sangeetha muthukrishnan

Drama

3.4  

sangeetha muthukrishnan

Drama

பிள்ளை மனம்! வெள்ளை குணம்!

பிள்ளை மனம்! வெள்ளை குணம்!

3 mins
11.9K


பானு தொலைக்காட்சியில் லயித்து இருந்த கணவனிடம் வந்து மெல்ல செருமினாள். ரகு கண்களை திருப்பி "சொல்லு என்ன விஷயம்? நீ செருமினாலே என்னவோ வில்லங்கம் இருக்குன்னு அர்த்தம்" என்றான் சிரித்துக்கொண்டே. பானு லேசாக அங்கலாய்த்து விட்டு "சரி! ஒன்றாம் வகுப்புல இருந்து நம்ம கண்ணன் போர்டிங் ஸ்கூல்க்கு போகட்டும். ஏற்காடுல இருக்குற உங்க சித்தப்பா கிட்ட இப்போவே சொல்லி வைங்க" என்றாள்.

ரகுவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "என்ன இது நிஜமா" என்று கேட்டு வெடுக்கென்று அவள் கைகளை கிள்ளினான் . அவள் "ஆ" என்று கத்தியதும் நிஜம்தான் என்றான் மீண்டும் குறுநகையோடு.

"விளையாட்ட்டு இல்லைங்க இது" என்றவளிடம் "என்னாச்சு தவம் இருந்து பெத்த புள்ளன்னு எங்கயும் கூட்டிகிட்டே சுத்துவ கண்காரூ மாதிரி. இப்போ என்னடானா ஏற்காடுல ஸ்கூல்ல விடலாம்னு சொல்லற"

பானு "ஆமாம்தான் நம்ம கிட்டயே வச்சுக்கிட்டா நல்லா இருக்கும்தான் ஆனா இங்க இருந்தா கெட்டுப்போய்டுவான். அதான்". 


"என்ன உளர்ரே அதெப்படி இங்க இருந்த கெட்டுப்போய்டுவான்னு சொல்லற?"

"உங்களுக்கு ஒன்னும் தெரியல. ரொம்ப அடம் பண்ணறான். கேட்டது கிடைக்கணும்னு கேவி அழறான். எப்போவும் மொபைல் கைலயே இருக்கு. ஏதேதோ விடியோக்கள் இருக்குது அதுல. எதிலுமே ஒரு கட்டுப்பாடு இல்ல இங்க அவனுக்கு. போன வாரம் ஒரு கெட்டவார்த்தை கூட சொன்னான். கோவத்துல ஒரு அடி கூட வச்சு எங்கடா கத்துகிட்டன்னு கேட்டா சினிமா பாட்டு ஒன்னு பாடறான். அதுல ஒரு வரிக்கு மூணு தடவை அந்த வார்த்தை வருது. அம்மா பாக்குற சீரியல் வில்லி மாதிரியே பேசி காட்ரான். அவன் வயசு பசங்க யாரும் தெருவுல இறங்கி விளையாடுறதில்ல. பீசா, பர்கர்ன்னு ஆசையா சாப்பிடறான். சத்து மாவு கஞ்சி குடுத்தா உள்ள இறங்க மாட்டேங்குது. இன்னும் எவ்வளவோ. நல்ல பழக்க வழக்கங்கள், விளையாட்டு, கலை எல்லாம் போர்டிங் ஸ்கூல்ல ஒரு நெறியோட கட்டுப்பாட்டோட சொல்லி தருவாங்க அதான்" என்று முடித்தாள்.

ரகு, "நீ சொல்லறது சரிதான். ஆனா இங்க இருந்தாலும் அவனை நல்ல குணங்களோடு வளர்க்கலாம் பானு."

