுதிக் கொடுத்தான்.  


  அப்போது, அண்டர் வேருக்கு மேல் லுங்கியை மடித்துக்கட்டிய ஒரு மிருகம், திறந்த வீடாயிருந்ததால் உள்ளே நுழைந்தது. வாயைத் திறந்து வார்த்தைகளை உமிழ்ந்தது. 

  "யோவ் பெருசு. எப்ப பணத்தக் குடுத்துட்டு உன்னோட பத்திரத்த வாங்கிக்கப் போறே"


  "இப்படி அநியாயம் பண்றீங்களே! நல்லாயிருப்பீங்களா? நான் எங்க அவ்வளவு பணத்துக்குப் போவேன்?"

   "பெருசு, நான் நல்லாத்தான் இருக்கேன். இப்பக் கூட க்வாட்டர் அடிச்சிட்டு ஸ்டெடியாத்தான் இருக்கேன் பாரு!"

  "ஹலோ நீங்க யாரு? ஏன் இங்க வந்து கலாட்டா பண்றீங்க?" விநாயக் எழுந்து இருவருக்கும் இடையில் நுழைந்து அந்த லுங்கியை முறைத்தான். 


   "தம்பி! உன் வேலயப் பாத்துக்கிட்டுப் போ. இல்லாட்டி ரொம்பக் கஷ்டப் படுவே! பெருசு, சொல்லி வை!" என்று வாயிலிருந்த சிகரெட்டை வீட்டுக்குள்ளேயே கீழே போட்டு மிதித்துவிட்டு வெளியேறிப் போனான்.

   "அங்கிள் யார் இவங்க? உங்கள வந்து மெரட்டிட்டுப் போறாங்க?"

  "அதையேம்ப்பா கேக்கறே...."என்று ஆரம்பித்துக் கதை முழுவதையும் சொன்னார் சிவசங்கரன்.


   "அங்கிள் இது வினீத்திற்குத் தெரியுமா?"

   "தெரியாதுப்பா! அவன் வெளியூர்ல இருக்கறப்ப கலலைப் படுவான்னு சொல்லலை. நீயும் சொல்லிடாதே தம்பி!"

  "நான் சொல்ல மாட்டேன் அங்கிள். அவனுக்குத் தெரிஞ்சா ரொம்பக் கவலைப் படுவான். என்னென்ன டாக்குமென்ட்ஸ் அந்த ரவுடி கிட்ட இருக்கு அங்கிள்?"

  "ப்ளாட்டோட டாக்குமென்ட்டும், நான் கடன் வாங்கியதாக பொய்யான ஒரு புரோ நோட்டும்"

   "அங்கிள், நீங்க கலலைப்படாம நிம்மதியாக இருங்கள். நாளைக் கழிச்சு மறுநாள் மதியம் உங்க கைல டாக்குமென்ட்ஸ் இருக்கும்!"

  "தம்பி வேணாம்ப்பா! நீயும் என் மகன் மாதிரிதான். அந்த ரவுடிங்க ரொம்பப் பொல்லாதவனுங்க"

  "அங்கிள், நான் என்ன சின்னப் பையனா? நீங்க கவலைப் படாதீங்க! நான் பார்த்துக்கறேன்"

******


  அடுத்தநாள் காலை ஒன்பது மணி. விநாயக் பெல்ட் மணியின் வீட்டின் எதிர்வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருக்கிறான். அந்த வீட்டில் யாருமில்லாதது அவனுக்கு வசதியாக இருந்தது. அவனைச் சுற்றி, லேப் டாப், வீடியோ கேமரா மற்றும் 'தேனீ' போல ரிமோட் கன்ட்ரோலால் இயங்கும் சின்னச்சின்ன ட்ரோன்கள் சிதறிக்கிடந்தன. அந்த ட்ரோன்களின் வயிற்றுப் பகுதியில் சிரத்தையாக ஒரு திரவத்தை நிரப்பினான். பின், அதில் ஒரு சின்ன ஊசியையும், ஒரு மினி கேமராவையும் பொருத்தினான். அவன் எதிரேயிருந்த லேப்டாப்பில் மணியின் வீடு துல்லியமாகத் தெரிந்தது. அவனும், அவனுடைய அல்லக்கைகள் ஐந்து பேரும் வீட்டின் வெளியே யாரோ ஒரு அப்பாவியைப் போட்டு மிதித்துவிட்டு உள்ளே செல்வது தெரிந்தது.


