Dr Nagajothi

Drama Others

5  

Dr Nagajothi

Drama Others

பாதி படித்த புத்தகம்

பாதி படித்த புத்தகம்

11 mins
463


கைகளில் வைத்திருந்த புத்தகத்தின் ஏதோ இரு பக்கங்களுக்கு நடுவே தன் விரலை வைத்துக்கொண்டு, தலையை அந்த அறையின் சுவரில் சாய்த்து, ஓரமாய் இருந்த ஜன்னலின் வழியே வெளியே தெரிந்த பரந்து விரிந்த வானத்தை பார்த்தபடி இருந்தவளின் கண்களின் ஓரமாய் கண்ணீர் கசிய, ஆழ்ந்த பெருமூச்சு விட்டு கண்களை மூடிக் கொண்டாள், அந்த மூடிய கண்களுக்குள் பல காட்சிகள் விரிந்தது. குழந்தைப் பருவத்திலிருந்து கையில் காபி டம்ளரை ஏந்தி மாப்பிள்ளை வீட்டார் முன் நிற்கும் வரை எத்தனை எத்தனை கனவுகள். அப்போதும் கூட அவள் கனவு காண மறக்கவில்லை, திருமணத்திற்கு பின் தன்னை பட்ட மேல் படிப்பு படிக்க வைப்பதாக சொல்லியிருந்த மாப்பிள்ளை வீட்டாரைப் பார்த்து உள்ளம் குளிர்ந்து தன்னுடைய எதிர்காலத்தை குறித்த கனவுகள் அவள் கண்களுக்குள் பூத்தது. திருமணமும் நடந்து முடிந்தது,  அந்த ஆண்டு கல்லூரியில் சேர விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும், அதற்கான கடைசி தேதி நெருங்குகிறது என இரவு உணவு வேளையில் கணவனிடம் சொன்ன போது, "ஒரு ஆம்லெட் போட்டு எடுத்துட்டு வாயேன்" என கணவன் சொன்னதிலிருந்து அவள் புரிந்து கொண்டாள், "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை செய்யலாம்" என முன்னவர்கள் சொல்லி வைத்ததில் தன்னிடம் சொல்லப்பட்ட முதல் பொய் "கல்யாணத்துக்கு அப்புறம் எங்க மருமகள நாங்க படிக்க வச்சுக்குறோம்" என்பது தான் என. 

ஒரு அடுப்பில் வைத்திருந்த குக்கர் ஸ்ஸ்ஸ் என்று விசிலடித்து தன் இருப்பை காட்ட, ஒரு கையால் அந்த குக்கரை எடுத்து கீழே வைத்து விட்டு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சமையல் செய்ய ஆரம்பித்தாள், மற்றொரு அடுப்பில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கடாயில் எதையோ வதக்கி கொண்டிருந்தாள். இப்படி இரு அடுப்பிலும் வைத்திருந்த கடாய்களில் குழம்பு, கூட்டு என வகைவகையாய் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருந்தவள், பக்கத்து அறையிலிருந்து வந்த சத்தத்தை கேட்டு சமையல் அறையை விட்டு வெளியே வந்தாள்.


அங்கு கண்ணை தேய்த்துக்கொண்டு வீல் என்று கத்திக் கொண்டிருந்த தன் மகளை அள்ளி எடுத்து "சரி சரி சரி அதான் அம்மா வந்துட்டேன்ல, செல்லம் அழாதீங்க" என சொல்லிக்கொண்டே, அழுது கொண்டிருந்த தன் மகளின் வாயில் முலைக்காம்பை வைத்தாள். அவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த குழந்தையும், ஏதோ பெரிய ஆசுவாசம் கிடைத்தது போல கண்ணை மூடி மௌனமாய் அவள் மடியில் படுத்துக்கொண்டு பாலைக் குடித்தது. குழந்தைக்கு பால் கொடுக்கும் போதும் அடுப்பில் இருந்த குழம்பு கரிந்து விடாமல் இருக்க கேஸ் அடுப்பை குறைத்து வைத்து விட்டு வந்தோமா என யோசித்துக் கொண்டிருந்தாள். 


