Dr.PadminiPhD Kumar

Tragedy

4  

Dr.PadminiPhD Kumar

Tragedy

இப்படியும் சில மனிதர்கள்

இப்படியும் சில மனிதர்கள்

2 mins
191


                           இப்படியும் சில மனிதர்கள்

                      சென்னை தலைநகரின் திருவல்லிக்கேணி பகுதி பார்த்தசாரதி கோவிலும் மெரினா கடற்கரையும் சனி, ஞாயிறு கிழமைகளில் மக்களால் களைகட்டும் பகுதி. இங்கே சின்ன மசூதிக்கு பக்கத்தில் அமைந்த ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் வாழ்பவன் தான் பாண்டி. இவன் ஒரு சாதாரண சென்னைவாசி. படிப்பறிவு அதிகம் கிடையாது. தாய் தந்தைக்கு அடங்காத முரட்டு காளையாக வலம் வருபவன். ஆனால் மீன்பிடி மோட்டார் படகுகளின் முதலாளிக்கு மட்டும் மிகவும் விசுவாசமான தொழிலாளி. முதலாளிக்கு சலாம் போட்டு, ஐஸ் வைத்து எப்படியோ கைநிறைய காசு பார்க்கத் தெரிந்தவன் பாண்டி.

       இந்த அடங்காத காளையை அடக்க இவரது பெற்றோர் இவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். மனைவி அழகி. பெயர் மட்டும் அழகி அல்ல, உண்மையிலேயே அவள் குத்து விளக்கைப் போல் ஆடம்பரம் இல்லா அமைதியான அழகு கொண்டவள். அதனால்தான் பாண்டி அவள் அழகில் சொக்கிப் போய் இருந்தான். முதலாளியிடம் இன்னும் அதிகமாக குலைந்து வேலை பார்த்து சம்பாதித்துக் கொண்டு வரும் ஆசை பேராசைபேராசையானது. அவன் ஒரு தற்குறி. எப்பவும் தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான்.

        முதல் குழந்தை பிறந்தது. சிங்கக்குட்டி போன்ற ஆண்பிள்ளை பிறக்கும் என நினைத்த பாண்டிக்கு பிறந்தது பெண் குழந்தை என்றதும் ஏமாற்றம் தான். அடுத்த குழந்தை நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும். ஆசைக்கு ஒருபெண் வேண்டுமல்லவா என ஆளாளுக்கு அறிவுரை கூற அமைதியானான். அடுத்த குழந்தை ஆணாகவே பிறந்தது. முதலாளியிடம் இன்னும் முன்னைவிட கெத்தாக வேலை செய்தான். அவரிடம் வேலை செய்பவர்களில் தான்தான் கெட்டிக்காரனாக வலம்வர வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.

         ஆண்டுகள் சில உருண்டோடின. பெண் குழந்தை பிறக்கும் போது பார்க்க நார்மலாகவே தெரிந்தாள். வளர வளரத்தான் தெரிந்தது அவளது ஒரு கை அங்கஹீனம் ஆனது என்பது. சரிவர வளராமல் சூம்பிப் போன கையாக இருந்தாலும் அவள் உள்ளம் குன்றிப் போக வில்லை. தன் தம்பியிடம் பாசத்தைப் பொழிந்தாள். அழகும் தன் குழந்தைகளை மற்றவர்கள் முன் விட்டுக்கொடுக்காமல் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் வளர்த்தாள்.

            அன்று டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் மெரினா கடற்கரையில் நல்ல கூட்டம். பலரும் கடல் அலைகளில் நின்று ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்தனர். பாண்டியின் குழந்தைகள் இருவரும் கடற்கரைக்கு போக ஆசைப்பட்டார்கள். பாண்டியும் தன் மனைவி மக்களை அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு போனான். கடலுக்கு அருகில் சென்றதும் பாண்டியன் பையன் ராஜ் நீரில் விளையாட ஆசைப்பட்டான்.பாண்டியோ மணலில் அமர்ந்துகொண்டான்.அம்மாவும் அக்கா கௌரியும் கூடவர ராஜ் கடல்நீரில் நின்றான். திடீரென ஒரு பெரிய அலை வரவும் தடுமாறி கீழே விழுந்தான். அழகி பயத்தில் கத்தினாள்.

          காலம் கடந்து விட்டது. அலை பையனை உள்ளே இழுக்க, தம்பியைத் தூக்கி வர தன் கைகளை நீட்டிக் கொண்டு சென்ற கௌரியும் அலையோடு இழுத்துச் செல்லப்பட்டார்கள்.தன் கண் முன்னே அன்புக்குழந்தைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லும் நிலை பார்த்து அழகி மயங்கிப் போனாள். மணலில் இருந்து எழுந்து ஓடி வந்த பாண்டி மயங்கிய அழகியை தாங்கிப்பிடித்து நின்றானே தவிர தன் குழந்தைகளை காப்பாற்ற முயலவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர்,” குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என அலறும் சத்தம் கேட்டு கரையில் இருந்த சில நீச்சல் தெரிந்த வாலிபர்கள் கடலில் குதித்து குழந்தைகளை கரைக்கு தூக்கி வந்தனர். ஆனால் குழந்தைகள் ஒருவரை மற்றவர் பிடித்தபடியே நீரில் மூழ்கியதில் மூச்சுத் திணறி இறந்து இருந்தனர்.

     வீடு அல்லோலகல்லோலப்பட்டது. துக்கம் தாளாமல் அழகி மயங்கி மயங்கி விழுந்தாள். அந்த நேரம் பாண்டி குழந்தைகளின் சடலங்களுக்கு அருகில் நின்று கொண்டு அவர்களுக்கு மரியாதை செலுத்த தன் முதலாளி காரில் வருகிறாரா என காரின் கார்ன் சத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.



Rate this content
Log in

Similar tamil story from Tragedy