   "ஓ.கே. இப்ப வேலையை ஆரம்பித்து விட வேண்டியதுதான்" விநாயக் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். தன் கையிலிருந்த செல்ஃபோனை டயல் செய்து, எதிர் முனையில் குரல் கேட்டு,

  "ஹலோ, எம்ரால்ட் ஹாஸ்பிடலா? இந்த அட்ரஸூக்கு உடனே ஆம்புலன்ஸ் அனுப்புங்க. ஒருத்தர் மயக்கம் போட்டு விழுந்திட்டார்" வெயிட் பண்ணி, ஆம்புலன்ஸ் சைரன் தொலைவில் கேட்டதும், அந்த ட்ரோன்களைப் பறக்கவிட்டான். அவை பெல்ட் மணியின் வீட்டிற்கு மேல் பறந்து ஆங்காங்கே உள்ள செடிகள், ஐன்னல் கம்பிகள், டேபிள், சேர் களி்ன் கால்களில் அமைதியாகப் போய் உட்கார்ந்தன. 


  எம்ரால்ட் ஹாஸ்பிடல் என்ற வாசகம் பக்கவாட்டில் எழுதப்பட்ட ஆம்புலன்ஸ் ஒன்று, பெல்ட் மணியின் வீட்டில் நின்றது. அதன் பின்பக்கக் கதவு திறந்து, ஒயிட் கோட் அணிந்து ஆறடி உயரத்தில் ஒரு உருவம் இறங்கியது. பறக்கும் இரண்டு ட்ரோன்களில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் zoom செய்து பார்த்து, டாக்டர். கணேஷ் என்ற பெயர் பார்த்து முகநூலில் அவரது மொபைல் நம்பர் கண்டுபிடித்து, எண்களை விரல்களால் தொட்டவுடன், எதிர் முனையில் குரல் கேட்டவுடன்,


  "ஹலோ, டாக்டர் கணேஷ்?"

  "எஸ். ஸ்பீக்கிங்! நீங்க?"

  "நான் யாருங்கறது இப்ப முக்கியமில்லை டாக்டர். நான் சொல்லப்போற விஷயம்தான் முக்கியம். இப்ப நீங்க இருக்கறது பெல்ட் மணிங்கற ரவுடி வீட்ல. அவனோட ரவுடித்தனத்தைக் காலிபண்ண என் ஸ்டைல்ல டீச் பண்ணப் போறேன். இப்ப கொஞ்ச நேரத்துல பெல்ட் மணி மயங்கி விழுவான். அவனுக்கு சக்சினைல் கோலின் அம்பது மில்லிகிராம் இன்ட்ரா வீனஸா குடுக்கப் போறேன்!" என்று சொல்லி விட்டு போனை கட் பண்ணினான்.


  எதிர் முனையி்ல் டாக்டர் கணேஷ்,"ஹலோ, ஹலோ" என்று எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக் கத்தி இறுதியில் செல்லைப் பாக்கெட்டில் வைத்தார்.

  அதே சமயத்தில் வீட்டின் உள்ளிருந்து பெல்ட்டின் ஒரு அல்லக்கை வெளியே ஓடிவந்து, டாக்டர் கணேஷையும் ஆம்புலன்ஸையும் புரியாமல் பார்த்து மலங்க மலங்க விழித்து, பின் சுதாரித்துக் கொண்டு,

 "டாக்டர், அண்ணன் மயக்கம் போட்டு விழந்துட்டாரு.