அந்நேரம் அடுப்பில் ஏதோ கரியும் வாசனை இவள் நாசிக்கு எட்ட, பால் குடித்தவாறே உறங்கிப் போயிருந்த குழந்தையின் வாயிலிருந்து முலைக்காம்பை வெடுக்கென பிடுங்கி விட்டு, குழந்தையை ஓரமாக படுக்க வைத்து, பின் ஆடையை சரி செய்து கொண்டு சமையலறையை நோக்கி ஓடினாள். அங்கு அவள் கடாயில் வைத்திருந்த கூட்டு கரிய துவங்கியிருந்தது. 


ஓடிச்சென்று கடாயை சட்டென அடுப்பிலிருந்து இறக்கிக்கொண்டே, "இப்படி ஆயிருச்சே... நேரமுமில்லை இப்ப என்னதான் செய்யறது" என பதட்டத்துடன் புலம்பிக்கொண்டே, குளித்துக்கொண்டிருந்த தன் கணவனிடம், குளியல் அறையின் வெளியே நின்று "ஏங்க வெண்டைக்கா கூட்டு கரிஞ்சுருச்சு, வேற ஏதாவது வைக்கவா இல்ல, சாம்பாருக்கு தொட்டுக்க முட்டை பொடிமாஸ் மட்டும் போதுமா" என கேட்க, எரிச்சலடைந்தவன் "என்னமோ செஞ்சுத் தொல"என ஏசினான்.


முதல் நாள் இரவே மறுநாள் காலை என்ன சமைக்க வேண்டும் என தீர்மானித்து அதன் படி சமையல் செய்து பழகியவளுக்கு சட்டென இப்படி ஆனது பதட்டத்தை ஏற்படுத்தியது. சரி ஆனது ஆகிவிட்டது, சீக்கிரம் தயாராகும் கூட்டு வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தவாரே சமையலறைக்குச் சென்று, கடகடவென உருளைக்கிழங்கை வெட்டி ஒரு கூட்டு தயார் செய்து கொண்டிருந்தாள். அப்போது மீண்டும் அறையிலிருந்து ஒரு சத்தம், "என்னோட சட்டைய இன்னும் அயன் பண்ணி வைக்கலையா" என, "அயன் பண்ணி சட்டைய டேபில்ல வச்சிருக்கேன் அதுல பாருங்க" என சமையலறையிலிருந்தே குரல் கொடுத்தாள்."


"நான் ரெடி ஆயிட்டு இருக்கேன் சீக்கிரம் சட்டைய எடுத்துட்டு வா" என தலையை வாரிக்கொண்டு அவன் சொல்ல, இவளும் அந்த சட்டையை எடுத்து அவன் கையில் கொண்டு கொடுத்தாள். இதற்கிடையில் குழந்தை எழுந்திருக்கவே, குழந்தையை ஒரு கையில் தூக்கி கொண்டு, கணவனுக்கு மதிய சாப்பாட்டை டப்பியில் அடைத்து கொண்டிருந்தாள்.


சமையலறையில் காலை சமையலை முடித்து, கணவனுக்கு மதிய சாப்பாட்டை டப்பியில் அடைத்து எடுத்துக்கொண்டு வந்து அறையில் வைத்துவிட்டு குழந்தையை படுக்கையில் போட்டாள். 


"நேரமாகுது சாப்பாடு எடுத்து வை, ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு" என சொல்லிக் கொண்டே டைனிங் டேபிளை நோக்கி வந்தான் அவன். 


"சாப்பாடு எடுத்து டேபில்ல தாங்க வச்சிருக்கேன், பாப்பாக்கு தூக்கம் வருது, நீங்களே எடுத்து போட்டுக்குருக்கீங்களா, நான் தூங்க வச்சுட்டு இருக்கேன்" என இவள் கூறியதும் அவன் முகத்தில் எள்ளும் கடுகும் பொறிந்தது.


அவன் முகத்தைப் பார்த்ததும் இவள் எதுவும் பேசாமல் குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டுவிட்டு டைனிங் டேபிளுக்கு சென்று சாப்பாட்டை எடுத்து பரிமாறினாள். அவன் வேகவேகமாக சாப்பிட்டு, பின் தன் பையை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவிட்டான். அறையில் ஒரு போர்க்களமே நடந்து முடிந்தது போல எல்லாப் பொருட்களும் ஆங்காங்கே கிடந்தது. 

"ஐய்யயோ நாளைக்கு பாப்பாக்கு வாக்சின் போட போகனுமே, அவர்ட சொல்லி லீவ் எடுக்க சொல்ல மறந்துட்டனே, இப்ப ஃபோன் பண்ணினா கத்துவாரு லஞ்ச் ப்ரேக்ல கூப்பிடுவோம்" என நினைத்துக் கொண்டே அலங்கோலமாய் கிடந்த அறையை சுத்தப்படுத்த ஆரம்பித்தாள். 

"ஒரு மனுஷன் ரெடி ஆகுறதுக்கு வீட்டையே ரெண்டு பண்ணி வச்சிருக்காரு" என தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு பொருட்களை எல்லாம் எடுத்து அதனதன் இடத்தில் வைத்துக் கொண்டிருந்தவளின் கைப்பேசி அழைக்க, "இது வேற....." என சலித்துக் கொண்டே அழைப்பது யாரென பார்த்தாள், வேறு யாருமல்ல அவளின் அம்மா வழக்கம்போல நலம் விசாரிப்பு தான். அம்மாவிடம் பேசிக்கொண்டே ஒரு கோப்பை தேநீர் குடித்தாள். 


"நானே உனக்கு கூப்பிடனும்னு நினைச்சேன் நீயே கூப்டுட்ட, என்ன இந்நேரத்துல கூப்பிடுருக்க"


"இல்லடி இப்ப கூப்டா தான் மாப்பிள்ளை இருக்க மாட்டாரு, கொஞ்சம் நேரம் எக்ஸ்ட்றா பேசலாம், அவர் இருந்தா ஆம் சரி நல்லா இருக்கேன் இத தாண்டி வேற என்ன பேசுவ"


"இதெல்லாம் நல்லா வக்கனையா பேசு, நான் எக்ஸ்ட்றா உன்ட பேசீட்டா மட்டும் நான் சொலறதெல்லம் உனக்கு புரிஞ்சுருச்சா என்ன"


"ஏய் என்னடீ பொடி வச்சு பேசுற"


"பொடியும் இல்ல புண்ணாக்கும் இல்ல, போன தடவை நீ கூப்பிட்டப்போவே நான் சொன்னது தான், நீ அத பத்தி யோசிச்சயா, அப்பா கிட்ட பேசினயா?" 


"நீ இன்னும் அத விடலயா? ஆகுற கதைய பேசுடி, கண்டதையும் யோசிச்சுக் கிட்டு இருக்காத"


"ஏது கண்டதையும் யோசிக்கிறனா, என்ன படிக்க வெக்கேன்னு சொல்லி தான கட்டிக்கிட்டு வந்தாங்க, இப்ப அத பத்தி வாயவே தொறக்கல, என்னன்னு கேக்க சொன்னா நீங்களும் கேக்கல"


"ஏன்டி, கல்யாணமாகி அஞ்சு மாசத்துல வாயும் வயிறுமா ஆயிட்ட, அப்புறம் எப்படி காலேஜ்ல சேந்து படிக்க முடியும்"


"நான் மாசமாகுறதுக்கு முன்னாடியே காலேஜ்ல சேர அப்ளிகேஷன் குடுக்கனும் லாஸ்ட் டேட் வந்துருச்சுன்னு சொன்னப்போ அத கண்டுக்கவே இல்ல, அப்புறம் ரெண்டு மாசத்துலயே புள்ள தங்கீருச்சு, இப்ப சொல்லு யாரால நான் காலேஜ் சேரல?"


