Logesh Kanakaraj

Children Stories Drama

4.6  

Logesh Kanakaraj

Children Stories Drama

மிதிபடும் பூக்கள் 1

மிதிபடும் பூக்கள் 1

4 mins
506


அக்காவிற்கும் அவனுக்கும் எப்போதும் ஆகாது. அக்கா எப்பொழுதாவது தான் வருவாள் வீட்டிற்கு. அப்போதும் கூட சண்டையே இருவருக்குள் இருக்கும்.


அன்று அக்கா ஏதோ எழுதி கொண்டிருந்தாள் டைரியில். இவனுக்கு தோன்றியது எப்படியாவது அந்த டைரியில் இருப்பதை படித்து பார்க்க வேண்டுமென்று. அக்கா கிளம்பிவிட்டாள் விடுதிக்கு. ஆனால் டைரியை மறந்துவிட்டாள் அவள்.


அவன் டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தான். சிரித்து கொண்டே படிக்க ஆரம்பித்தான்... தனக்கு தெரிந்த தமிழில் ஏதோ எழுதியிருந்தாள் சாலினி.


" என் பெயர் சாலினி. நான் பிறந்தது இந்த வீட்டுல தான். எங்கம்மாவும் அப்பாவும் நிறைய படிச்சவங்க. இரண்டு பேருமே வேலைக்கு போறவங்க. என்ன கேட்டாலும் வாங்கி தருவாங்க. ஏனா நிறைய சம்பளம்.நிறைய பொம்மை வாங்கி குடுப்பாரு அப்பா. ஆனால் அந்த பொம்மைகள விட அம்மா அப்பாவவிட எனக்கு ரொம்ப பிடிச்சது எங்க வீட்டுல இருந்துச்சு. யாரும் இல்ல..என் தாத்தா பாட்டிதான்.


எங்கம்மா நான் பிறந்த பிறகு ஒரு மூனு மாசம் தான் மெடர்னிடி லீவ்ல இருந்தாங்க.அதுக்கு அப்புறம் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போய்ட்டாங்கன்ன எனக்கு எல்லாமே தாத்தா பாட்டிதான். பொம்மையெல்லாம் எனக்கு தேவைப்பட்டதே இல்ல. அவர்களே எம்முன்னாடி பொம்மையா மாறிடுவாங்க. அது ஒரு தனி சுகம். தாத்தா தலை மேல எடுத்து வச்சுக்குவாரு வானம் கூட கிட்ட தெரியும். பாட்டி ஆராரோ பாடினா ஐந்து நிமிடம்..தூங்கிருவேன். கூட விளையாட தம்பி வேணும்னு நினச்சிருக்கவே மாட்டேன்.ஏனா என்னோட பொழுது முழுக்கவும் என் தாத்தா பாட்டியே விளையாட்டு தோழர்களாய்,,


நல்லா போயிட்டு தான் இருந்துச்சு.எங்க பாட்டிக்கும் தாத்தாக்கும் அப்பப்ப உடம்பு சரியில்லாம போயிட்டு இருந்துச்சு. இருந்தாலும் என் கிட்ட விளையாட்டு குறையவே இல்ல.


கொஞ்ச நாள் கழிச்சு வீட்டுல அம்மாவும் அப்பாவும் சத்தமா பேசுறது கேட்கும். சத்தியமா புரியாது என்ன பேசுறாங்கனு. ஆனால் தாத்தா பாட்டி முகம் மட்டும் வாடி இருக்கும் அது மட்டும் எனக்கு நல்லா புரிஞ்சது. சில நேரம் சத்தம் வரும் போதெல்லாம் பாட்டி என்ன கொண்டு போய் பக்கத்து வீட்டுல விட்டுட்டு வந்துருவாங்க எனக்கு என்னன்னே புரியாது. கொஞ்ச நாள் இப்படியே போச்சு.


முதல் முதல் நான் அழுதது எனக்கு தெரிஞ்சு school க்கு போறப்ப. தாத்தா பாட்டியை விட்டு போகவே முடியல. நான் தான் அழுவேன் னு பார்த்தா தாத்தாவும் அழுதுட்டு இருப்பாரு.

என்னோட ஸ்கூல் பஸ் திரும்பி வரும் போது ரெண்டு பேரும் நிப்பாங்க. நான் இறங்கி ரெண்டு பேரோட கையும் பிடிச்சு கர்வமா நடந்துட்டு போவேன் பத்த பசங்கள பார்த்துட்டு.

கர்வம் தப்புனு நிஜமா எனக்கு தெரியாது அந்த வயசுல. அந்த தப்புக்கு தண்டனை கிடைக்கும் னு தெரியாது.


ஒரு நாள் நான் school வேன் விட்டு இறங்கினேன். அது தான் முதல் தடவை என் தாத்தாவும் பாட்டியும் நான் இறங்கறப்ப இல்ல. வீட்டு முன்னாடி ஒரு கார் நின்னுட்டு இருந்துச்சு. எங்க வீட்டுல அப்ப கார் இல்ல. எனக்கு ஒரே சந்தோசம். கார பார்த்த உடனே தாத்தா பாட்டி வரல அப்படிங்கற வருத்தம் எல்லாம் ஓடி போச்சு. தாத்தாவும் பாட்டியும் எங்கேயோ கிளம்பி ரெடியா நின்னுட்டு இருந்தாங்க. இரண்டு பெட்டி வெளியில இருந்துச்சு. தாத்தா என்ன வந்து எடுக்கவும் இல்ல. அப்படியே நின்னுட்டு இருந்தாரு. பாட்டியோ என்ன பார்க்காத மாதிரி நின்னுட்டு இருந்தாங்க. கார் ஸ்டார்ட் ஆச்சு. அப்பா முன்னாடி சீட்டுல ஏறிட்டாரு. தாத்தா பின்னாடி சீட்டுல உட்காந்தாச்சு. நான் அப்படியே பார்த்துகிட்டே இருந்தேன் தாத்தாவை. தாத்தா அழுகிறது மட்டும் தெரிஞ்சுது. பாட்டி திடீர்னு மடமட னு உள்ள போனாங்க. Show case ஓபன் பன்னி அங்கிருந்த என் போட்டோவ எடுத்துட்டு ஓடி வந்து கார்ல ஏறி கதவை சாத்திட்டாங்க. கார் கிளம்பிருச்சு. அம்மாவை பார்த்தேன். தாத்தாவும் பாட்டியும் ஹாஸ்டலுக்கு போராங்கடா அவங்களுக்கு இங்க இருக்க பிடிக்கல. என் கண்ணுக்கு தொடும் தூரம் வரை அந்த காரையே பார்த்துட்டு இருந்தேன். ..போன கார் திரும்பி வராதா னு,..கார் திரும்பி வரவே இல்லை. அப்பா மட்டும் வந்தார். நான் பொம்மைகள் எல்லாவற்றையும் எடுத்து போட்டு விளையாடி கொண்டிருந்தேன். இத்தனை பொம்மைகள் வீட்டுல இருக்கிறது எனக்கு அதுநாள் வரை தெரியாமலே போயிருச்சு.



அதுக்கு அப்புறம் என் தம்பி பிறந்தான். தம்பி பிறந்த உடனே எல்லோரும் அவனை தூக்கிகொஞ்சினாங்க. என் தாத்தா பாட்டி ஞாபகம் எனக்கு திரும்பவும் அப்பதா வந்தது. என் தாத்தா பாட்டி மட்டும் இருந்திருந்தா என்னதான் எடுத்து கொஞ்சியிருப்பாங்கனு தோனுச்சு.


கொஞ்ச நாள் போச்சு. தினமும் சத்தம் வீட்டுல. இப்ப திட்டு வாங்கறது நான்தான். நான் ரொம்ப அடம் நான் ரொம்ப குறும்பு னு அப்பாவும் அம்மாவும் திட்டிகிட்டே இருப்பாங்க. நான் என் பொம்மைகளை திட்டிக்கிட்டே அழுதுட்டு தூங்கிருவேன்.


கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் ஒரு கார் வந்துச்சு. தாத்தா பாட்டி வந்துருக்காங்களா னு எட்டி பார்த்தேன். யாரும் இல்ல. இப்ப ஒரு பெட்டி ரெடியா இருந்துச்சு. அம்மா சொன்னாங்க நீ ஹாஸ்டல்ல போய் நல்லா படிச்சு நல்லா வரனும் னு. எனக்கு அன்று அழுகை வரவில்லை. நானும் தாத்தா பாட்டி கிட்ட ஹாஸ்டலுக்கு போரனோ னு சந்தோசமா இருந்துச்சு.


அதுக்கு பிறகு ஹாஸ்டல் லைப். என் ஹாஸ்டல்ல சாப்பாடு நல்லாவே இருக்காது. தாத்தா பாட்டிக்கும் இப்படிதான் சாப்பாடு நல்லா இருக்காது னு நினைச்சுக்குவேன் சில நேரம்.


இடையில ஒரு தடவை தாத்தா பாட்டியை பார்க்க கூட்டிட்டு போனாங்க. அங்க நிறைய பாட்டி தாத்தா இருந்தாங்க. பாட்டி என்ன பார்த்த உடனே அழுதுட்டாங்க. தாத்தா என்ன எடுத்து அனைச்சிட்டாரு. ஒரு இரண்டு மணி நேரம் அவங்க கூடயே இருந்தேன். தம்பி அவங்க கிட்ட போகவே மாட்டன்னு சொல்லிட்டான். எனக்கு அன்று தெரியாது அது தான் என் தாத்தா பாட்டியை கடைசியாக பார்ப்பதென்று. அப்பா கிட்ட கேட்டேன் நான் அங்க ஹாஸ்டல்ல இருக்கிறதுக்கு இங்கேயே இருந்திடரேனு. அம்மா சொன்னாங்க இங்க என்ன சேத்திக்க மாட்டாங்கனு,,அதுக்கு நான் பாட்டி ஆகனும் னு சொன்னாங்க.,,


கொஞ்ச நாள் கழிச்சு லீவ்ல ஊருக்கு வந்தேன். தாத்தா பாட்டி போட்டோ மாட்டிருந்துச்சு.மாலை போட்டிருந்துச்சு. அங்கேயே நின்னு பார்த்தேன். ரூம் குள்ள ஓடி போனேன். பாத்ரூம் குள்ள போனேன். அரை மணி நேரம் வெளியில வரல. அழுதுட்டே இருந்தேன். பாத்ரூமில் வைத்திருந்த வாளியின் மீதெல்லாம் என் கோபத்தை காண்பித்தேன் அழுது கொண்டே...


அம்மா சொன்னாங்க நீ இனிமேல் ஹாஸ்டல்ல இருக்க தேவையில்லை,வீட்டிலேயே இருந்துக்கலாம் னு,.

நான் சொன்னேன் எனக்கு ஹாஸ்டல் தான் பிடிச்சிருக்கு வீடு பிடிக்கல என்று.


இப்போது அப்பா தன் காரை எடுத்தார். என்னோட பெட்டி பேக் ஆகியிருந்தது. கார் ஸ்டார்ட் ஆயிருச்சு. நிப்பாட்ட சொன்னேன். ஓடி போனேன். டேபிளை தள்ள முடியாமல் தள்ளினேன். மேல ஏறி தாத்தா பாட்டி போட்டோவை எடுத்து கொண்டு ஓடி போனேன். காருக்குள்ள சட்டுனு கதைவை சாத்திட்டு உட்கார்ந்தேன். எப்பவுமே சட்டுனு கதவ சாத்துனா திட்டுகிற அப்பா இன்று திட்டவில்லை. அப்பா முதன் முதலாக தலை குனிவதை பார்த்தேன். கார் ஸ்டார்ட் ஆனது.இம்முறை சந்தோசமாக கிளம்பினேன் ஹாஸ்டலுக்கு தாத்தா பாட்டியோடு..."


தம்பி படித்து முடிக்க முடிக்க "டேய் அக்கா போன்ல பேசனும்மா உங்கிட்ட". அவன் கண்கள் கலங்கியிருந்தன. போனை வாங்கினான். அக்கா ஏதோ பேசினாள். ஆனால் என்ன பேசினாள் என்பது இவனுக்கு புரியவில்லை..

தம்பி கேட்டான் " அக்கா அந்த தாத்தா பாட்டி போட்டோவ எனக்கும் ஒரு காப்பி போட்டு தரியா,,ப்ளீஸ்,...நான் பார்த்ததே இல்லை,,,"

போனை வைத்தான்.




Rate this content
Log in