Karthik sai

Drama Classics

4.8  

Karthik sai

Drama Classics

வெல்லப்பணியாரம்

வெல்லப்பணியாரம்

9 mins
820



முதல் அத்தியாயம் 

900 வருடங்களுக்கு முன் - தொண்டை மண்டலம் - சோழ நாடு

சீரான ஓட்டத்துடன் கிழக்கிலிருந்து அந்த மலை உச்சிக்கு ஏறினான் பரஞ்சோதி. வானத்தில் சூரிய ஒளி பரவ இன்னும் ஒரு நாழிகை இருந்தது. மலை உச்சிக்கு ஏறியதும் தன் மூச்சை கவனித்தான். மெல்லியதாய் மேல் மூச்சு வாங்கியது. இன்னும் தனக்கு பயிற்சி வேண்டும் என தோன்றிற்று. மலை உச்சியில் ஒற்றை மரமாய் இருந்த அந்த வில்வ மரத்தை வணங்கி, அதன் கீழ் அமர்ந்து ருத்ரம் சொல்ல ஆரம்பித்தான் ஐயன் பரஞ்சோதி.


               திருச்சுரம்* என்று அந்த மலையையும் அது சார்ந்த சிற்றூரையும் அழைப்பார்கள். போன வருடம்தான் அங்கு திருச்சுரநாதருக்கு கற்றளி எழுப்பினார்கள். அந்த திருச்சுரநாதருக்கு தின கைங்கர்யம் பரஞ்சோதி கையினால்தான். கோவில் குடமுழுக்கிலிருந்து அவன்தான் அங்கு எல்லாம். இதோ இவன் அமர்ந்து ருத்ரம் சொல்லும் அந்த திருச்சுர மலையின் அடிவாரத்தில்தான் அந்தக் கோவில் இருக்கிறது.


              தினமும் பரஞ்சோதி மலை உச்சிக்கு விடியும் முன் வந்து அங்குள்ள ஒற்றை வில்வ மரத்திற்கடியில் அமர்ந்து ருத்ரம் சொல்வான். சில சமயம் தியானமும் பழகுவான். ஆனால் சில நொடிகளே அவனால் செயலின்றி எண்ணமின்றி அமர முடிந்தது. பின் வில்வ இலைகளை பறித்து மாலை தொடுத்து திருச்சுரநாதருக்குச் சூடி பூஜைகளை துவங்குவான்.


              இன்றும் அப்படித்தான். ருத்ரம் முடித்த பொழுதில் விடிய துவங்கி இருந்தது. பரஞ்சோதி மனதில் சிவனை தொழுது வில்வ இலைகளை பறிக்க ஆரம்பித்தான். நெடுநாளைய மூச்சு பயிற்சியின் பலனாய் அவன் உடம்பு மிருதுவாய் அதே சமயம் வலுவுடன் இருந்தது. இருபத்து நான்கு வயதுக்குரிய துடிப்பு இருந்தாலும், பரஞ்சோதி கொஞ்சம் மாறுபட்டவன். அவனுக்கு அந்த திருச்சுரநாதர்தான் எல்லாம். இந்த திருச்சுரத்தில் அவனை தனியே விட்டு அவன் பெற்றோர் சிவபதம் சேர்ந்து பதினெட்டு வருடங்கள் ஆகி விட்டன. தேவதானமாய்*** வழங்கப்பட்ட இந்த ஊரில் தேவதானமாய் இருப்பவன் பரஞ்சோதி.