"எதுக்குடி இப்ப பழைய கதைய பேசிக்கிட்டு இருக்க, இப்ப புள்ள இருக்கு, அதெல்லாம் விடு என் பேத்தி என்ன சொல்றா"


"அம்மா நீ பேச்ச மாத்தாத"


"........"


"சரி இப்பவாச்சும் நீ அப்பா எல்லாம் வந்து அவர்ட பேசலாம்ல, இன்னும் 2 மாசத்துல காலேஜ் சேர அப்ளிக்கேஷன் கொடுக்க ஆரம்பிச்சுருவாங்க"


"ஏன்டி லூசா நீ, பச்ச புள்ளைய வச்சுக்கிட்டு படிக்க போறேன்னு சொல்ற, அறிவிருக்கா"


"நான் ஒன்னும் காலேஜ் போயி படிக்கிறேன்னு சொல்லல, டிஸ்டன்ஸ்ல தான படிக்கிறேன்னு சொல்றேன்"


"அதுக்கும் பரிச்ச எழுத போகனும் தனியா நேரம் ஒதுக்கி படிக்கனும், குடும்பத்தையும் பார்த்துகிட்டு கொழந்தயையும் வச்சுக்கிட்டு இதெல்லாம் முடியாதுடி"


"அம்மா நான் தான படிக்க போறேன், நீயா படிக்கிற, அதெல்லாம் சமாளிச்சுருவேன்மா"


"சரி இப்ப நாங்க வந்து பேசி நீ காலேஜ்ல சேர்ந்துட்ட, பரிச்சைக்கும் போயிட்டா, நீ பரிச்ச எழுதீட்டு இருக்கும் போது கொழந்த பாலுக்கு அழுதா என்ன செய்வ"


மனதிற்குள் சரமாரியாக வசை வந்து விழுந்தது அவளுக்கு, ஆனாலும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல்,


"அம்மா பாப்பாக்கு இப்பவே ஒன்ற வயசு ஆயிருச்சு, நான் காலேஜ் சேர்ந்து பரிச்சைக்கு போகும் போது அவளுக்கு 2 வயசுக்கு மேல ஆயிரும், அப்போ என்னம்மா பால் குடுக்குறது அவ சாப்பாடே சாப்பிட ஆரம்பிச்சுருவா, இதெல்லாம் ஒரு காரணமா சொல்றியே உனக்கே நியாயமா இருக்கா" 


"என்ன பிளான்ல இருக்க நீ, 2 வயசோட பால் குடுக்குறத நிறுத்தீரலாம்னு நினைச்சுட்டு இருக்கயா!? நீயெல்லாம் 4 வயசு வர பால் குடிச்ச நியாபாகம் இருக்கா, ஒரு 3 வயசு வரையாச்சும் பால் குடுத்தா தான் கொழந்தைங்க ஆரோக்கியமா இருக்கும், நீ என்னவோ 2 வயசு ஆயிரும் சாப்பாடு சாப்பிடுவான்னு சொல்ற, இந்த என்னத்தையெல்லம் குழி தோண்டி பொதச்சுறு, 3 வயசு வர கண்டிப்பா பால் குடுக்கனும்"

ஏன் தான் அம்மாவிடம் இதையெல்லாம் சொன்னோம் என தனக்குள்ளேயே நொந்து கொண்டாள் அவள். 


"அம்மா இன்னும் எந்த காலத்துல இருக்க நீ, நம்ம வீட்ல 4 பேரு எனக்கப்புறம் 2 தம்பிங்க, அவங்கள பெத்தப்போ அவங்களோட சேர்த்து எனக்கும் பால் குடுத்த, நீயே யோசிச்சு பாரு, கொழந்த பொறந்து 3 வருஷம் குழந்தைக்கு வயிறு நிறையுற அளவு யாருக்காவது பால் சுரக்குமா? 3 வயசு வர பால் குடுக்குறது உனக்கு சாதாரணமா இருக்கா, அதுக்கு எவ்ளோ எஃபர்ட் போடனும், இப்பவே காம்பெல்லம் புண்ணா இருக்கு, 3 வயசு வரைன்னா, காம்பு பாப்பா வாயோட போயிரும்,"


"நாங்க எல்லாம் ஏதோ புள்ளையே பெத்து வளர்க்காத மாதிரி பேசுற"


"அம்மா நீ புள்ள பெத்து வளர்த்த சரி தான், நீ எனக்கு 4 வயசு வர பால் குடுத்த சரி தான், அதுக்குன்னு நானும் அதையே செய்யனும்னு சொல்றது நியாயமா? என் ஓடம்பும் உன் ஒடம்பும் வேற மா, எனக்கு எது சரியோ எது முடியுமோ அத தான செய்ய முடியும்"


"அதிகப்பிரசங்கி மாதிரி கூடக் கூட பேசாத, என் கிட்ட பேசினா மாதிரி மாப்ள கிட்ட பேசி வைக்காத, ஏற்கனவே உன் வீட்டுக்கு வந்தபோ நீ வெச்ச குழம்பு தண்ணியா இருக்குன்னு மாப்ள சொல்லிக்கிட்டே சாப்டு இருந்தாரு, எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருந்தோம், உங்க அப்பா மாதிரி தட்ட தூக்கி வீசாம, நீ எத ஆக்கி கொட்டினாலும் அட்ஜஸ்ட் பண்ணி சாப்டுட்டு போற புருஷன் கிடைக்க குடுத்து வைக்கனும், இப்படி காலேஜ் போறேன் அது இதுன்னு பேசி வைக்காத, ஒழுங்கா புள்ளையா வளர்த்து ஆளாக்கீட்டு குடும்பத்த நடத்தப் பாரு" என சற்றே குரலை உயர்த்தி சொன்னாள் அவள் அம்மா.


"ம்......உன் கிட்ட சொன்னதுக்கு நான் என் புருசன் கிட்ட சொல்லி எப்படியாவது சம்மதிக்க வச்சுரலாம் போல, நான் இப்படி ஏதாவது சொன்னா குடும்பம்னா அப்படி இப்படி தான் இருக்கும் நீ தான் அட்ஜஸ்ட் பண்ணனும், மாப்பிள்ளை மனசு கோணாம நடந்துக்கோ, ஒழுங்கா புள்ளையா பார்த்துக்கிட்டு குடும்பத்த நடத்துன்னு சொல்ல எதுக்கு அவர் இல்லாத நேரம் கால் பண்ற, அவர் இருக்கும் போதே இதெல்லாம் சொன்னா உனக்கு இன்னும் கிரெடிட் ஏறும்ல" 


"எல்லாம் உன் நல்லதுக்கு தான சொல்லுவேன், பொம்பளைக நாம விட்டு குடுத்து போனா தான் குடும்பம் நல்லா இருக்கும், இப்ப நீ இதெல்லாம் புரிஞ்சுக்காம மாப்ள கிட்ட கேட்டு அதுக்கு அவரு ஏதாவது சொல்லி எதுக்கு தேவையில்லாத வேல, அதா நீ பிஎஸ்சி. மாக்ஸ் படிச்ச்ருக்கைல, அது போதாதா பிஜி படிச்சே ஆகனுமா என்ன, பிள்ளைக்கு பாடம் சொல்லி குடுக்குற அளவு பொம்பளைக பாடிச்சா போதும்"


