Arivazhagan Subbarayan

Drama Romance Classics

4.3  

Arivazhagan Subbarayan

Drama Romance Classics

கதை

கதை

3 mins
401



"கைகள் தட்ட வரும் சத்தம்,

உதடுகள் குவிக்க விளையும் முத்தம்,

அன்பெனும் மழையில் நனைவோம் நித்தம்,

உண்மையால் மனம் பெறும் சுத்தம்" இந்தக் கவிதையை வினிதா என்னிடம் காட்டி,"எப்டியிருக்கு அருண்?" என்றாள். 

  முதல் வரியும், கடைசி வரியும் நடுவில் உள்ள இரண்டு வரிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தது. அதை நான் வினிதாவிடம் சொல்லமுடியுமா. வினிதா இருபத்து நான்கு வயது அழகுச்சிலை. காந்தக் கண்களில் அறிவுக் களை. லிப்ஸ்டிக் போடாமலேயே சிவந்த உதடுகள். இடுப்பு வரை புரளும் மிருதுவான கருமை நிறக் கேசம், அவளது வெண்மை நிறத்தில் வெண்ணையாய் வழுக்கும் சருமத்திற்கு மேலும் அழகூட்டியது.

   

வினிதாவுக்கு பரதநாட்டியம் வரும். ஓவியம் நன்கு வரும். கண்ட கண்ட புத்தகங்கள் படிப்பாள். ஸ்டீஃபன் கிங்கும் படிப்பாள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் படிப்பாள். "இதற்கெல்லாம் உனக்கு எவ்வாறு நேரம் கிடைக்கிறது?" என்று அவளிடமே ஒரு தடவை கேட்டேன்.

  "சுறு சுறுப்பு பாஸ்", என்றாள். பாஸ் என்றுதான் என்னை அழைப்பாள். நான் அவள் பாஸ் அன்று. லவ்வர். செல்லமாக அப்படி. 

   

கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் லவ்விக் கொண்டிருக்கிறோம். ஒரே காலேஜில் எம்.பி.ஏ. ஃபைனல் இயர். ஒரே காலேஜில் இருந்தாலும், ஆறு மாதங்களுக்கு முன் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தது கூடக் கிடையாது. நான் ஃபைனான்ஸ். அவள் ஹெச்.ஆர். முதன் முதலில் நாங்கள் மீட் பண்ணியதை சொல்லியே ஆக வேண்டும். 

   

எங்கள் முதல் சந்திப்பு நடந்தது ஒரு சினிமா தியேட்டரில்.

   

என் அருகே காலியாய் இருந்த ஒரே ஒரு சீட்டில் ஒரு தேவதை வந்து உட்காரும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

உட்கார்ந்தது.

அது என்னைப் பார்த்துப் புன்னகைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

புன்னகைத்தது!

என் உடம்பில் கொஞ்சமே கொஞ்சமாய் மின்சாரம் பாய்ந்தது. 

பதிலுக்கு நானும் புன்னகைத்தேன். 


நான் ஆர்டர் செய்திருந்த காஃபியும், பாப்கார்னும் என்னை நோக்கி வர, இடைவெளி இல்லாத காரணத்தால், அவள் மூலம் என்னிடம் வந்தது. 


"காஃபி மிகவும் சூடாக இருக்கிறது. பார்த்துக் குடியுங்கள்"

"தேங்க்யூ மிஸ்...."

"வினிதா" என்றாள். 

பக்கத்தில் ஒரு அழகுச் சிலையை வைத்துக் கொண்டு நான் மட்டும் எப்படி சாப்பிடுவது? 

"பாப்கார்ன் எடுத்துக் கொள்ளுங்கள்", என்றேன்.

தன் மென் விரல்களால் ஒரேயொரு பாப்கார்ன் எடுத்து, தன் அழகான உதடுகளுக்கிடையில் வைத்து உள் வாங்கிக் கொண்டதை நான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். 


"நீங்கள் என்ன குருவியா?", என்று உளறினேன்

"ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?"

"ஒரேயொரு பாப்கார்ன் மட்டும் எடுத்துக் கொள்கிறீர்களே! அதனால், கேட்டேன்", அசடு வழிந்தேன்.

"இல்லை, போதும்", என்று புன்னகைத்தாள்.


"நான் இப்போது இந்தக் காஃபியை சாப்பிடுவதா? வேண்டாமா? என்று யோசிக்கிறேன்", என்றேன்.

"ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்? சாப்பிடத்தானே வாங்கினீர்கள்!"

"அறிமுகம் இல்லாத நபர் அருகே இருந்தால், சங்கோஜப் படாமல் சாப்பிடலாம். அறிமுகம் ஆன நபரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு நான் மட்டும் எப்படி சாப்பிடுவது? நீங்கள் இன்னும் கொஞ்சம் பாப்கார்ன் எடுத்துக் கொண்டால் நான் நிம்மதியாக இந்த காஃபியைக் குடிக்க முடியும்"


"சரி, கொடுங்கள்", புன்னகையுடன் முன்னால் விழுந்த முடியைப் பின்புறம் ஒயிலாக ஒதுக்கி விட்டு, ஒரு பிடி எடுத்துக் கொண்டாள். அவள் புன்னகையில் மின்சாரம் இருந்தது.

"உங்களுக்கும் ஒரு காஃபி ஆர்டர் செய்யட்டுமா?"

"இப்பொழுது வேண்டாம்.ப்ளீஸ். இண்டர்வெல் டைமில் சாப்பிடுகிறேன். நான் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டேன். நீங்கள் தாராளமாகக் குடியுங்கள்!"


"தேங்க் யூ"

"அறிமுகம் ஆனவர்கள் என்று சொன்னீர்களே. உங்கள் பெயரைச் சொல்லவில்லை",அவளது குரலில் தேன் தடவியிருக்குமோ? பிரமித்தேன்.

"நான் அருண். கிங்ஸ்ல எம்.பி.ஏ. ஃபைனல் பண்றேன்,நீங்க?"

"மை காட்! நானும் அங்கதான் ஃபைனல் இயர்! நான் ஹெச். ஆர். நீங்க?"

"நான் ஃபைனான்ஸ்",எனக்குள்ளே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பிரவாகமாகப் பொங்கியது. கிளி கடைசியில் நம்ம காலேஜ் தானா?

"கடைசியில் நாம் இருவரும் ஒரே காலேஜ். ரொம்ப நெருங்கி விட்டோம்!",அவளின் இந்த வார்த்தைகளுக்கு என்னுடைய மனம் விதம் விதமாய் அர்த்தம் கற்பித்து மகிழ்ந்தது. 

நாங்கள் அன்று படம் பார்க்கவில்லை. காலேஜ் பற்றி, நண்பர்கள் பற்றி, புரொஃபஸர்கள் பற்றி நிறையப் பேசினோம். 


படம் முடிந்த பிறகு, தயங்கித் தயங்கி அவளிடம் கேட்டேன். 

"மிஸ் வினிதா, சங்கீதாஸில் இரவு உணவை முடித்து விட்டுச் செல்லலாமா?"

"வொய் நாட்?",என்றாள் சிறிதும் தயக்கமின்றி,"அப்புறம் மிஸ் எல்லாம் இனி வேண்டாம். ஜஸ்ட் வினிதா போதும்",என்று புன்னகைத்தாள். அவள் புன்னகைக்கும் போது என் நியூரான்களில் ஏன் மின்னல் பாய்கிறது? புரியவில்லை.

"ஓ.கே. நீங்களும் அருண் என்று மட்டும் கூப்பிடுங்கள்"

மீண்டும் புன்னகை. மீணடும் நியூரான் மின்னல் பாய்ச்சல்!


அன்றிலிருந்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக எங்கள் காதல் வளர ஆரம்பித்து விட்டது. வளர்ந்து, செடியாகி, இபாபொழுது விருட்சமாகி விட்டது. வினிதாவின் இதயத்தில் தான் இனிமேல் என் இரத்த ஓட்டம். வினிதாவின் அருகில் இருக்கும் போது என் மனதில் தேன். செவிக்கு அவள் குரல் சங்கீதம். என் கண்களுக்கு அவள் அழகு விருந்து. எப்பொழுது திருமணம் என்று ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் எங்கள் திருமணம் முடிந்து விட்டது!


பி.கு.: என்னா பாஸ் கதையில ஒரு ட்விஸ்ட்டும் இல்ல. அதுக்குள்ள கதை முடிஞ்சிருச்சின்னு பாக்கறீங்களா? திருமணம் தான் பாஸ் டிவிஸ்டு. அதுக்கப்புறம் ஆசையா லவ்வ முடியுமா? அடி வாங்கணும்ல!



Rate this content
Log in

Similar tamil story from Drama