DEENADAYALAN N

Classics

4  

DEENADAYALAN N

Classics

ஞாயம்தானா? – இருபது(missinguncles)

ஞாயம்தானா? – இருபது(missinguncles)

3 mins
295



அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


நினைவு படுத்தி சொல்லுங்கள். உங்கள் குடும்பத்தில், உங்கள் அம்மாவின் சொந்தங்கள் வழியாகவோ அல்லது அப்பாவின் சொந்தங்கள் வழியாகவோ யாரேனும் இளம் வயதில் காணாமல் போயிருக்கிறார்களா? அவர் உங்கள் மாமாவாக இருக்கலாம். அல்லது உங்கள் சித்தப்பாவாக இருக்கலாம். அவர் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். அல்லது ஒரு சிறு குற்றம் புரிந்து விட்டு பயத்தில் ஓடிப்போயிருக்கலாம். அல்லது குடும்பத்தாருடன் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டு போயிருக்கலாம். அல்லது ராணுவத்தில் சேருவதாக சொல்லிக் கொண்டு போனவர் அதன் பின் என்ன ஆனார் என்றே தெரியாமல் போயிருக்கலாம்.


1950-60களில், என் அம்மாவுடய அப்பா ரொம்ப நாள் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்ததாம். பின் சுமார் பத்து வருடம் கழித்து ‘ஜபல்பூரிலிருந்து’ ராணுவத்தினரால் ஒரு பெட்டி அனுப்பப் பட்டதாம். அதில் சில உடைகளும் எங்கள் தாத்தாவின் ‘அஸ்தி’யும் இருந்ததாம். அவர் குறித்து வைத்திருந்த விலாசம் சரியாக இருந்ததால் அவை இவர்களை பத்திரமாக வந்து அடைந்திருக்கிறது போலும். அஸ்தியை இங்கே பவானி ஆற்றில் கரைத்ததாக சொல்வார்கள். நான் அப்போது என் தாத்தாவை நினைத்துப் பார்ப்பேன். திருமணம் செய்து ஏழெட்டு குழந்தைகளையும் பெற்று வாழ்ந்தவர் இறக்கும் தருவாயில் என்ன நினைத்திருப்பார்? யாரை நினைத்திருப்பார்? என்ன மனநிலை இருந்திருக்கும்?


அதே போல் 1965-இல் என் மாமா ஒருவர் திடீரென்று எங்கள் வீட்டிற்கு வந்தார். சுமார் 30 வருடம் கழித்து எப்படியோ எங்கள் விலாசத்தை கண்டு பிடித்து வந்திருக்கிறார். நாங்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தோம். அவரைப் பற்றி என் அம்மா எங்களுக்கு சொல்லி இருந்தார். சிறிய வயதில் யாரிடமோ சண்டை போட்டுக் கொண்டு போய் விட்டதாக சொன்னார். சென்னையில் ஒரு சிறு வேலையில் இருந்தார். குடும்பம் குழந்தைகள் இருந்தனர். என்னை (சுமார் பன்னிரண்டு வயது சிறுவன்) அழைத்துக் கொண்டு அவருடய பால்யகால சினேகிதர் ஒருவரைப் பார்க்க போனார். அந்த சினேகிதரோ அப்போது பெரிய அரசியல் பிரமுகர். நல்ல பொறுப்பில் இருந்தவர். அவரைக் காண ஏகப்பட்ட பேர் வெளியில் காத்திருந்தனர். என்றாலும் அவர் இவரை சந்தித்து பேசினார். இவர், அவரை வா போ என்று உரிமையுடன் கத்திப் பேசி, மிகவும் பெருமை அடைந்தார். ஆனால் அவர் இவரிடம் மிகவும் அன்பாகவும் அமைதியாகவும் பேசி, தேனீர் வாங்கிக் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.