வில்வங்களை பறித்து முடித்து மாலை தொடுக்க ஆரம்பித்தபோதுதான் அந்த சிறுவனை கவனித்தான். பத்து பன்னிரண்டு வயதிருக்கும். சில ஆடுகளை ஓட்டிக்கொண்டு அந்த மலை உச்சிக்கு அருகில் அலைந்தபடி இருந்தான். மாலை தொடுத்து கொண்டிருந்த பரஞ்சோதியை பார்த்து விட்டு சிறிது நேரம் அங்கேயே நின்று இருந்தான். பரஞ்சோதியும் அவனைப் பார்த்தான். விடியற்காலைகளில் மலை உச்சிக்கு யாரும் வருவதில்லை, அவனைத் தவிர. இச்சிறுவனும் பார்க்க புதியவனாய் இருந்தான். அங்கேயே நின்று கொண்டிருந்த சிறுவனை அழைத்தான். ஓடோடி வந்து பரஞ்சோதியை நமஸ்கரித்துவிட்டு கை கட்டி பணிவுடன் நின்றான் அச்சிறுவன். கையில் ஒரு குச்சியுடன் ஒடிசலான தேகத்துடன் இருந்தான். வெற்று மார்பில் ஒரு கருப்பு கயிறு, முழங்கால் வரை ஒரு துண்டு.


"யாரடா நீ" பரஞ்சோதி அவனைப் பார்த்து கேட்டான்.


என்ன பதில் சொல்வதென சிறிது திகைத்து, "மூக்கையன்" என்றான்.

சற்று சிரித்தபடி, "இதற்கு முன் உன்னை இவ்வூரில் கண்டதில்லையே, சந்தைக்கு வந்தாயா?" என்றான் பரஞ்சோதி. அன்று வெள்ளிக்கிழமை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருச்சுரத்தில் சந்தை நடக்கும். மலையடிவாரத்தில் சுரத்தூர் நாட்டிலிருந்தும், பக்கத்து நெடுங்குன்ற நாட்டிலிருந்தும் வியாபாரிகள் கடை பரப்புவார்கள். ஆடு, மாடு, கோழிகள் முதல் காய்கறி, மூலிகைகள், வெவ்வேறு உணவு பதார்த்தங்கள் என அந்த நாள் முழுவதும் வியாபாரம் நடக்கும். அதற்காக வந்திருப்பான் இச்சிறுவன் என நினைத்தான் பரஞ்சோதி. சிறுவனோ பதிலுக்கு இல்லை என்றான். 

பின் எங்கிருந்து வருகிறாய் என பார்வையாலேயே விசாரித்தான் பரஞ்சோதி. ஐம்பது அறுபது வீடுகளுள்ள அத்திருச்சுரத்தில் அவனுக்கு தெரியாமல் யாரும் வசிப்பதில்லை. சிறிது முழித்து விட்டு மூக்கையன் பேச ஆரம்பித்தான். "நானும் என் தாயும் நெடுங்குன்ற நாட்டிலிருக்கும் பெருங்குளத்து ஊரிலிருந்து வருகிறோம். தந்தை சிவபதம் சேர்ந்து ஆறு மாதங்களாயிற்று. திருச்சுரத்தில் ஏதேனும் வேலை கிடைக்குமா என்று இங்கு வந்தோம்.". பிறகு சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தான், "இதெல்லாம் எங்கள் ஆடுகள்தான். பெருங்குளத்து ஊரில் இருந்தால் என் தந்தை ஞாபகம் அதிகம் இருக்குமென்று இங்கே வந்தோம்."


       இதற்குள் பரஞ்சோதி மாலை தொடுத்து முடித்து விட்டிருந்தான். எழுந்தபடியே "அப்படியா சரி.மலையில் முட்கள் அதிகம். கவனம் கொள்." என்று கூறி கோவில் நோக்கி கீழே இறங்க ஆரம்பித்தான். மூக்கையனும் ஆடுகளை பார்க்கச்சென்றான். 


இரண்டாம் அத்தியாயம்


   பிறகு பரஞ்சோதி மூக்கையனை தினமும் காலை மலை உச்சியில் கண்டான். சில நேரம் பரஞ்சோதி ஏதேனும் விசாரிப்பான். சில சமயங்களில் வெறுமே சிரித்து விட்டு சென்று விடுவான். ஒரு சாயங்காலம் கோவில் அருகே ஒரு பெரியவர் சிவபதம் சேர்ந்துவிட, அவர் மனக்கேதம் தீரும் பொருட்டு ஒரு விளக்கேற்றி விட்டு கோவிலை நடை சாத்திவிட்டு வெளி வந்தான் ஐயன் பரஞ்சோதி. அன்று பௌர்ணமி. மலை உச்சியில் அமர்ந்து தியானம் பழகலாம் என்ற எண்ணத்துடன் நடக்க ஆரம்பித்தவனை எதிரே வந்த மூக்கையன் பார்த்துச் சிரித்தான். "ஐயன் எங்கே போகிறீர்கள்? மலைக்கா? "