சீக்கிரம் வாங்க" என்று கதற, டாக்டரும் அசிஸ்டெண்ட்டுகளும் உள்ளே ஓடி பெல்ட் மணியின் முகத்தின் மேல் ஆக்சிஜன் மாஸ்க்கை வைத்து வென்டிலேட் செய்ய, சரியாக ஐந்து நிமிடத்தில் பெல்ட் மணி கண்ணைத் திறந்து தானாக மூச்சு விட ஆரம்பித்தான்!


   அந்தச் சமயத்தில் மீண்டும் டாக்டர் கணேஷின் செல்ஃபோன் கத்தியது.

   "டாக்டர், மறு படியும் நான்தான். பெல்ட் மணியின் இடது கையை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவனுடைய முழங்கையில் ஒரு டிஜிட்டல் ட்ரோன் ஒட்டிக்கொண்டிருக்கும் பாருங்கள். அதுல இருக்கிற வைப்ரேஷன் சென்ஸார், ஏதாவது அசைவு ஏற்பட்டாலோ, அதைத் தொட்டாலோ உடனே மறுபடியும் ஒரு ஐம்பது மில்லிகிராம் இன்ஜெக்ட் பண்ணிடும் டாக்டர்!


அப்புறம் உங்களுக்குத்தான் வேலை அதிகம். இந்த மாதிரி ட்ரோன்கள் அங்கிருக்கிற அல்லக்கைகள் அஞ்சு பேர் கையிலயும் ஒட்டியிருக்குக்கும் டாக்டர். அவனுங்களையும் அசைய வேண்டாம்னு சொல்லிடுங்க! அதுவும் இல்லாம ஒரு ஐம்பது ட்ரோன்களை வீடு பூராவும் பறக்க விட்டிருக்கிறேன் டாக்டர். எதையாவது தொட்ரப் போறானுங்க. சாரி டாக்டர், உங்கள ரொம்ப சிரமப்படுத்துறேன்" மறு முனையில் டாக்டர் பதில் பேசுமுன் ஃபோனைக் கட் செய்தான் விநாயக். 


  இங்கிருந்தபடியே, டாக்டர் எல்லோருக்கும் இன்ஸ்ட்ரக்சன் கொடுத்து முடித்ததைப் பார்த்தவுடன், தன்னுடைய செல்ஃபோனில் பெல்ட் மணியின் நம்பருக்குக் கால் செய்தான். மறு முனையில் பெல்ட் மணியின் குரல் பேயறைந்தாற் போல் கேட்டது!

  "அ...லோ யாயா...ரு?"


  "அண்ணே வணக்கம்! மூச்சு வுட முடியாம தெணறுன உங்க எக்ஸ்பீரியன்ஸ் எப்டிண்ணே இருந்துச்சு?"

  "டேய் டேய் யாயா..ர்..றா நீ?" என்று கேட்பதற்குள் மூச்சு வாங்கினான் பெல்ட் மணி.

  "டேய் பெல்ட் மச்சான் மொதல்ல ஒழுங்கா மூச்சு உடப் பழகிக்க. இல்லைன்னா மேல போய்டுவே! அதென்னடா பேரு பெல்ட் மணி? வேட்டி அவுந்து உளுந்துராம இருக்கறதுக்குப் பச்சக் கலர்ல பட்டையாக் கட்டுவியே! என்னடா கர்மம் அது? டீசண்டா இருந்து பழகுங்கடா!"


  மறுமுனையில் பெல்ட் ஆத்திரத்தில் மூச்சு வாங்குவது கேட்டது!

  "உனக்கு இப்ப என்னடா வேணும்?"

  "இப்ப கேட்டியே இது புத்திசாலித்தனமான கேள்வி! இப்ப என் ஃப்ரெண்ட் ஒருத்தன் அங்க வருவான். அவன்கிட்ட ஒன்னோட லாக்கர மட்டும் தெறந்து வுட்ரு. அவனுக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டு அவன் கௌம்பிடுவான்! என்ன சொல்றே!"

  "அதெல்லாம் முடியாதுடா. 'தில்' இருந்தா நேர்ல வாடா!"