என் மனைவியின் மாமா ஒருவர் இது போலவே இளம் வயதிலேயே பிரிந்து போய் விட்டார். சில நாட்கள் கழித்து அவர் மும்பையில் கப்பலில் பணியில் இருப்பதாக தெரிய வந்ததாம். என் மனைவி சிறுமியாய் இருந்த போது அவரை பார்த்திருக்கிறார். எங்கள் திருமணத்திற்கு பின் பணி நிமித்தமாக மும்பை செல்ல நேர்ந்தது. அப்போது மனைவியும் உடன் வந்தார். அந்த மாமாவின் அரைகுறை விலாசம் ஒன்று கிடைத்தது. அதை வைத்துக் கொண்டு, பெரு முயற்சி செய்து அவரை மும்பையில் சந்தித்தோம். நாங்கள் சென்ற போது வெராண்டாவில், படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். “கோவையில் பிறந்து, இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டுப் பிரிந்து, எங்கெங்கோ சுற்றி, மும்பை அடைந்து, வேலையில் அமர்ந்து, மணம் புரிந்து, குழந்தைகள் பெற்று இப்படி இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறாரே! தம் கோவை உறவுகளை/நட்புகளை இழந்த ஏக்கம் இவருக்குள் இருக்காதா..?” என்று என் மனம் இவருக்காக ஏங்கியது அவரை மெதுவாக தட்டி எழுப்பினோம். சில வினாடிகள் உற்றுப் பார்த்தவர், என் மனைவியை அடையாளம் கண்டு கொண்டு, வியப்பிலும் மகிழ்ச்சியிலும் துள்ளிக் குதித்து விட்டார். அவருடய அந்த உணர்வு சொல்லி புரிய வைக்க முடியாதது. அவர் மனைவி (ஒரு மராட்டியப் பெண்மணி) இறந்து போய்விட்டிருந்தார். மூன்று மகன்கள் இருந்தனர். இருவருக்கு திருமணமாகியிருந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் பெருமை பொங்க எங்களை அழைத்துச் சென்று காண்பித்து மகிழ்ந்தார்.


அதே போல், அமெரிக்காவில், நியூயார்க் நகரில், நடந்து ஊர் சுற்றிப் பார்த்துக் கொண்டிந்தபோது நான் சந்தித்த ஒரு பெரியவரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. சுமார் அரையடி நீளத்திற்கு வெள்ளை வெளேர் நிறத்தில் தும்பை பூ போன்ற தாடி. செக்கச் சிவந்த முதிய முகம். அந்த முகத்திற்கு மேல் கருப்பு நிறத்தில் ஒரு தொப்பி. கையில் உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு புல்லாங்குழல். ஒரு காலை மடக்கி ஒரு காலை குத்துக் காலிட்டு அமர்ந்த நிலையில் இருந்தார். சுற்றுப் புறம் என்று ஒன்று இருப்பதையே கண்டு கொள்ளாமல் மெய் மறந்து புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருந்தார். . ‘ரெபோக்’ ஷூ, நீல நிற ஜீன்ஸ் பேண்ட். சாம்பல் நிறத்தில் ஆங்காங்கே கருப்பு திட்டுகளுடன் கூடிய ஒரு பெரிய ஜெர்கின் அணிந்திருந்தார். அவர் வாசித்த அந்த மெலிதான இசையில் கரைந்து வருவது சோகமா.. உருக்கமா.. இனிமையா..! அவரைப் பார்த்த போது எனக்கு தோன்றியது இதுதான்! இவரும் குடும்பத்தை விட்டு இளவயதிலேயே பிரிந்து வந்து விட்ட ஒரு அமெரிக்க மாமாகவோ அல்லது அமெரிக்க சித்தப்பாகவோ இருக்கக் கூடும்!

 


நம் எல்லோருடைய குடும்பங்களிலும், இத்தகைய, காணாமல் போன / காணாமல் போய் முப்பது நாற்பது வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்க நேர்ந்த, ஒரு நபர் இருக்கக் கூடும். இவர்களை ஏன் குடும்பத்தை விட்டுப் பிரித்து, தங்கள் பால்ய குடும்ப உறவுகள் / நட்புகளை இழக்கச் செய்து, பின் எங்கெங்கோ சுற்றி, எங்கோ யாருடனோ தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, வாழப் பணித்து விடுகிறான் இறைவன்!


நியாயம்தானா இறைவா?




Rate this content
Log in

Similar tamil story from Classics