SAIRENU

Inspirational

5  

SAIRENU

Inspirational

அங்கே நான்!

அங்கே நான்!

2 mins
496


"அம்மா, சீக்கிரம் டீ கொண்டு வா, ஹாஸ்பிடல் கிளம்பணும்" என்று குரல் கொடுத்தாள் சஜ்ஜனா.


"இப்போதான் வந்தே. அதுக்குள்ள கால்ல கஞ்சியைக் கொட்டிண்டு ஓடணுமா? இரேன் சித்தே! அபூர்வமா உன் அப்பாவும் சமர்த்தும்கூட இருக்கா. எல்லாரும் உட்கார்ந்து பேசி எத்தனை நாளாச்சு" என்று அங்கலாய்த்தாள் பார்கவி.


"அம்மா, கோவிட் மூன்றாம் அலை முடிஞ்சதும் எல்லோரும் உட்கார்ந்து பேசலாம். அதுவரைக்கும் எனக்கு உட்காரல்லாம் டைம் கிடையாது. உன் ஆசைப் பையன் இருக்கான்னு சொல்றியே, அவனோடு உட்கார்ந்து பேசிக்கோ" என்றாள் சஜ்ஜனா.


பார்கவி மௌனமானாள். அவளும் டாக்டர்தான். அவள் கணவனும் டாக்டர். தற்போது அவர்கள் க்ளினிக் இயங்கவில்லை. சஜ்ஜனா முன்பு மாலைகளில் அவர்களுடைய க்ளினிக்குக்கு வந்துகொண்டிருந்தவள் இப்போது அரசு ஆஸ்பத்திரியிலேயே கோவிட் வார்டில் முழுநேரமும் பணிபுரிகிறாள்.


பார்கவிக்குச் சஜ்ஜனா, சமர்த் இரட்டைக் குழந்தைகள். இரண்டுபேருமே சமர்த்துக் குழந்தைகள். நன்றாகப் படித்தார்கள். சஜ்ஜனா டாக்டர், சமர்த் லாயர். இரண்டுபேருமே சேவை மனப்பான்மை உடையவர்கள். இந்தக் கோவிட் காலத்திலோ சஜ்ஜனாவுக்கு இரவுபகல் தெரிவதில்லை. சமர்த் மட்டும் என்ன? கோவிட் நோயாளிகளுக்கு உணவு ஏற்பாடு செய்கிறான், அவசர நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்திருக்கிறான், யார் எப்போது அழைத்தாலும் சென்று உதவுகிறான்.


சஜ்ஜனா மிகக் கெட்டிக்காரியான, கைராசியான, கடின உழைப்புள்ள டாக்டர். இந்தச் சிறு வயதிலேயே பெரும்புகழ் பெற்றுவிட்டாள். சமர்த் துடிப்பான, சாமர்த்தியமான, சட்ட ஞானம் நிறைந்த, தர்மம் தவறாத வக்கீல். சஜ்ஜனா அளவு புகழ் பெறவில்லையாயினும் அவன் வட்டத்தில் அவன் பிரபலம்.


"கர்மாவுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறவன் அவன். கர்மாவின் கடுமையான தண்டனையான நோயிலிருந்து காப்பாற்றுவது நாங்கள்" என்பாள் சஜ்ஜனா வேடிக்கையாய். மிகவும் நல்லவள்தான், சமர்த் மீது அதிக அன்புள்ளவள்தான், என்றாலும் தான் டாக்டர் என்பதில் சஜ்ஜனாவுக்குச் சற்றுக் கர்வம் அதிகம். சமர்த் இதைக் கேட்டதும் புன்னகைப்பான். கோர்ட்டுக்கு வெளியே அவன் அதிகம் பேசி யாரும் கண்டதேயில்லை.


ஒருமுறைதான் அவன் பேசியிருக்கிறான். பார்கவியிடமும் அவன் அப்பாவிடமும்.


அவர்கள் இருவரும் ப்ளஸ் டூ முடிக்கும் தறுவாயில் அவர்கள் இருவருக்கும் அம்மை போட்டியது. அதனால் நினைத்த அளவு மதிப்பெண்கள் வரவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில்தான் இருவருக்கும் இடம் கிடைக்கும்போல் இருந்தது. அதுவும் அப்பா மிகவும் போராடிய பிறகு. இருவரும் மழலைக் காலத்திலிருந்து தாங்கள் கனவு கண்டது பலிக்கப் போகிறது, டாக்டருக்குப் படிக்கப் போகிறோம் என்று ஆனந்தத்தில் இருந்தார்கள்.