  "மச்சி, என்ன குரல் எகிறுது? இன்னொரு டோஸ் போடவா? தண்ணிக்குள்ள மூச்சுட முடியாம சிக்கிக் கிட்டிருப்பியே! அது மாதிரி அமோகமா இருக்கும்! சரி மச்சி எனக்கு 'தில்' இல்லை! நீ மட்டும் நேர்மையாவா சம்பாரிச்சே? குறுக்கு வழிலதானே! சரி டைம் ஆகுது. டாக்டர் ஹாஸ்பிடலுக்குப் போய்ட்டாருன்னா, அப்றம் உன்னக் காப்பாத்தவே முடியாது! ஏதாவது ஏடாகூடம் பண்ணினா, அங்க சுத்திக்கிட்டிருக்கு பாரு ஏகப்பட்ட ட்ரோன்கள் அதுல ஒண்ணு பொட்டுன்னு போட்ரும். ரிமோட் எங்கைலதான் இருக்கு. இப்ப பாக்குறியா? ஒரு ட்ரோன் உன் மூக்கு மேல உக்காரும் பாரு!" என்று சொல்லிவிட்டு, துல்லியமாக பெல்ட் மணியின் மூக்கு நுனியில் உட்கார வைத்தான். பெல்ட் மணியின் முகம் பயத்தில் வெளிறிப் போயிருந்ததை லேப்டாப் ஸ்கிரீன் துல்லியமாய்க் காட்டியது!


  "சரிடா பெல்ட் மச்சான்! எப்பூடி நம்ம வித்தை"

  பெல்ட், நடுங்கும் குரலில் அதை "எடுத்துரு எடுத்துரு" என்று கெஞ்ச, விநாயக் அதை மீண்டும் பறக்க விட்டான். 

  "இன்னும் அஞ்சு நிமிஷத்துல என் ப்ரண்ட் அங்க வருவான். லாக்கரை உன் மனைவிகிட்ட சொல்லி திறந்து வை. அப்புறம் ஒரு பேப்பரில் உன் கட்டை விரல் ரேகையை வைக்கணும்!"

  "அது எதுக்கு!"

  "மச்சி, இப்ப நீ கேள்வி கேக்கற நிலைமைல இல்லை! பதில் சொல்லணும்னு அவசியமும் எனக்கில்லை. மூடிக்கிட்டு சொன்னத மட்டும் செய்! என்ன! சரியா அஞ்சு நிமிஷம்! யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ!"


  சொன்னவுடன், ஃபோனைக் கட் பண்ணிவிட்டு, ரிமோட்டையும், செல்லையும் தன்னுடைய ஜெர்கின் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, லேப்டாப்பை தன்னுடைய பேக்கில் போட்டுக் கொண்டு, படியிறங்கிக் கீழே வந்து, பைக்கின் நம்பர் ப்ளேட்களைப் பேப்பர் ஒட்டி மறைத்து, மேலேறி அமர்ந்து, ஸ்டார்ட் பண்ணி சரியாக ஐந்தாவது நிமிடத்தில் பெல்டின் முன் கொஞ்சம் கூடப் பதட்டமேயில்லாமல் நின்று, அவன் மனைவி லாக்கர் காட்டிய திசையில் நடந்து, திறந்திருந்த லாக்கரில் இருந்த அனைத்தையும் அள்ளி இன்னொரு பையில் போட்டுக்கொண்டு, வெளியே வந்து பெலட் மணியின் பெருவிரலில் மை தடவி தான் கொண்டு வந்த பேப்பரில் ரேகையைப் பதித்தபின் அவசரமேயில்லாமல் மெதுவே நடந்து பைக்கில் ஏறிச் சென்றான். 


  பதினைந்தாவது நிமிடத்தில் தன்னுடைய ரூமிற்கு வந்து செல்ஃபோன் எடுத்து டாக்டர் கணேஷின் நம்பரைத் தொட்டு, மறுமுனையில் குரல் கேட்டு, 

  "சாரி டாக்டர், உங்கள ரொம்ப சிரமப் படுத்திட்டேன். அந்த ட்ரோன்கள் இனிமேல் வேலை செய்யாது டாக்டர்! சாரி அகெய்ன் டாக்டர்!" சொன்னவுடன் மீண்டும் ஃபோனைக் கட் செய்தான். 


