anuradha nazeer

Inspirational

4.7  

anuradha nazeer

Inspirational

பீஷ்ம விரதம் part 1

பீஷ்ம விரதம் part 1

3 mins
18


இஷ்வாகு வம்சத்தில் மஹாபிஷன் என்று ஒரு ராஜா. அவன் 1000 அஸ்வமேத யாகமும், 100 வாஜபேய யாகமும் செய்து இந்திரபதம் அடைந்தான். ஒருநாள் அனைத்து தேவர்களுடன் மஹாபிஷனும் ப்ரம்மசபையில் கூடி இருந்த போது கங்கை மாதாவும் வந்திருந்தாள். திடீரென பெருங் காற்று வீச கங்கையின் மேலாடை சற்று விலக, அதைக் கண்டு மஹாபிஷன் கங்கையிடம் காதல் கொள்ள, கங்கையும் அவனை பிரியத்துடன் பார்த்தாள்.


இதைக் கண்ட ப்ரம்மன் அவர்களை பூமியில் பிறந்து சிற்றின்பங்களை அனுபவித்து, அதன் பின் புண்ணியங்களைச் செய்து பின் வாருங்கள் என்று சாபம் தந்தான்.   இது இப்படி இருக்க அஷ்ட வஸுக்களும் பூலோகத்தைச் சஞ்சாரம் செய்து வரும் பொழுது, அஷ்ட வஸுக்களில் ஒருவரான தியா என்பவர் தன் மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருக்கும் நந்தினி என்னும் காமதேனுவைக் கவர்ந்து சென்றார்.


நந்தினியைக் காணாத வசிஷ்டர், ஞான திருஷ்டியால் அறிந்து, தியாவை தெய்வத்தன்மை நீங்கி நீண்டநாள் மனிதனாக இருப்பாய் என்றும், தியாவிற்குத் துணை இருந்த மற்ற வஸுக்களை ஓர் ஆண்டு மனித ஜன்மம் எடுத்து, மீண்டும் தெய்வத்தன்மை அடைவீர்கள் என சாபம் தந்தார். சாபம் பெற்ற வஸுக்கள் கங்கைக் கரையில் வந்து கொண்டிருக்கும் போது, ப்ரம்ம லோகத்திலிருந்து சாபம் பெற்ற கங்கை எதிரே வர, "தாங்கள் சந்தனு மஹாராஜாவை மணந்து கொண்டு, எங்களை குழந்தைகளாகப் பெற்று, இந்த கங்கை நதியில் விடுவீர்களானால் நாங்கள் சாப விமோசனம் பெறுவோம் " என்று சொல்ல கங்கையும் சம்மதித்தாள்.   


ஒரு நாள் குரு வம்சத்து அரசனான ப்ரதீபன் கங்கை நதிக்கரையில் சூர்ய நமஸ்காரம் செய்யும் பொழுது, கங்கை ஒரு அழகான பெண் உருவம் கொண்டு அவனது வலது துடையில் உட்கார்ந்தாள். ப்ர்தீபன் "பெண்ணே! நீ யார்? என்று கேட்க, கங்கையும் தான் அவனை மணக்க விரும்புவதாகக் கூறினாள். உடனே அவர் சொன்னார் "அம்மா! வலதுடையில் அமரத்தக்கவர்கள் புத்ரன், புத்ரி, மருமகள் அல்லாவா? எனவே நீ என் மகனுக்கு மனைவி ஆவாய்" என்று சொன்னார். சாபம் பெற்ற மஹாபிஷன் இவருக்கு மகனாகப் பிறந்தார்.


அவர்தான் சந்தனு மஹாராஜா.   சந்தனு மஹாராஜா ஒரு நாள் கங்கைக் கரையின் பக்கம் வந்து கொண்டிருந்த போது, கங்கை ஒரு பெண் உருவில் உலாவிக் கொண்டிருந்தாள். அவள் அழகில் சந்தனு மயங்கினான். அவளைத் தன் மனைவி ஆகவேண்டும் என்றும் கேட்டான். கங்கையும் இவன் தான் அந்த மஹாபிஷன் என்று அறிந்து கொண்டாள். நான் சொல்லும் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டால் மணந்து கொள்கிறேன் என்றாள்.