"ஆமடா, நீயும் வருகிறாயா? "

மூக்கையன் வாயெல்லாம் பல்லாய் சரியென்று தலையாட்டினான். இருவரும் ஓட்டமும் நடையுமாய் உச்சிக்கு ஏறினார்கள். பௌர்ணமி நிலவும் சிறிது சிறிதாய் உச்சிக்கு ஏற ஆரம்பித்தது.


முழுச்சந்திரனை ரசிக்க வாகாய் அம்மலை உச்சியில் உள்ள ஓர் பாறையின் மேலமர்ந்து கொண்டார்கள். மூக்கையன் எதையோ யோசித்தபடி எழுந்து நின்றான். "என்னடா யோசனை? " என்று பரஞ்சோதி வினவ, "இந்த சுரத்தூர் நாட்டில் எத்தனை மலைகள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்" என்றான்.


"சுரம் என்றாலே மலைதான். பின் சுரத்தூர் நாட்டில் மலைகளின்றி வேறென்ன இருக்கும் "


"ஓ! சுரம் என்றால் மலையா? " என்றான் மூக்கையன் ஆச்சர்யத்துடன்.


"ஏனடா, பாடம் ஒன்றும் ஆகவில்லையோ உனக்கு?"


"இல்லை ஐயன், தந்தை சொல்லிக்கொண்டிருந்தார், என்னை பாடம் படிக்க அனுப்ப வேண்டுமென்று. அனால் அது நடப்பதற்குள்தான்..." சற்றே சோகம் நிரம்பியது மூக்கையனின் குரலில். அதை உணர்ந்த பரஞ்சோதி, அவனை "பாடம் இல்லையென்றாலும் நன்றாக எண்ணத் தெரிகிறதே" என்று பாராட்டினான்.


மறுபடியும் உற்சாகம் தொற்றிக்கொள்ள "அது என் அன்னை கற்பித்தது, ஆடுகளை மறந்து விடாமல் இருக்க! " என்று சிரித்தான். பரஞ்சோதிக்கு மூக்கையனின் வெள்ளந்தியான பேச்சு பிடித்தது. பிறகு சிறிது நேரம் ஏதும் பேசாமல் இருவரும் ஒளிர ஆரம்பித்திருந்த நிலவை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பரஞ்சோதி கேட்டான், "அதோ அந்த சாலைக்கு அப்பால் தெரியும் கூடாரங்களை பார்த்தாயா? அவை என்ன தெரியுமா? "


"தெரியாதே ஐயன்" எழுந்து அந்த கூடாரங்களை பார்த்தபடி சொன்னான்.


"அவை வழிப்போக்கர்கள் கூடாரம். காஞ்சிக்கும், தஞ்சைக்கும் செல்லும் வழிப்போக்கர்கள் இங்கே தங்கிச் செல்வதுண்டு. சாளுக்கியத்திலிருந்தும், பரதேசங்களிலிருந்தும் தெற்கு நோக்கிச் செல்வோர், இங்கே தங்கி பயணத்திற்கு தயார் செய்து கொண்டு கிளம்புவர். அவர்களுக்கு இந்த திருச்சுரநாதர்தான் வழித்தெய்வம்.


   அந்த கூடாரங்களுக்கு வடக்கே இன்னும் பெரியதாய் கூடாரங்கள் தெரிகிறதல்லவா.அவை இத்தரணி ஆளும் ஸ்ரீ ராஜ குலோத்துங்க சோழ மகாராஜாவின் போர்ப்படைகள் தங்குமிடம். இங்கே அவர்களுக்கு போர்ப்பயிற்சியும் பாடமும் சொல்லித்தரப்படுகின்றன. அனாவசியமாய் அப்பக்கம் செல்லாதே" எச்சரிக்கை மிகுந்த குரலில் சொன்னான் பரஞ்சோதி.


விழி விரிய கேட்டுக்கொண்டிருந்த மூக்கையன் "ஆம், அவர்கள் "சோழம், சோழம்" என்று கூவியபடியே காஞ்சி நோக்கி இச்சாலையில் போவதை எங்கள் பெருங்குளத்தூரில் பார்த்திருக்கிறேன்" 


"சரியாகத்தான் சொல்கிறாய். இச்சாலையின் பெயரே காஞ்சிப் பெருவழிச்சாலை தான். கிழக்கே திருவொற்றியூரில் இருந்து காஞ்சி வரை செல்லும் இப்பாதை படைகளுக்கும் வியாபாரிகளுக்கும் பேருதவியாய் இருக்கின்றது.


அது இருக்கட்டும், நீ பெரியவனானதும் என்னவாக போகிறாய்? படை வீரனா? வியாபாரியா?"


" அது வந்து ஐயன், வேறு ஒரு ஆசை" என்று தயங்கினான்.


"என்ன, என்ன சொல். "


"நான் இந்த சுரத்தூர் நாட்டை ஒரு நாள் ஆளவேண்டும். இந்த மக்களை நிர்வகிக்க வேண்டும்"


"அடேயப்பா. பெரிய ஆளடா நீ. சரி அவ்வாறு ஆனபின் நான் வந்து "ஐயா ஒரு உதவி" என்று கேட்டால் என்ன சொல்வாய்?" என்றான் பரஞ்சோதி சிரித்தபடி. பதிலுக்கு சிரித்தபடியே மூக்கையனும் "தங்களுக்கு நான் என செய்ய வேண்டும்" என்றான் அதிகாரமாக. இருவரும் உரக்கச் சிரித்தனர்.  

மூக்கையன் தொடர்ந்தான், "மீண்டும் மலைகளுக்கு வருவோம், சுரத்தூர் நாட்டில் இத்தனை மலைகள் இருந்தும், இந்த மலை மட்டும் ஏன் "திருச்சுரம்" ?" பரஞ்சோதி எழுந்து மூக்கையனின் கையைப் பிடித்து அந்த மலை உச்சியை சுற்றி வந்தான். " பார்த்தாயா, நாம் நிற்கும் இந்த மலையையும் சேர்த்து


இங்குள்ள நான்கு மலைகளும்தான் திருச்சுரம் என்று அழைக்கப்படுகின்றன. நான் மறை வேதங்கள் ஒவ்வொன்றும் மலைகளாயின என்பது ஐதீகம். வேதங்களை தோற்றுவித்த என் தெய்வம் சிவனை பிரம்மன் வந்து பூஜித்த தலமிது. அதனால்தான் திருச்சுரம். போதுமா?" பரஞ்சோதி முகத்தில் தன் சிவனை பற்றி தானே பேசமுடிந்த திருப்தி தென்பட்டது. கவனமாக கேட்டுக்கொண்டிருந்த மூக்கையன் ஏதோ யோசனையில் ஏதும் பேசாமல் இருந்தான்.     


"என்ன யோசனை?"


"ஒன்றுமில்லை ஐயன். எனக்கு வேறு தோன்றிற்று. அதை பற்றிய சிந்தனையில் இருந்து விட்டேன்"


"வேறா? என்ன அது? சொல்லு பார்ப்போம்!"


"ஐயன் தவறாக நினைக்கக்கூடாது. எனக்கு விளையாட்டாய் தோன்றியதை கூறுகிறேன். நான் நினைத்தேன், அதோ நமக்கு தென்கிழக்கே சிறியதாய் ஒரு மலை இருக்கிறதே, அது பார்க்க யானை படுத்திருப்பதுப்போல் இருக்கிறது. அது விநாயகர் அம்சம் கொண்ட மலை. இங்கிருந்து மேற்கே எங்கள் ஊரில் இருந்து வரும் வழியில் பச்சை மலை என்று ஒன்றை காட்டினார்கள். அங்கே பௌர்ணமிகளில் சாக்த வழிபாடு நடக்கிறது.அந்த மலை சக்தி ஸ்வரூபம்.   

அங்கிருந்து தெற்கே அரைகாத தூரத்தில் ஒரு சிறு குன்று தெரிகிறதல்லவா, அது வேல் கொண்ட குமரனின் அம்சம் கொண்ட மலை. அங்கே வந்த ஒரு மாமுனிவர் இதன் சிறப்பைக்கண்டு சொன்னவுடன் அங்கே குமரன் வழிபாடு நடக்கிறது. அதன் உச்சியில் வேல் வைத்து வழிபடுகிறார்கள்.

இதோ நம் பக்கத்தில் இருக்கும் இவ்விரு மலைகளும் எனக்கு த்வாரபாலகர்களான சிவகணங்களாய் தெரிகின்றன. முடிவாய் இதோ நாம் நின்று கொண்டிருக்கும் இம்மலைதான் பரமசிவன். தன் உச்சியில் ஒற்றையாய் வில்வம் தரித்து அருள்பாலிக்கும் தெய்வம். அன்று நான் தூரத்தில் சாலையில் இருந்து பார்த்தபோது ரிஷபாருடராய் தலையில் நிலவு சூடி, தன்னை சுற்றி சக்தி, பிள்ளையார், குமரன், சிவகணங்கள் என குடும்ப சகிதமாய் வாழும் அற்புதம் இந்த திருச்சுரநாதர் என தோன்றிற்று. இது தவறா ஐயனே? " என்று மூச்சு வாங்க முடித்தான் மூக்கையன்.


பரஞ்சோதி விக்கித்து நின்றான். அவனை அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. இத்துணை நாள் இங்கு வாழ்ந்தும், பூஜை செய்தும் இக்காட்சி தமக்கு புலப்படவில்லையே என்று வியந்தான். திரும்ப திரும்ப அவன் கை காட்டிய மலைகளை பார்த்தான். பௌர்ணமி நிலவொளியில் அவன் கூறியபடியே குடும்ப சகிதமாய் அங்கே வீற்றிருந்தார் சிவன். பரஞ்சோதிக்கு மயிர்க்கூச்செறிந்தது. பொங்கி வந்த அழுகையை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனந்தமாய் மூக்கையனை ஆரத்தழுவினான்.


"என்ன ஞானமடா உனக்கு! தெய்வத்துணை இன்றி இந்த காட்சி உனக்கு தெரிந்திருக்குமா? இத்துணை காலமாய் சிவலிங்கமாய் கோவிலுக்குள் பார்த்த சிவனின் பிரம்மாண்டத்தை நொடியில் உணர்த்தி விட்டாயடா, இச்சுரத்தூர் நாடுதான் எனக்கு கயிலாயம்" என்றெல்லாம் சொல்ல நினைத்து ஏதும் சொல்ல முடியாமல் உணர்ச்சிப்பிரவாகத்துடன் அவனைத் தழுவி நன்றி சொன்னான் பரஞ்சோதி.

மூக்கையனுக்கு ஒன்றும் புரியவில்லை. எதுவும் கேட்கவும் பயமாய் இருந்தது. "நேரமாயிற்று, அன்னை தேடுவாள்" என்று சொல்லி விட்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். நன்றியுடன் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் பரஞ்சோதி.