  பெல்ட் மணியின் லாக்கரில் இருந்த அனைத்தையும் தரையில் கொட்டினான். ரெண்டு கோடி ரூபா கேஷ், நாலு கிலோ தங்கம், ரெண்டுகிலோ மெத்தாம்ஃபடமைன், நிறைய டாக்குமெண்ட்ஸ்! அதில் சிவசங்கரன் வீட்டு டாக்குமென்ட்ஸை எடுத்துக் கொண்டு, அனைத்துப் புரோ நோட்டுக்களையும் கிழித்து க்ளோஸெட்டில் ஃப்ளஷ்அவுட் பண்ணினான்.


மீதி அனைத்தையும், ஒரு சூட்கேஸில் வைத்து, நேராக ஐஜி ஆஃபீஸ் சென்று, சர்வைலன்ஸ் கேமராவில் முகம் காட்டாது வெளியே உட்கார்ந்து, என்ட்ரன்ஸில் ஒரு சின்ன ட்ரோனை வெடிக்கச் செய்து திசை திருப்பி, ஏற்பட்ட களேபரத்தில் உள்ளே நுழைந்து சூட்கேஸைத் தவறவிட்டு வெளியே வந்து பைக் ஏறி ரூமிற்கு வந்து படுக்கையில் விழுந்து கொட்டாவி விட்டான். 


  அடுத்தநாள் காலை ஆறு மணிக்கே எழுந்து குளித்துவிட்டு சிவசங்கரன் வீடு சென்று கதவைத் தட்டி, கதவு திறக்கப்பட்டு

சிவசங்கரன் தலை தெரிந்ததும்,

  "குட்மார்னிங் அங்கிள்! இந்தாங்க உங்க ப்ளாட்டோட டாக்குமெண்ட். நீங்க கையெழுத்துப் போட்ட புரோ நோட்டைக் கிழிச்சுப் போட்டுட்டேன். சரி அங்கிள், எனக்கு வேலையிருக்கு! அப்றமா வர்றேன்!"


  சிவசங்கரன் மெய்மறந்து டாக்குமெண்டையே பார்த்துக் கொண்டிருந்தவர், திடீரென்று சுதாரித்தவராக,

  "தம்பி இருப்பா, காஃபி சாப்ட்டுப் போப்பா!" என்று முடிப்பதற்குள்,

  "இன்னொரு நாள் வர்றேன் அங்கிள்!" பைக் பறந்தது.


  சிவசங்கரன் மகிழ்ச்சியாக, வீட்டிற்குள் ஓடி,

  "பார்வதி, பார்வதி நம்ம டாக்குமெண்ட் கைக்கு வந்திருச்சு. அந்த விநாயக் தம்பிதான் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போச்சு!" என்று மகிழ்ச்சியிலும், நிம்மதியிலும் படபடத்தார். பார்வதியம்மாளையும் அவர் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ள, 

  "எல்லாம் நாம கும்பிடற அந்த விநாயகர் செயல்தான். இன்னிக்கு விநாயகர் சதுர்த்தி வேற! அந்தத் தம்பி பேரும் விநாயக்! என்ன ஆச்சரியம் பாருங்க!"

 சிவசங்கரன் முகத்தில் மீண்டும் கலக்கம் பார்த்து,

  "ஏன் மறுபடியும் ஒரு மாதிரி இருக்கீங்க?"


  "இல்ல, அந்த பெல்ட் மணி மறுபடியும் வந்து மெரட்டினா என்ன பண்றது?" என்று கேட்டவர் வெளியே வாசலில் நியூஸ் பேப்பர் போடும் பையன் பேப்பரை வீச, அதில் பெல்ட் மணியின் முகம் பார்த்து, அவசரமாக ஓடி எடுத்தார்.