1. நான் எந்த செயலைச் செய்தாலும், அது தீய செயலாக இருந்தாலும் அதற்குக் காரணம் கேட்கக் கூடாது. 2. என்னிடம் பிரியமில்லாத வார்த்தைகளை எப்பவும் பேசக் கூடாது. 3. என் செயலை எப்பொழுது நீ மறுக்கின்றாயோ அப்பொழுது உன்னை விட்டுப் பிரிந்து விடுவேன் என்றாள். அரசனும் சம்மதிக்க அவருடன் அரண்மனை சென்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். கங்கையும் கர்பவதி ஆகி முதல் புத்திரனைப் பெற்றதும் கங்கையில் விட்டாள். இப்படியாக ஏழு வஸுக்களையும் புத்திரர்களாகப் பெற்று கங்கையில் விட்டாள். சந்தனு மஹாராஜா வருத்தம் கொண்டார். தனது 7 பிள்ளைகளையும் ஜலத்தில் விட்டு விட்டாளே. இந்த 8 ஆவது குழந்தையையாவது நாம் எப்படியாது காப்பாற்ற வேண்டும் என்று சந்தனு மஹாராஜா நினைக்கும் பொழுது கங்கை நந்தினியை அபஹரித்த 8 வது வஸுவைப் பிள்ளையாகப் பெற்றாள்.


சந்தனூ மஹாராஜா கங்கையிடம் இந்தக் குழந்தையையாவது விட்டு விடு என்று வேண்டினார். கொடுத்த வாக்கினை மீறியதால் நான் உங்களைப் பிரியும் நேரம் வந்து விட்டது. அஷ்ட வஸுக்களுக்குச் சாப விமோசனம் தரவே நான் உங்களுக்குப் பத்தினி ஆனேன். நந்தினியைக் கவர்ந்த 8 ஆவ்து வஸுவே இந்தக் குழந்தை. தாயின்றி வளரும் பிள்ளை சுகம் பெற மாட்டான். இவன் தெய்வத்தன்மை கொண்டவன் என்பதை நீங்கள் அறியவேண்டும். இவனுக்கு கங்கேயன் என்று பெயர்.


அதனால் நானே இந்தக் குழந்தையை யௌவனம் வரை வளர்த்து மீண்டும் நீங்கள் இவ்வனத்திற்கு வரும் போது தருகிறேன் .அப்பொழுது என்னையும் நீங்கள் காணலாம் என்று சொல்லி கங்கை மறைந்து விட்டாள்.   சில காலம் சென்றது. சந்தனு மஹாராஜா வனத்திற்கு வேட்டை ஆடச் சென்றார். திடீரென கங்கையில் வெள்ளம் பெருக்கெடுப்பதையும் அதில் அதிரூப லாவண்யமான ஒரு சிறுவன் தனுஷை நாட்டி பாணங்களை விட்டு விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்டார்.. அவனை நீ யார்? என்று கேட்க அவன் பதில் கூறாமல் கங்கையில் மறைந்தான். சந்தனு தன் மகனையும் கங்கையையும் நினைத்தார். கங்கையும் உடனே தோன்றினாள்.


உங்கள் மகன் உங்கள் வம்சத்திற்குக் கீர்த்தியையும், அழியாத புகழையும் தர வல்லவன். இதோ காங்கேயனை உங்களிடம் ஒப்படைத்தேன் என்று சொல்லி கங்கை மறைந்தாள். காங்கேயனுக்கு இளவரசு பட்டம் கட்டி சந்தனு மகிழ்ச்சியுடன் இருந்தார்.   சில காலம் சென்றது. சந்தனு மஹாராஜா வேட்டையாட வனம் சென்றார். தெய்வாதீனமாக கங்கை கரை ஓரம் அடைந்தார். அங்கு சுகந்த பரிமள வாசனைக் காற்று வீசியது. இதுவரை அறியாத இந்த மணம் எங்கிருந்து வீசுகிறது? என அதன் வழியே சென்றபோது யமுனை நதிக் கரையில் ஒரு அழகிய பெண்ணைக் கண்டார். அவள் அழகில் மயங்கி "நீ யார்?" என வினவ, அவள் தான் வலைஞர் தாசனின் மகள் என்று சொன்னாள். சந்தனு மஹாராஜா அவளைத் தன் துணைவியாக வேண்டும் என்று கேட்க, அவளும் தன் தந்தை சம்மதித்தால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றாள்.


அந்த மீனவனும் தன் மகளுக்குப் பிறக்கும் பிள்ளை ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று சொல்ல, காங்கேயன் இருக்க இது எப்படி சாத்யம் என்று, அரண்மனை திரும்பி காதல் வயப்பட்டு மனச் சோர்வுடன் இருந்தார். தந்தையின் துயர் தீர்க்காத மகன் இருந்தும் பயன் இல்லை என்று, மந்திரி ப்ராதானிகள் மூலம் தந்தையின் துயருக்குக் காரணம் அறிந்து, சத்யவதியின் தந்தையை சந்தித்து, சத்யவதியின் பிள்ளைகளே ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்வார்கள் என்றும், தான் விவாஹம் செய்து கொள்வதில்லை என்னும் பீஷ்ம விரதத்தை அனுஷ்டித்தேன் என்றும் சத்யம் செய்து சத்யவதியை தந்தைக்கு மணம் செய்வித்தார். சந்தனுவிற்கு சத்யவதிக்கு முன் வ்யாஸர் பிறந்த செய்தி தெரியாது.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational