Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

அமிழ்தம் நீயடி

அமிழ்தம் நீயடி

2 mins
284


காலை நேரத் தென்றல்... கடற்கரையோர மணல்... பரந்து விரிந்த விசாலமான நிலம்... அரணாக பனை மரங்கள்! காதல் கணை தொடுக்கும் பட்சி இனங்கள்! பசுஞ்சோலையோ என பார்ப்பவர் மனதை மயக்கும் வனங்கள்! பாதாம் மா நாகலிங்கம் நாவல் வேம்பு புன்னை ஆலமரம் அரசமரம் சப்போட்டா... எனச் சொல்லி மாளாது! மெல்லிய கடற்காற்று மேனியைத் தீண்டும். மலர்களின் சுகந்தம் மனதை சீண்டும். கனிகளின் சுவை நாவினில் தேனூறும். 

பரந்த வனத்தின் நடுவே பள்ளி வளாகம்! இல்லையில்லை வருங்கால தலைவர்களை ... சமுதாயத் தூண்களை வடிக்கும் இடம்! செதுக்கும் ஸ்தலம்! பால் மணம் மாறாத வயது அங்கு தான் அவள் அறிமுகம் ஆனாள்!


அவளை நான் ஸ்பரிசித்து பார்த்ததில்லை! கண்ணால் ரசித்துக் கண்டதில்லை! ஆனால் ஏதோ ஒரு மோகம்! அவளை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற தாகம்! பிடித்து விட்டது! அவளை பற்றி பிறர் பேசுவதை ரசித்தேன்! அவளைப் பற்றி பற்றி மீண்டும் மீண்டும் பேச.... மெல்ல அவளோடு நெருங்கி நண்பர்கள் ஆனோம்! கலந்தோம்! கலந்தே கிடந்தோம்! 

காலம் கடந்தது! பருவ வயதினை அடைந்தேன்! மனங்கள் இணைந்தது! பருவக் கோளாறா? பாசக் கோளாறா? தெரியவில்லை! காதல் கொண்டேன்! அவளின் தளை அழகும்.. தொடை அழகும்..நடையழகும் என்னை மிகவும் கவர்ந்தது! எத்தனை வளங்களைக் கொண்டவள்! ஆயினும் பகடு இன்றி எளிமையானவள் என்னவள்! 


எத்தனை எத்தனை திசைகளிலிருந்து அவளோடு சங்கமித்தாலும் அவள் தன்மை குன்றாதவள்! ஏட்டிக்கு போட்டியாய் எத்தனை பேரழகிகள் இந்த புவியில் வந்து நின்றாலும்... அவள் அழகை மிஞ்சிட ஒருவரும் இல்லை! எத்தனை எத்தனை கோடி பேர் வஞ்சித்தாலும்.... விமர்சித்தாலும்  சிந்தை கலங்காதவள்! சந்தம் குறையாதவள்! 

இவள் மடியில் தான் பிறந்தேன்! இவள் பிடியில் தான் வளர்ந்தேன்! இவள் பாலைத் தான் பருகினேன்! இவளே தான் என் தாய் என்று சொல்லிக் கொள்ள நாணம் கொண்டோரும் உண்டு! ஆனால் எதற்கும் அலுக்காதவள்! எதற்கும் சளைக்காதவள் என் காதலி...! ஈராயிரம் ஆண்டுகளை கடந்து விட்ட போதிலும் இன்றும் இளமை குன்றாதவள் என் காதலி!


எனக்கோ நரை எய்தி விட்டது! ஆயினும் அவள் மேல் கொண்ட காதலுக்கு நரையில்லை! அவளோடு நான் கொண்ட காதலுக்கு குறைவில்லை! அவளைத் தான் நித்தம் ரசிக்கிறேன்! அவள் வளங்களை அள்ளி அள்ளி நிதமும் புசிக்கிறேன்! அவளையே தினம் தினம் பூஜிக்கிறேன்! ஆசை தீர்ந்தபாடில்லை! நான் காதல் கொண்ட போதும் ...மோதல் கொண்ட போதும்... நீயே வார்த்தைகளாய் வருகின்றாய்! நான் கவிதை தீட்டும் போது உன் உதவியின்றி முடிவதில்லை! என் உயிரிலும் என் உணர்விலும் கலந்தவள் நீ! என் மடியிலும் என் மார்பிலும் தவழ்ந்தவள் நீ! நீயின்றி நானில்லை! உன் அழகும் வளமும் என்னை கிறக்கம் கொள்ள வைக்குதடி! உறக்கம் கொள்ள தடையாய் நிக்குதடி! தமிழே! என் அமிழ்தே! நீயே என் பலம்... ! உன் புகழை ஏற்றிச் செல்ல தாங்காது கலம்! போற்றிச் சொல்ல நீங்காது நிலன்! 


Rate this content
Log in

Similar tamil story from Inspirational