  'பிரபல ரவுடி பெல்ட் மணி கைது' என்ற தலைப்பின் கீழ் உள்ள செய்தியில் அவர் கண்கள் ஓடியது. சென்னை,செப்13: வடசென்னையில் பிரபல தாதாவாக ரவுடித்தனங்கள் செய்து வந்த பெல்ட் மணியை இன்ஸ்பெக்டர் கணபதி கைது செய்தார். அவனுடன் அவனுடைய கூட்டாளிகள் ஐந்து பேரும் சேர்ந்து கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை ஐஜி ஆஃபீஸ் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சூட்கேஸில் பெல்ட் மணி பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய ஒரு டைரியும், இரண்டு கோடி ரூபாய் பணமும், தங்க பிஸ்கெட்டுகளும், போதைப் பொருளும், அவனுடைய விரல் ரேகை பதிந்த ஒப்புதல் வாக்குமூலமும் இருந்தன. இதன் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. பெலட் மணி மிரட்டிப் பறித்த டாக்குமெண்ட்களை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்க ஐஜி உத்தவிட்டுள்ளார். இது பற்றி மேலும் போலீசார் புலன் விசாரனை நடத்தி வருகின்றனர்.


  இந்தச் செய்தியை பார்வதியம்மாளும் கேட்கும் படி சத்தமாக சிவசங்கரன் படித்து முடிக்கவும், இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்! 

  வெளியே சத்தம் கேட்டது. 

  "அட நம்ம வினீத்துங்க!"

  "அம்மா, அப்பா நல்லாருக்கீங்களா?"

  "அது சரி நீ எப்டி இவ்வளவு சீக்கிரமா? நாளன்னிக்குத்தானே வர்றதா சொன்னே?" சிவசங்கரன் கேட்டார்.

  "புராஜெக்ட் வேலையெல்லாம் சீக்கிரம் முடிஞ்சிருச்சுப்பா! அதான் இன்னிக்கே வந்துட்டேன்!"

  "நல்லதாப் போச்சு! போய்க் குளிச்சிட்டு வா! ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்!"

  "அம்மா,என் ஃபிரண்ட் கோபால் வெளியே ஷூவைக் கழட்டிக்கிட்டு இருக்கான். அவனும் வரட்டும்!"

  கோபால் ஷூவைக் கழட்டிவிட்டு உள்ளே வந்தான்.

  "வாப்பா கோபால்! நீயும் ரெடியாய்ட்டு வா! சாப்பிடலாம்!" பார்வதியம்மாள் வாஞ்சையுடன் அழைத்தார்.


  "அங்கிள், ஆண்ட்டி முதல்ல நான் உங்க கிட்ட சாரி சொல்லணும். வினீத் பெங்களூரு போனப்ப உங்க ரெண்டு பேரையும் பாத்துக்கச் சொன்னான். எனக்கு உடம்பு சரியில்லாததுனால உங்கள வந்து பார்க்க முடியலை!"

 "வினீத், நீ கோபால் கிட்டதான் எங்களப் பார்த்துக்கச் சொன்னியா?" என்று பார்வதியம்மாள் கேட்க,


  "உனக்கு விநாயக்னு யாராவது ஃபிரண்ட் இருக்காரா?" என்று சிவசங்கரன் வினவ,

   "அப்பா, உங்களுக்குத்தான் என்னோட எல்லா ஃபிரண்ட்ஸையும் தெரியுமே! எனக்கு விநாயக்ங்கற பேர்ல எந்த ஃபிரண்டும் கிடையாது!" என்று வினீத் பதிலுரைக்க, சிவசங்கரனும் பார்வதியும் ஆச்சரியத்தில் ஒருவரையொருவர் பார்த்துவிட்டுப் பிறகு ஹாலில் இருந்த பிள்ளையார் சிலையைப் பார்த்தார்கள். பிள்ளையார் அவர்களைப் பார்த்து திடீரென்று புன்னகைத்தது போல் உணர்ந்தார்கள்!

     

  


Rate this content
Log in