" இங்க அவன் பார்க்கறது பழகுறது கேட்குறது எல்லாமே தப்பான ஏதோ ஒன்ன அவனுக்கு கத்து குடுக்குற மாதிரிதான் எனக்கு தோணுது"


 " அப்படி இல்லைமா. இன்றைய கால கட்டத்துல நம்ம வளர்ந்தப்ப இருந்த சூழல் திரும்ப வர வெக்குறது முடியாத காரியம். நாம கதை புத்தகங்கள் படிச்சோம். இப்போ அதுக்கும் அப்ளிகேஷன்ஸ் வந்திருச்சு. புத்தகங்களையும் மொபைல்லதான் வாசிக்குறோம். கெட்டது நிரம்ப இருக்குற சூழல்ல நல்லது எதுன்னு அவனுக்கு எடுத்து சொல்லற கடமை நமக்கு இருக்கு. வேற எதையும் விட நம்ம கிட்ட இருந்துதான் குழந்தைகள் நல்லது கெட்டது ரெண்டுமே கத்துக்கறாங்க. கவனம், கட்டுப்பாடு ரெண்டும் நமக்கு தான் தேவை" என்றான்

அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே வெளியே அம்மா என்ற சத்தம் கேட்டு எழுந்து சென்று பார்த்தாள் பானு. பக்கத்துக்கு வீட்டில் வேலை செய்யும் ஜெயா இடுப்பில் தன் மூன்று வயது மகளோடு நின்றிருந்தாள். "என்ன ஜெயா பக்கத்து வீட்ல எப்போவோ ஊருக்கு போய்ட்டாங்களே இன்னும் இந்த வைரஸ் பிரச்னை தீரும் வரைக்கும் வர மாட்டோம்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. நீ இந்த நேரத்துல வெளிய வர்ர. அங்கங்க போலீஸ் நின்னு விரட்டிக்கிட்டு இருக்காங்க. வீட்லயே இரு." என்றாள் பானு.

"அவங்க போனது தெரியும்மா, நாலு நாளா வெளிய வராமதான் இருந்தேன். மாசக்கடைசி கையில காசு இல்ல. வீட்ல சாமான் இல்ல. அதான் காசு ஏதேனும் இருந்தா கொஞ்சம் குடுங்கம்மா. சம்பளம் வந்ததும் திருப்பி குடுத்துட்றேன்" என்றாள். 


" சரி இரு. பிள்ளையை வேற தூக்கிட்டு வந்துருக்க. பக்கத்துல தான வீடு. அங்கேயே விளையாட விட்டு வந்து பாத்துருக்கலாம்ல யாரையாச்சும் பார்த்துக்க சொல்லிட்டு".

"யாரையும் நம்பி இப்போ குழந்தைகளை தானம்மா தனியா விட முடியறதில்லை" என்றாள் ஜெயா கண்களில் கவலையோடு. அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்தபோது நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வசிக்கிறோம் என்று தோன்றத்தான் செய்தது பானுவிற்கு.


மாமியாரிடம் சென்று ஜெயா வந்திருப்பதை சொன்ன போது. "காசு நெறய தராதம்மா. அவ திரும்ப குடுக்க கஷ்ட்டப்படுவா. தராம இருக்கவும் மாட்டா அவ. கொஞ்சம் பணமும்மளிகை காய்கறின்னு கொஞ்சமும் குடுத்துரு. எதுனா வேணும்னா வந்து வாங்கிக்க சொல்லு" என்றார்.


பானு குளிர்சாதன பெட்டியில் இருந்து காய்கறிகளையும், சில முக்கியமான மளிகை சாமான்களையும் எடுத்து பைகளில் போட்டு எடுத்து செல்லும் போது கண்ணன் தன் பொம்மைகளில் இரண்டை அந்த குழந்தையிடம் நீடிகொண்ண்டிருந்தான். கணவன் சொன்ன கடைசி வாக்கியம் இப்போது அவளுக்கு விளங்குவது போல் இருந்தது.


Rate this content
Log in

Similar tamil story from Drama