கல்லூரியில் சேர்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு அப்பாவுக்கு ஒரு தகவல் வந்தது. அந்தக் கல்லூரியில் ஒரு சீட் தான் காலி இருப்பதாகவும், அது அவர்களின் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த சமர்த்துக்குக் கொடுப்பதாகவும் கண்டிருந்தது. அன்றுதான் முதன்முறையாக சமர்த் தன் தாய்தந்தையரிடம் வாதாடினான், தனக்குக் கிடைத்த சீட்டை அவன் சஜ்ஜனாவுக்கு விட்டுக் கொடுத்துவிடுவதாக!


"நான் ஃபோர்கோ பண்ணிட்டா எனக்கு அடுத்த இடத்தில் இருக்கற சஜ்ஜுக்குச் சீட் கிடைச்சுடும். டாக்டராகிறது சஜ்ஜுவோட ஆசை, கனவு, லட்சியம்ப்பா! அது கிடைக்கலேன்னா அவ உடைஞ்சு போயிடுவா! அதுவும் எனக்குக் கிடைத்து அவளுக்குக் கிடைக்கலேன்னா, அந்தத் தோல்வியை அவ தாங்கவே மாட்டா!" என்று எடுத்துச் சொன்னான்.


"ஏண்டா, டாக்டராகிறது உனக்கு மட்டும் ஆசை, கனவு, லட்சியம் இல்லையா? நீ நல்ல மார்க் வாங்கி எடுத்த சீட்டை ஏண்டா விடணும்? அவ கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்குப் போயிடுவா! நம்ம க்ளினிக், நான் கட்ட நினைச்சிருக்கற நர்சிங் ஹோம் எல்லாம் நீ நடத்த வேண்டியது இல்லையா?"


தீப்பட்டாற்போல் துடித்தான் சமர்த். "கடைசியில் நீங்களும் ஆண்-பெண் வித்தியாசம் பார்க்கிறவர் தானா? நாளைக்கு உங்க சாம்ராஜ்யத்தை உங்க பெண்ணும் மாப்பிள்ளையும் ஆளட்டுமே! அதுதான் எனக்கும் சந்தோஷம்! என்னம்மா, 'பெண் வாழ, பிறந்தகம் வாழும்'னு எனக்குச் சின்ன வயசிலேர்ந்து பாடம் எடுப்பியே, இப்போ மௌனமா நிற்கறியே!"


கடைசியில் பெற்றோரைச் சம்மதிக்க வைத்துவிட்டான். சஜ்ஜனாவிடம் அவன் விட்டுக் கொடுத்ததைப் பற்றி மூச்சுவிடக் கூடாது என்று மிரட்டி வைத்திருக்கிறான்.


வாயிலுக்கு வந்த சஜ்ஜனா தனக்கு வந்திருந்த ஒரு கூரியர் தபாலை வாங்கிப் பிரித்தாள். பேரிடர் காலத்தில் அவள் செய்துவரும் சேவையைப் பாராட்டி அந்த ஆண்டிற்கான "தன்னிகரற்ற இளைஞர் விருது" அவளுக்கு வழங்கப்படுவதாக அது அறிவித்தது.


"கங்கிராஜுலேஷன்ஸ், சஜ்ஜு! யூ டிஸர்வ் இட்" என்று மனமாரப் பாராட்டினான் சமர்த்.


"தேங்க்ஸ் சமர்த்" என்றாள். அவளையும் அறியாமல் அவனை ஒருமுறை அணைத்துக் கொண்டாள். பிறகு காரில் ஏறுவதற்கு ஓடினாள்.


"இது உனக்குக் கிடைச்சிருக்கணும்" என்றாள் பார்கவி.


"இப்போ மட்டும் என்னம்மா? அங்கே மேடையில் அவள் உருவத்தில் நான்தான் அவார்ட் வாங்குவேன்" என்றான் சமர்த், வழக்கமான புன்னகையுடன்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational