Arun Andiselvam

Drama Inspirational

4.5  

Arun Andiselvam

Drama Inspirational

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

8 mins
283


மகிழனுக்கு எல்லா நாளும் போல் அன்றில்லை. அவன் இந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து போன மாதத்தோடு ஒரு வருடம் ஆகிறது. இந்த மாதம் அந்த அலுவலகத்தில் இருக்கும் அத்தனை ஊழியர்களுக்கும் வருடாந்திர சம்பள உயர்வுக்கான மாதம். வேலையில்லா நேரத்தில் ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும் கடவுளே என பிராத்தனை செய்யும் ஒவ்வொருவரும் வேலை கிடைத்த பின் இந்த முறையாவது நல்ல சம்பள உயர்வு கிடைக்க வழி செய்யமாட்டாயா கடவுளே என கடவுளிடம் அடுத்த விண்ணப்பத்தை அனுப்புவது இயல்பான ஒன்று தான். மகிழனும் அதை தான் செய்துகொண்டிருந்தான்.

பெரும்பாலானோர் தான் உழைத்ததை நினைத்து பெருமிதம் கொள்வது நியாயமான ஒன்று தான். ஆனால் அவர்களின் திறமைகளை விமர்ச்சிக்கும் இதுபோன்ற நேரங்களில்தான் அவர்களும் உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு அமைகிறது. இதில் சமரசமாக போகின்ற ஊழியன் அடுத்த சம்பள உயர்வை எதிர்பார்த்து காத்திருப்பான், சமரசமாகதவன் இன்னொரு அலுவலகத்தின் வாசலில் நேர்முக தேர்வுக்காக காத்திருப்பான். ஊழியர்களின் காத்திருப்புகளுக்கு முடிவேயில்லை.

மகிழனக்கு இந்த முறை சம்பள உயர்வு ஓரளவு தான் இருக்கும் என்பது செவி வழி வந்த செய்தி. இருந்தாலும் எதோ ஒரு நம்பிக்கையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம். காத்திருக்க வேண்டிய கட்டாயதிற்கான காரணம் யாரும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மகிழன் நல்ல திறமைசாலிதான். கொஞ்சம் முன்கோவி. எல்லோருடனும் அதிகம் பேசுவதில்லை. அதனால் தானோ என்னவோ அவனுடைய மேலாளருக்கு அவன் மேல் பெரிய மதிப்பிருப்பதாக கடந்த ஒரு வருடத்தில் ஒரு தருணத்தில் கூட அவன் உணர்ந்ததில்லை.

காலையில் இருந்து ஒவ்வொருவராய் மேலாளரின் அறைக்குள் சென்றுவிட்டு கால் மணிநேரம் அல்லது அரைமணி நேரம் சம்பள உயர்வை பற்றி பேசிவிட்டு வந்த வண்ணம் இருந்தனர். அந்த தளத்தில் இருந்த அத்தனை ஊழியர்களின் தலைகளும் ஒவ்வொரு முறையும் மேலாளர் அறையின் கதவு திறக்கும் ஓசை கேட்கும் போது அந்த திசையை நோக்கியே அனிச்சையாய் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் மேலாளர் எடுத்துக்கொள்ளும் நேரத்தின் அடிப்படையில் அந்தந்த ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான அறிகுறிகளை மற்றவர்கள் கணித்துக்கொண்டிருந்தனர். நல்ல சம்பள உயர்வு வாங்கியவனிடம் மேலாளருக்கு பேசுவதற்கு பெரிதாய் இருக்கப்போவதில்லை. அது தான் அவர்கள் கணிப்புகளின் மையப்புள்ளி.

மகிழன் தனக்கு பெரிய அளவில் சம்பள உயர்வு இருக்காது என்ற எண்ணத்தை அவனது அறிவுக்கும் மனசுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த பட்டிமன்ற தலைப்பாக்கியிருந்தான். ஒருவேளை தீர்ப்பு பெரிய அளவில் சம்பள உயர்வு இல்லையென்றால் "ஏன்" என்று கேட்டுவிடலாம் என்பதுதான் அவனது முடிவு. ஆனால் மகிழனுக்கு இருந்த ஒரு சில நண்பர்கள் அவனது குடும்ப சூழ்நிலைகளை தெரிந்து வைத்திருந்ததால் கொஞ்ச நாட்களாய் அவனிடம் பொறுமையை விற்க முயன்று கொண்டிருந்தனர். 

ஒரு சில நாட்கள் பேசியதில் பொறுமை அவனிடம் விலை போகவில்லை என்பதை புரிந்துகொண்டனர். அதனால் அடுத்த வியாபாரமாக மேலாளரை எதிர்த்து பேசுவது ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே எழுதிவிட்டு பேசுவதற்கு சமம் என்ற பயத்தை விற்க தொடங்கினர். வியாபாரம் எதுவானாலும் தேவையை பொறுத்துதான் வர்த்தகத்தின் வெற்றி. மகிழனின் தேவையை அவனை விட வேராறிவார்.

உள்ளே சென்று வந்த சிலர் முகங்களில் சிரிப்பு. சிலர் முகங்களில் சோகம். சிலர் முகங்களில் இரண்டும் கலந்து. சிலர் முகங்களில் அது இன்னதென்று புரியாத, அல்லது இதுவரை எவரும் எழுத்திடாத பாவனை. அகத்தின் அழகு இந்த நாட்களில் மட்டும் முகத்தில் தெரிவதில்லை. சம்பள உயர்வு ரகசியம் காப்பதற்காக ஒரு சிலர் படும் கஷ்டங்கள் ரணமானது. அந்த அறையிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரையும் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் மகிழன். அவன் அந்த அறையை விட்டு வெளியே வரும்பொழுது என்ன பாவனையில் வர வேண்டும் என்று கூட ஒரு ஒத்திகை பார்த்தான். பொதுவாக இதுபோன்ற நாட்களில் எந்த வேலையும் நடப்பதில்லை. அதற்காகவே இந்த சந்திப்புக்களை ஒரே நாளில் முடித்துவிடுவதில் மேலாளர் கவனமாக இருந்தார்.

நேரம் நண்பகலை நெருங்கியது. இதுவரை வெளியே வந்த ஊழியர்கள் யாரிடமும் மகிழன் பேசவில்லை. இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் மேலாளருடனான சந்திப்பை முடித்துவிட்டு சிலர் வேலையில் மூழ்கினர். சிலர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து நின்று பேசிக்கொண்டிருந்தனர். இன்னும் மகிழன் அழைக்கப்படவில்லை. ஒருவேளை இனி மதிய உணவுக்கு பிறகு தொடரலாம் என நினைத்துக்கொண்டாலும் மகிழனால் மதிய உணவிற்கு செல்லவும் முடிவில்லை. 

அவனுக்கான நேரம் வந்தது. கடைசியாக வெளியே வந்த ஊழியர் மகிழனிடம் சொல்லிவிட்டு போனான். அவசரமாக எழுந்தான். மேலாளர் அறையை நோக்கி நடந்தான். வெற்றியை நோக்கிய வீரநடையா அல்லது சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட ஒரு அகதியின் அடிமை தனமா அது என்பதை அப்போது அவனால் தீர்மானிக்க முடியவில்லை. பயம், விரக்தி, கோவம் என எல்லாம் கலந்த கலவையாக உள்ளே சென்றான். 

"சார்.."

"உள்ளே வாங்க மகிழ்.. உக்காருங்க."

"நன்றி சார்.."

"மகிழ், உங்களோட சம்பள உயர்வை பத்தி உங்களுக்கு எதாவது அபிப்ராயம் இருக்கா?"

"இல்லை சார்."

"ஓகே. நானே சொல்லிடுறேன். இந்த வருஷம் உங்களுக்கு சம்பள உயர்வு கிடையாது."

"..."

இது அவன் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இந்த ஒரு சூழ்நிலைக்கு அவன் ஒத்திகை பார்க்கவே இல்லை. முகத்தில் வேர்பதை துடைத்துக்கொண்டான். அவனது மனதிற்குள் குழப்பம். குடும்பம், புதிய தேவைகள், தங்கையின் படிப்பு செலவு, அம்மாவிற்கு புதிதாய் வந்த சர்க்கரை நோய், அப்பாவின் போதாத வருமானம் இவையனைத்தும் அவன் மனத்திரையில் ஒவ்வொரு படமாய் அடுத்தடுத்து வந்துபோகின்றன.

"மகிழ். நான் சொல்றது புரியுதா?"

எதாவது முடிவெடுத்தாகவேண்டிய கட்டாயம். அதற்கு மேல் அவன் காலம் தாழ்த்த விரும்பவில்லை. 

"இல்லை சார். புரியல..!"

"என்ன புரியல..?"

"ஏன் எனக்கு சம்பள உயர்வு இல்லை?" ஒரு வழியாக அவன் கேட்ட்க நினைத்தையோ அல்லது நினைத்தே பார்க்காத ஒன்றையோ கேட்டுவிட்டான்.

"ஹ்ம்ம். ஏன் உங்களுக்கு சம்பள உயர்வு தரணும்..?" மேலாளரின் திறமைக்கு ஒரு சவால். அவரும் மகிழனிடமிருந்து இந்த கேள்வியை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை போலும்.

"சார், நான் ஒழுங்கா தானே வேலை பாக்குறேன்..?"

"மகிழ், நான் உங்களுக்கு சம்பளம் இல்லைனு சொல்லலை. சம்பள உயர்வு இல்லைனு தான் சொன்னேன்."

"..." மகிழனால் பேச முடியவில்லை. அனுப வேறுபாடுகளின் ஆட்டம் போல அந்த உரையாடல் தொடங்கியது.

"அது தான் சார், ஏன் இல்லை..? நான் இங்க வேலைக்கு சேர்றப்ப வருஷத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு இருக்கும்னு சொல்லிருந்தாங்களே..?"

மேலாளரின் கண்களில் கோபத்திற்கான நிறக்கலவைகள் ஒன்று கூடுவதை மகிழனால் பார்க்க முடிந்தது. அவன் நண்பர்கள் சொன்ன விஷயங்களும் நினைவில் வந்து போனது. அவனது மேஜையில் வேலை நீக்கத்திற்கான காகிதம் காற்றில் ஆடிக்கொண்டிருப்பது போல தெரிந்தது.

"மகிழ், அது உண்மை தான். ஆனா அதை இன்னொரு முறை படிச்சு பாருங்க..அதில் என்ன போட்ருக்குனு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க.."

"சார் தயவு செஞ்சு நீங்களே சொல்லுங்க.." மகிழனின் தைரியகுதிரைக்கான கடிவாளம் கழன்று விழுந்து சில நொடிகள் ஆகின.

"அத சொல்றதுக்கு எனக்கு இங்க சம்பளம் தரல. இருந்தாலும் உங்களுக்கு சொல்றேன். வருஷத்திற்கு ஒரு முறை ஊழியரின் திறமை மற்றும் அதற்கான வெளிப்பாடுகளை பொறுத்து தான் அவர்களுக்கான சம்பள உயர்வு நிர்மாணிக்கப்படும். புரியுதா?"

"அப்போ எனக்கு திறமை இல்லைனு சொல்றீங்களா சார்?". மகிழன் இதை வாழ்விற்கும் சாவிற்குமான போராட்டமாக பார்க்கத் தொடங்கிவிட்டான்.

"அப்படி இல்லை மகிழ். உங்களை வேலைக்கு எடுக்கும் போது என்ன திறமை இருந்துச்சோ அது அப்படியே தான் இருக்கு. கூடவும் இல்ல, குறையவும் இல்லை. அதனால தான் உங்க சம்பளமும் அதே நிலையில இருக்கு. புரியுதா?"

"புரியுது சார். ஆனா அன்னைக்கு இருந்த நிலைமை தானா இன்னைக்கு எல்லா இடத்திலேயும் இருக்கு?"

"எல்லா இடம்னா? எத சொல்றீங்க..?"

"நான் வேலைக்கு சேரும்போது இருந்த பஸ் டிக்கெட் விலை இப்போ மூணு மடங்கு சார். வேலைக்கு சுத்தமா வரணும்னு வாங்குற துணிமணி, அத துவைச்சு தேய்க்க, சாப்பாடு இப்படினு வருசத்துக்கு வருஷம் செலவு கூடிகிட்டே இருக்கிறப்ப, எங்களை மாதிரி ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள உயர்வு அவசியம் தானே சார்.."

"மிஸ்டர் மகிழன், இந்த நிறுவனத்தோட கொள்கை உங்களோட வாழ்க்கை தரத்தை உயர்திறதில்ல. இந்த நிறுவனத்தோட தரம் தான் உங்களோட வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கனும்.."

"அப்போ நம்ம நிறுவனத்தோட தரம் மாறவே இல்லையா? மூணு மாதங்களுக்கு முன்னாடி கூட பெரிய வெற்றிகள அடைஞ்சதா எல்லாருக்கும் பெருமையா தகவல் வந்ததே..!"

"மகிழன், நீங்க ரொம்ப அதிகமா பேசுறீங்க. நிறுவனத்தோட தரம் உயர்ந்திருக்கு. அதுக்காக எல்லாருக்கும் அள்ளிக்கொடுக்க முடியாது. யார்யாருக்கு இந்த வளர்ச்சியில் பங்கு இருக்குனு கண்டறிஞ்சு அவங்களுக்கு மட்டும் தான் சலுகைகள் செய்யமுடியும். எல்லாருக்கும் செய்றதுக்கு இந்த நிறுவனம் ஒன்னும் சத்திரம் இல்ல..?"

"....." அமைதியானான். அவன் படித்த கிறித்துவ சத்திரத்தை நினைவுபடுத்தி கொண்டான். பின் தங்கிய நிலையில் இருந்த குடும்பத்திற்கு மூத்தவனாய் எதாவது செய்துவிட வேண்டும் என்று விவரம் தெரிந்த நாட்களிலிருந்து எண்ணியவனின் முதல் முயற்சியும் அதன் வெற்றியும் ஒரு பத்துக்கு பத்து சதுர அளவு கொண்ட ஒரு அறைக்குள் இப்பொழுது சதிராடிக்கொண்டிருந்தது.

"வேற எதுவும், சந்தேகம் இருக்கா மிஸ்டர் மகிழன்.?"

"இருக்கு சார்.." எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கவில்லை மகிழன்.

"சொல்லுங்க.."

"நல்ல சம்பள உயர்வு வாங்கணும்னா நான் என்ன சார் பண்ணனும்..?"

"நீங்க சொன்ன வேலைய மட்டும் பண்றீங்க மகிழன். உங்களுக்கும் இந்த நிறுவனத்துக்கும் ஒரு பிணைப்பு ஏற்படணும்னா நீங்க அந்த வேலைகளையும் தாண்டி யோசிக்கணும். உங்களோட ஆர்வம் தான் எங்களுக்கு தேவை. உங்கள மாதிரி ஆளுங்க அடுத்தடுத்த நிலைக்கு வரணும்னா கொடுத்த வேலையை தவிர அடுத்தடுத்த முயற்சிகளையும் பண்ணுங்க. நீங்களும் இந்த நிறுவனத்தில் ஒரு ஊழியாரா நெறைய விஷயங்களை சாதிக்க முடியும்னு ஆதாரப்படுத்துங்க."

"சொன்ன வேலைகளை பண்றதுக்கே இங்கே நேரம் பத்தலையே. இதில வேற என்ன பண்ண முடியும்? எனக்கு ஆர்வம் இல்லாமலா இவரோட உக்காந்து பேசிட்டிருக்கேன்! சாதிக்கிறதுக்காக நான் படுற கஷ்டம் உங்களுக்கு எப்படி புரியும். இந்த நிலைக்கு வர்றதற்கே நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்." மகிழனின் மனதிற்குள் நடந்த சம்பாஷணைகள். 

"மிஸ்டர் மகிழன்..?"

"சொல்லுங்க சார்.."

"அடுத்த முறையாவது நான் அத செய்தேன், இத செய்தேன்னு பேசி அதற்காக எனக்கு சம்பள உயர்வு வேணும்னு சொல்லி தைரியமா கேக்குற அளவுக்கு எதாவது பண்ணிட்டு வந்து இந்த மாதிரி பேசுங்க. அத விட்டுட்டு அந்த விலை கூடிருச்சு, இந்த விலை கூடிருச்சுனு பேசாதீங்க.""

"சரிங்க சார். சார் எனக்கு இன்னொரு சந்தேகம்?"

"கேளுங்க.."

"இந்த ஒரு வருஷத்திலே, என்னோட திறமைகள்ல பெரிய முன்னேற்றம் இல்லைனு, முதலிலேயே சொல்லிருந்தா எதாவது நான் முயற்சி பண்ணிருப்பேன். கொஞ்சமாவது சம்பள உயர்வு கிடைச்சிருக்கும். ஆனா இப்படி திடீர்னு வருட கடைசில இங்க வச்சு சொன்னா நான் என்ன சார் பண்ண முடியும்? இன்னும் ஒரு வருஷம் மறுபடியும் காத்திருக்கனும். அப்பயும் என்கிட்ட ஏதாச்சும் பிரச்சனை இருந்தா நீங்க கடைசில வந்து சொல்லாம முன்னாடியே சொல்லிடுங்க சார்..."

"இதெல்லாம் அலுவலகத்தோட சட்டங்கள். அதையெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் வேணும்கிற மாதிரி மாத்த முடியாது. நீங்க மறுபடியும் தேவையில்லாத விஷயங்களை பேசுறீங்க மகிழன்"

"மன்னிச்சிடுங்க சார். என்னோட நிலைமை அப்படி. நீங்க சொன்ன மாதிரி நடந்திகிற முயற்சி பண்றேன். ஆனா இந்த வருடம் எதாவது பண்ண முடியுமா சார்? என்னோட நிலைமை அப்படி சார்" கோவம் வந்த வேகத்தில் மறைந்து கெஞ்சலாகின.

"நீங்க முதல்ல முயற்சி பண்ணுங்க. நான் வேணும்னா முதலாளிட்ட பேசி பாக்குறேன். ஆனா நீங்க எங்கிட்ட பேசின விஷயங்களை எல்லாம் அவர்ட்ட நான் சொன்னா, நீங்க முயற்சி பண்றதுக்கு மொதல்ல வேலை இருக்குமான்னே தெரியல.."

"மன்னிச்சிடுங்க சார்.." சூழ்நிலைகள் யாரையும் எந்த இடத்திலும் மண்டியிட வைத்திவிடுகிறது.

"பரவாயில்ல...". மேலாளர் வெளியேறினார். அவரை பின் தொடர்ந்து மகிழனும் வெளியே வந்தான். அவன் பார்த்த ஒத்திகைகள் எல்லாம் வீணாய் போனது. அப்படியே அவை அரேங்கேறியிருந்தாலும் அங்கே பார்ப்பதற்கு யாருமில்லை. எல்லோரும் மதிய உணவிற்கு சென்றுவிட்டனர்.

இத்தனை நாட்களாய் பழகியிருந்த அலுவலகம் வேற்றிடமாக தெரிந்தது. இன்று தான் அவனது கடைசி நாள் என்பது போன்ற ஒரு பய உணர்வு அவனை தொத்திக்கொண்டது. இந்த வேலை கிடைத்தது தனது விடாமுயற்சிக்கான வெற்றியாக நினைத்தான். ஆனால் அதே வெற்றியை தனது ஆத்திரத்தால் அழித்துவிட்டது போல உணர்ந்தான். இவனைவிட திறமை குறைவானவர்களுக்கு வேலை செய்வதில் இருந்த ஆர்வத்தை விட மேலாளரை எப்படி மகிழ்விப்பது எனும் சூத்திரம் நன்றாக தெரிந்திருந்தது. 

மதிய உணவிற்கு பிறகு மேலாளர் மீதமிருந்த சில ஊழியர்களுடனும் பேசி விட்டு சில கோப்புகளை எடுத்துக்கொண்டு அலுவலகத்தின் முதலாளியை பார்ப்பதற்கு கிளம்பினார். உள்ளே சென்று கொண்டிருந்த மேலாளருக்கு அவரது அறையில் மகிழனுடன் பேசிய சம்பாஷணைகள் எல்லாம் ஒன்றொன்றாய் நினைவில் வந்து போயின. மகிழன் மீதான கோபத்தை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைத்தால் அவனை வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் முடிவோடு தான் முதலாளியின் அறைக்கு சென்றார். கதவு தட்டுப்படும் ஓசை கேட்டதும்,

"உள்ள வாங்க.." என்றார் முதலாளி.

"மாலை வணக்கம் சார்."

"உட்காருங்க மிஸ்டர் திவாகர். சம்பள உயர்வை பத்தி எல்லார்ட்டையும் பேசிட்டிங்களா?"

"ஆமா சார். எல்லார்ட்டையும் பேசியாச்சு." என்று இருக்கையில் அமர்ந்துகொண்டே பதில் சொன்னார் மேலாளர் திவாகர்.

"நல்லது. எல்லாம் சுமூகம முயூடிஞ்சதுனா, அடுத்த மாதத்திலிருந்து செயல்படுத்திடுங்க.."

"பண்ணிடலாம் சார். ஆனா மகிழன் மட்டும் தான் நாம எடுத்த முடிவை எதிர்த்து பேசிருக்காரு.. அதே மாதிரி அவருக்கு கண்டிப்பா சம்பள உயர்வு வேணும்னு சொல்லி கேட்டிருக்காரு."

"அப்படியா? ஆமா அவருக்கு எத்தனை சதவீகிதம் சம்பள உயர்வு..?"

"இல்லை சார். எதுவுமே இல்லை. அடுத்த வருடம் தான் கிடைக்கும்னு சொல்லிருக்கேன்.."

"ஏன்?"

"அவர் கொடுத்த வேலைகளை தாண்டி வேற எதிலும் பெருசா அக்கறை காட்றதில்ல சார்.."

"கடைசியா அப்படி நீங்க என்ன புது வேலை கொடுத்து அவர் அதை சரியா பண்ணல?"

"இல்லை சார். அவருக்கான வழக்கமான வேலைகள் மட்டும் தான் பன்றாரு.."

"நீங்க எதாவது புதுசா வேலை கொடுத்துபாத்தீங்களா?"

"இல்லை சார். ஏன்னா பொதுவா அவர் யார்ட்டயும் அந்த அளவுக்கு பேசுறதில்லை. அதனால எதாவது புது வேலை கொடுத்தா பக்கத்தில இருக்கவங்கிட்ட சந்தேகம் கூட கேக்க முடியாது. அதனால தான் அவருக்கு எதுவும் தர்றதில்லை.."

"அப்படியா.. அப்போ என்ன விஷயங்களை அடிப்படையா வச்சு நீங்க அவருக்கு சம்பள உயர்வு இல்லைனு முடிவு பண்ணினீங்க..?"

"சார், அவர் நம்ம நிர்வாகத்தோட சட்டதிட்டங்களை மாத்த சொல்றாரு.."

"எப்படி?"

"அதாவது வருஷத்தோட கடைசில அவருக்கு சம்பள உயர்வு இல்லைனு சொல்றதுக்கு முன்னாடியே அவரோட குறைகளை சொல்லனுமா."

"நல்ல விஷயம் தானே...?"

"சார்...."

"மிஸ்டர் திவாகர். நம்ம கீழ வேலை பாக்குறவங்க நம்மள கேள்வி கேக்குறாங்களேனு அத ஒரு குறையா பாக்காதீங்க. மகிழன் மாதிரி ஆளுங்க கேள்வி கேட்டதினாலதான் அநேக நிறுவங்கள்ல சட்டதிட்டங்கள் கொண்டுவந்திருப்பாங்க. அவர் கேட்டதில என்ன தப்பு? வருஷம் முழுதும் சம்பள உயர்வு இருக்கும்னு நம்பிகிட்டு வேலை பாக்குறவங்களை வருஷ கடைசில கூப்பிட்டு ஒன்னும் கிடையாதுன்னு சொன்னா அவங்க என்ன பண்ணுவாங்க? இத முழுசா பரிசீலிச்சு அந்த சட்டத்தை மாத்தணும். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை இந்த மாதிரி சந்திப்புகளை ஏற்பாடு பண்ணி அவங்ககிட்ட இருக்க பிரச்சனைய சொல்லுங்க. "

"சார், இப்படி பேசுறவங்கள ஆதரிச்சா, நாளைக்கு எல்லாரும் இவரை மாதிரி தான் பேசுவாங்க!"

"திவாகர், உங்க குழுல எத்தனை பேருக்கு சம்பள உயர்வு இல்லை?"

"மொத்தம் எட்டு பேரு சார்."

"எல்லாரும் மகிழன் மாதிரி கேள்வி கேட்டார்களா..?"

"இல்லை சார். சிலர் எதுவும் சொல்லாமலே போய்ட்டாங்க. சிலர் என்ன செய்யணும்னு கேட்டாங்க. ஆனா மகிழன் தான் ரொம்ப திமிரா கேள்வி கேட்டாரு சார்.."

"உண்மை தான். கேள்வி கேக்காதவங்க எல்லாரும் இந்த வருசத்துக்குள்ள எப்படியும் வேற அலுவலகம் மாறிடுவாங்க. ஆனா யாரு கேள்வி கேக்குறீங்களோ அவங்க தான் இங்க இருப்பாங்க. தான் இருக்க இடத்தில வேணும்கிறத வாங்கிற நினைக்கிறவங்க தான் மகிழன் மாதிரி பேசுவாங்க. இங்க இல்லைனா வேற இடத்துக்கு போயிக்கலாம்னு நினைக்கிறவங்க அமைதியா போய்டுவாங்க. அதனால மகிழனுக்கு குறைந்த பட்ச சம்பள உயர்வாவது கொடுக்கலாமே?"

"புரியுது சார்.. ஆனா..?" என்று இழுத்தார் மேலாளர் திவாகர்.

"சொல்லுங்க.."

"இப்ப நான் மகிழனுக்கு எதாவது பண்ணினா, நான் அவருக்கு பயந்திட்டேன்னு நினைச்சிட மாட்டாரா?" மிகவும் தயங்கி தயங்கி கேட்டார் திவாகர்.

"திவாகர் என்ன பேசுறீங்க நீங்க? யாரும் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அப்போ அவர் உங்களுக்கு பயப்படணும்னு தான் நீங்க இந்த மாதிரி சம்பள உயர்வு இல்லைனு சொன்னீங்களா?"

"இல்லை சார். அவர் நிறுவனத்தோடு வளர்ச்சில தனக்கும் பங்கு இருக்குனு சொல்றாரு.."

"இல்லைனு உறுதியா நீங்க சொல்லிட முடியுமா?"

"....." அமைதியானார் மேலாளர்.

"உங்க குழுல இருக்க எல்லாருக்கும் நிறுவனத்தோடு வளர்ச்சில பங்கு இல்லைனு, மகிழன் மாதிரி ஆளுங்களுக்கு எதுவும் செய்யலைன்னா, நாளைக்கு உங்களுக்கும் அதே தான்.."

"சார்..."

"புரியலயா? உங்க குழுல இருக்க எல்லாருக்கும் இந்த நிறுவனத்தோடு வளர்ச்சியில பங்கு இல்லைனா, உங்களுக்கு மட்டும் ஏன் நான் சம்பள உயர்வு தரணும்?"

"....." மீண்டும் அமைதியானார் மேலாளர்.

"திவாகர், மகிழனுக்கு சவாலான வேலைகளை கொடுங்க. அவரால பண்ண முடியுதான்னு பாருங்க. நீங்க நினைக்கிறத விட நல்ல திறமைகளை வெளிப்படுத்த நாம தான் அவங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கனும். அதை விட்டுட்டு அவர் அதை சொன்னார் இதை சொன்னார்னு புகார் பண்ணாதீங்க. ரெண்டு மாசம் வாய்ப்பு கொடுங்க. அவரால நல்லா பண்ண முடிஞ்சா அடுத்த மாசமே சம்பள உயர்வு கிடைக்கும்னு அவரை ஊக்கப்படுத்துங்க. மகிழன் மாதிரி ஆளுங்க கண்டிப்பா நம்ம நிறுவனத்தை விட்டு வெளியேற மாட்டாங்க. அதனால அவரை ஊக்கப்படுத்தி நல்ல நிலைமைக்கு கொண்டு வர்றது தான் உங்களை மாதிரி மேனேஜர்களுக்கு அழகே.. புரியுதுங்களா?"

"புரியுது சார்.."

"நல்லது. முதல்ல அவரை கூப்பிட்டு பேசுங்க."

"சரிங்க சார்.."

"நீங்க போகலாம்.."

மேலாளர் எதிர்பார்க்காத ஒன்று அங்கே நடந்தேறியுது. வாடிய முகத்தோடு வெளியேறிய மேலாளரை யாரையும் பார்க்கவில்லை. அங்கிருந்து வெளியேறி சென்ற மேலாளர் மகிழனின் இடத்தை கடந்து செல்லும்போது வாயில் எதோ முணுமுணுத்துக்கொண்டே சென்றார்....



Rate this content
Log in

Similar tamil story from Drama