மூன்றாம் அத்தியாயம்


அன்று பிரதோஷம். அதிகாலை தன வழக்கப்படியே மலை உச்சிக்கு வந்தான் பரஞ்சோதி. இன்று மேல் மூச்சு வாங்கவில்லை. ருத்ரம் சொல்லக்கூடத் தோன்றவில்லை. வெறுமனே அமர்ந்தான். தன்னுள் ஆழ்ந்தான். கண் விழித்தபோது நன்றாக விடிந்திருந்தது. மனம் வெகு லேசாய் இருப்பது தெரிந்தது. மூக்கையனின் நினைவு வந்தது. அவன் மலைக்கு வரவில்லை. அவனைத்தேடி கோவிலுக்குச் சென்றான். வாசலில் வழக்கமான பெரிய புன்னகையுடன் நின்றிருந்தான் மூக்கையன். "வா, பூஜை பார்" என்று உள்ளே அழைத்துச் சென்றான். பாலும், தேனுமாய் சிவனை ஆராதித்த பிறகு தான் ஆசையாய் செய்த வெல்லப்பணியாரத்தை படைத்தான். ஒவ்வொரு பிரதோஷமும் சிவனுக்கு அவன் வெல்லப்பணியாரம் செய்து வழிபடுவது வழக்கம்.பூஜை முடித்து, மூக்கையனை உள்ளே அழைத்தான். பிள்ளை தயங்கினான்.கருவறையின் உள்ளே வர அவனுக்கு அனுமதி இல்லை. தயங்கி நின்ற அவனை கைப்பிடித்து அழைத்து வந்து வெல்லப்பணியாரம் தந்தான் பரஞ்சோதி. எப்பொழுதும் முதல் பிரசாதம் வாங்கும் மகாசபை தலைவர்களுள் ஒருவர் அதைப்பார்த்து பதறினார். பின் சினத்துடன் பிரசாதம் பெறாமல் வெளியேறினார்.


திருச்சுரம் என்ற அந்த ஊர் தேவதானமாய் சோழ ராஜ்ஜியத்தில் அளிக்கப்பட்ட இடம். அதாவது கடவுள் கைங்கரியத்திற்காக வழங்கப்பட்டதாகும். இதனை குறுநில மன்னர்கள் ஆள்வதில்லை, மகாசபை என்ற பெரியோர் சபை நிர்வகிக்கும். இந்த மகாசபையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு திருச்சுரம் கட்டுப்படும். இன்று அந்த மகாசபை பெரும் சினத்துடன் கூடியிருந்தது. காரணம் பரஞ்சோதி. அவன் செய்த தவறு, ஆடு மேய்க்கும் சிறுவனை கருவறைக்கு அழைத்துச் சென்று முதல் பிரசாதம் அளித்தது. இது மகாசபையை அவமதிக்கும் செயல் என்றனர். வேதம் படித்த ஐயன் பரஞ்சோதி இதை செய்யலாமா என்று கேள்வி கேட்டனர். ஊரின் நடுவே மகாசபையில் பரஞ்சோதி நிற்க வைக்கப்பட்டான்.

குற்றத்தை ஒப்புக்கொள்ள பரஞ்சோதி மறுத்தான், "ஒரு சிறுவனுக்கு வெல்லப்பணியாரம் கொடுத்ததற்கா இத்துணை பேர் ஒன்று கூடினீர்?"

மகாசபை பதில் கூறியது, "அவனை கருவறையின் உள்ளே அனுமதித்தது குற்றம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது"

"கருவறையில் க்ஷத்ரியர்களுக்கும் அனுமதி இல்லைதான். பின் ஏன் அன்று சோழர் படை தளபதியை அனுமதித்தீர்."


கூட்டம் பதறியது. "இவன் பஞ்சமரையா!" என்றார் முதல் பிரசாதம் பெறாது சென்ற தலைவர்.

பரஞ்சோதியோ "என் சிவன் அருள் புரிவதில் இந்த வித்தியாசங்கள் பார்ப்பதில்லை. எல்லாரும் ஒன்றுதான்" என்றான். அந்த பத்து வயது சிறுவனின் ஞானம் இவர்களுக்கு எங்கே வரப்போகிறது? சொன்னால் மட்டும் விளங்கிவிடுமா? இனி எந்த விளக்கமும் தர வேண்டாமென முடிவெடுத்தான்.

மகாசபை யோசித்தது.படைகளை, படைத்தளபதியை பற்றி இவ்வாறு அவதூறு பேசுவது ராஜநிந்தனை. ராஜ நிந்தனை செய்தது தெரிந்தால் சிறைவாசமோ சிரச்சேதமோ நிச்சயம். ஊருக்கும் தேவையற்ற கட்டுப்பாடுகள் வரும். மகாசபை பேச்சை வளர்க்க விரும்பாமல் கடைசியாய் கேட்டது "மன்னிப்பு கேட்கிறாயா?". பரஞ்சோதி சொன்னான் "தவறு செய்தவன்தான் மன்னிப்பு கேட்க வேண்டும், நானல்ல! "

மகாசபை பரஞ்சோதியை குற்றவாளி என்றது. அவனை ஊரிலிருந்து விலக்கியது. கோவிலுக்குள் இனி அனுமதி இல்லை என்றது. அச்சிறுவனின் குடும்பத்தை நெடுங்குன்ற நாட்டிற்கு திருப்பி அனுப்பியது.


பரஞ்சோதி மருகினான். இந்த அநீதியை அவன் மனம் ஏற்க மறுத்தது.கோவிலைப் பார்த்து கண்ணீர் உகுத்தான். தன் சிவனை மனதில் நினைத்தான். "இனி உன்னை பூஜிக்க வரக்கூடாதா? உன்னைப் பாடக்கூடாதா? உன்னைப் பாடக்கூடாதென்றால் பேசவும் கூடாது. பேசக்கூடாது என்றால் இந்நாக்கு எதற்கு?" கதிர் அறுக்கும் கத்தியை கூட்டத்திலுள்ள ஒருவனிடம் இருந்து எடுத்தான். தன் நாக்கை அறுத்தான். ஊரை விடுத்து மலையில் தஞ்சம் புகுந்தான்.


நான்காம் அத்தியாயம்


இன்று - சென்னை தமிழ் நாடு


"ஐயாவை பாக்கலாங்களா?" ஹரி அந்த வெள்ளை வேட்டி கும்பலைப் பார்த்து பொதுவாய் கேட்டான். ஹரிக்கு பதினொரு வயது. தன் அப்பாவுடன் அந்த கட்சி ஆபிஸின் வாசலில் நின்றிருந்தான். இதோடு இவர்கள் இருவரும் இங்கு வருவது எத்தனை முறையோ தெரியாது. ஆனாலும் ஐயாவைப் பார்க்க முடியவில்லை. அவர்கள் பார்க்க நினைக்கும் ஐயா எம்.எல்.ஏ கண்ணையன். பல்லாவரம் அவரது தொகுதி. அது மட்டுமல்ல இருபத்தியெட்டு வயதில் தன் உண்மையான உழைப்பால் பதவிக்கு வந்த இளைஞர்.


      யாரும் கவனிக்காததால் ஹரி திரும்பவும் கேட்டான், "ஐயா இல்லிங்களா?" இப்பொழுது ஒரு வெள்ளை வேட்டி பதில் சொல்ல வந்தார். "நீங்க யாரு?" "இவர் என் அப்பா. இவரோட வேலைக்காக ஐயாவ பாக்கணுங்க" என்றான் ஹரி. "ஏன் இத உங்க அப்பா சொல்ல மாட்டாரா?" ஹரியின் அப்பாவை பார்த்தபடியே கேட்டார் வெள்ளை வேட்டி. ஹரி லேசான பதற்றத்துடன் "இல்லீங்க, அவருக்கு பேச்சு வராது, பிறவி ஊமை".

 "அடடா..சரி சரி ஐயா இப்பதான் திரிசூலம் வரைக்கும் போயிருக்காரு. அங்க போய் கேட்டுப்பாருங்க"


ஹரியும் அவன் அப்பாவும் கைகூப்பி நன்றி சொல்லி கிளம்பினர். திரிசூலம் மலையடிவாரத்தில் உள்ள இரயில் நிலையத்தில் திறக்கப்படபோகும் சுரங்கப்பாதையை பார்வையிட்டு விசாரித்துக்கொண்டிருந்தார் எம்.எல்.ஏ கண்ணையன். ஹரிக்கும் அவன் அப்பாவுக்கும் அவரை நெருங்கவே நேரம் பிடித்தது. நெருங்கியபோது கண்ணையன் கிளம்ப ஆயத்தமானார். கூட்டம் நெருக்க ஆரம்பித்தது. கூட்டத்தில் யாரோ இடறி விட தடுக்கி கண்ணையனின் காலில் விழுந்தான் ஹரி. "தம்பி, எழுந்திரு. ஏன் இப்படி வந்து விழற?" அவனை தூக்கி விட்டபடியே கேட்டார்.


கீழே விழுந்தாலும் வந்த விஷயத்தை கடகடவென சொல்ல ஆரம்பித்தான் "இவர் என் அப்பாங்க. பிறவி ஊமை. இவருக்கு திரிசூலநாதர் கோயில்ல சாஸ்த்ரிகள் வேலைக்கு உங்ககிட்ட கேக்கலாம்னு வந்தோம்" கூட்டத்தை சற்று விலக்கியபடி முன்னால் வந்தார் ஹரியின் அப்பா. கண்ணையனை பார்த்து வணக்கம் சொன்னார். கண்ணையன் அவரை பார்த்தபடியே "ஆமா அங்க ஐயர் வேணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களே. ஆனா, இவர் எப்படி உரக்க மந்திரம் சொல்வாரு?


"ஐயா, அப்பா வேதம் படிச்சிருக்காருங்க. பரம்பரையா கோயில்லதான் வேலை. எல்லா விதமான பூஜையும் ஆத்மார்த்தமா பண்ணுவாருங்க. இந்த வேலை கெடச்சாதான் நானும் ஸ்கூலுக்கு போக முடியும். கொஞ்சம் பாத்து செய்யுங்க ஐயா" 

சற்று நேரம் யோசித்தார். "சரி தம்பி, அப்பாவ அழைச்சுக்கிட்டு நேரா கோயிலுக்கு வா. நான் அங்கதான் போறேன்" என்றபடி காரில் கிளம்பினார். அப்பாவும் மகனும் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்தனர் நம்பிக்கையுடன்.

 அவர்கள் போய் சேர்ந்த போது கோயில் வாசலில் தன் சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்தார் கண்ணையன். ஹரி அருகே சென்று தயங்கியபடி "ஐயா" என்றான். "வாப்பா, உள்ள பேசிட்டேன். உங்க அப்பாவ நல்ல நாள் பாத்து கோயில்ல சேர்ந்துக்க சொல்லு" திரும்பி அவன் அப்பாவை பார்த்து "ஐயரே பார்த்து பதமா செய்யுங்க. அந்த காலத்து கோயில், பழைய சிலைங்க கவனம்"

ஹரிக்கு கண்ணில் நீர் முட்டிற்று. இதற்குத்தானே இத்தனை நடை. இத்தனை நாள் முயற்சி. இன்று ஏதோ வெகு சுலபமாய் முடிந்ததாய் தோன்றியது. அப்பா ஏதோ சைகையில் சொன்னார். ஹரி கண்ணையனிடம் "இன்று பிரதோஷம். இன்றே தொடங்கலாமானு கேக்கறாருங்க"

கண்ணையன் அவரை பார்த்து சிரித்தபடி "சரி சரி நல்லா செய்யுங்க. நான் அப்புறம் வரேன்" கார் நோக்கி நடக்க தொடங்கினார்.

ஹரியின் அப்பா அந்த கோயிலின் உள்ளே நுழைந்த போது ஒரு பல்லி கத்திற்று. தூரத்தில் சென்று கொண்டிருந்த கண்ணையனை நன்றியோடு பார்த்தார். சட்டென்று ஏதோ தோன்ற ஹரியை அழைத்து ஒரு தூக்குச்சட்டியை குடுத்து அனுப்பினார். ஹரி பரபரக்க ஓடி கண்ணையன் காரில் அமரும் சமயம் அதை நீட்டினான் "என்னப்பா அது?"


"அப்பா தரச்சொன்னாருங்க. வீட்ல பிரதோஷத்துக்கு படைச்ச சிவன் பிரசாதம், வெல்லப்பணியாரம்"



Rate this content
Log in

Similar tamil story from Drama