இதை கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டாள் அவள்,


"அம்மா சும்மா எரிச்சல கெளப்பாத, வீட்ல உக்காந்து சோறாக்கிப்போட தான் நான் பிஎஸ்சி மாக்ஸ் டிஸ்டிங்ஷன்ல பாஸ் ஆனனா? கல்யாணத்துக்கு முன்னாடியே நான் எவ்ளோ சொன்னேன், பிஜி முடிச்சு ஒரு வேலைக்கு போயிட்டு கல்யாணம் பண்றேன்னு, ஏதோ உலகத்துல இல்லாத சம்பந்தம் வந்தா மாதிரி என்ன புடிச்சு கட்டி வச்சீங்க"


"உனக்கு ஏதோ பிடிக்காம நாங்க கட்டாய படுத்தி கட்டி வச்ச மாதிரி சொல்ற, உனக்கு புடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம் தான கல்யாணம் பண்ணி வச்சோம்"


"அவங்க என்ன படிக்க வைப்பேன்னு சொன்னதால தான நான் ஒத்துக்கிட்டேன்"


"கல்யாணமானா அப்படி இப்படி நடக்க தான் செய்யும் அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி தாண்டி போகனும், இதோ உன் அண்ணன் பொண்டாட்டி எம். டெக் முடிச்சுட்டு வீட்ல தான இருக்கா!? படிச்சு மட்டும் என்ன ஆகப்போதுகு"


"அண்ணி இவ்ளோ படிச்சுட்டு வீட்ல இருக்கிறதே அநியாயம் நீ அத சொல்லி என்ன சமாதானப் படுத்த பாக்குற, முடிஞ்சா நீயாவது அவங்கள வேலைக்கு அனுப்பு, உன் மகளால முடியாதத உன் மருமகளாவது செய்யட்டும்" என சலித்துக் கொண்டாள்.


"அதிகப்பிரசங்கத்தனமா பேசாம ஒழுங்காக குடும்பம் நடத்துற வழிய பாரு, எப்ப பேசுனாலும் சண்ட போட்டு தான் ஃபோனா வைக்க வேண்டியதா இருக்கு" என சலித்துக்கொண்டாள் அவளின் அம்மா.


"எப்ப பாரு எங்களுக்கு அட்வைஸ் பண்றதா விட்டுட்டு வீட்ல உள்ள ஆம்பளைகளுக்கு அட்வைஸ் பண்ணி பழகுங்க சண்ட போடாம ஃபோன வைக்கலாம்" என சொல்லி சட்டென அழைப்பை துண்டித்தாள் அவள். 


பிறகு வழக்கம்போல தன் பணிக்கு ஆயத்தமாக, குழந்தைக்கு மீண்டும் பாலூட்டி அதை தொட்டிலில் போட்டு தூங்க வைத்தாள், குழந்தை தூங்கி விட்டது என உறுதியானதும், சமையலறைக்குச் சென்று அங்கு சிதறிக்கிடந்த குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு பாத்திரங்களை கழுவி அடுக்கினாள். அப்படி இப்படி என சின்ன சின்ன சுத்தம் செய்தலும், மறுநாள் இட்லிக்கு தேவையான மாவு அரைக்க அரிசியையும் உளுந்தையும் ஊற வைத்து, பின் மாலை நேர சிற்றுண்டி வடை செய்ய தேவையான பருப்பையும் ஊற வைத்தாள்.


இப்படியாக அவள் சமையல் அறையை விட்டு வெளியே வரும்போது நேரம் காலை 10 ஆகியிருந்தது. வயிற்றின் ஓரமாய் கிள்ளுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படவே, அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது தான் காலை உணவு சாப்பிடவில்லை என்று. பிறகு வேக வேகமாக காலை உணவை முடித்து விட்டு அறைக்கு வந்து குழந்தையை பார்த்தாள் குழந்தை நல்ல உறக்கம். 


ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த அழுக்கு துணிகளை எடுத்து வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு, வீடு முழுவதையும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். பின் ஆங்காங்கு இருந்த அழுக்குகளையும் துடைத்து தான் சுத்தப்படுத்திய வீட்டைக் கண்டு, மீண்டும் ஒரு முறை உறுதி செய்துகொண்டாள், அழுக்குகள் இல்லை என. 



வீட்டை துடைத்து முடிக்கவும், குழந்தை கண் விழிக்கவும், நேரம் சரியாக இருந்தது..... எழுந்த குழந்தைக்கு மீண்டும் ஒரு முறை பால் ஊட்டிய பின், சிறிது நேரம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள். 


அப்போது ஒரு ஓரமாய் வைத்திருந்த கைப்பேசி மீண்டும் அழைக்கவே, அதை பார்த்த அவளின் முகம் மலர்ந்தது..... ஆம், அழைப்பது அவள் கணவன் தான். 



"ஹலோ சொல்லுங்க " என்றதும் எதிர்புறமிருந்து வசைமாரி பொழிந்தது....


காரணம் காலை அவசர அவசரமாக செய்த கூட்டு சரியாக வேகவில்லை என. 



மௌனமாய் அனைத்தையும் கேட்ட அவள், பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டது. 



பெருமூச்சு விட்ட அவள் தன்னை தானே நொந்து கொண்டு குழந்தையை குளிக்க வைக்க ஆரம்பித்தாள். குழந்தையை குளிப்பாட்டி படுக்கையில் போட்டு பால் புகட்டவே, அசதியாய் உறக்கத்தில் ஆழ்ந்தது. 



சரி கொஞ்ச நேரம் கண் அசரலாம் என அவள் படுக்கையில் சாயும் போது தான் நினைவுக்கு வருகிறது, வாஷிங் மெஷினில் போட்ட துணிகளை உலர்த்த வெளியே எடுக்கவில்லை என....


"ஐயோ.... நல்லவேளை இப்பயே நியாபாகம் வந்துச்சு, அப்படியே விட்டுருந்தா துணி எதுவும் காஞ்சிருக்காது" என சொல்லிக் கொண்டே, மெஷினில் இருந்து துணையை உலர்ந்த எடுத்து, கொடிகளில் விரித்தாள்.


மாலை ஆக இன்னும் கொஞ்ச நேரம் தான் இருந்த மாத்திரத்தில், சற்று சாய்ந்து கொள்வோம் என்ற அவளின் எண்ணமும் பறந்து விட்டது.... குழந்தை தூங்கும் போதே மாலை சிற்றுண்டி செய்தால் தான் நல்லது என சமையலறைக்கு விரைந்தாள் அவள். 


ஊற வைத்த பருப்பை எடுத்து தேவையான பொருட்களை சேர்த்து அரைத்து வடை சுட ஆரம்பித்தாள். 


வடைகளை சுட்டு அதன் சூடு தணியாமல் இருக்க ஹாட் பேக்கில் அடுக்கினாள். லேசான குளிர் ஆரம்பித்திருந்த காலம் என்பதால், வடை சுட்டு அடுக்கிய கையோடு குளிக்கச் சென்றாள். 


குளித்துக் கொண்டிருக்கும் போதே, அறையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்து அழ, அரைகுறையாய் தண்ணீரை ஊற்றிக் கொண்டு வெளியே ஓடி வந்து குழந்தையை சமாதானம் செய்தாள். 


குழந்தை லேசாக ஆசுவாசம் ஆனதும் குழந்தையை கையில் தூக்கி கொண்டு பால்கனிக்குச் சென்றாள். அங்கிருந்து அவள் பார்த்த விரிந்த வானத்தையும், இடையிடையே அங்கு நடந்து சென்ற மனிதர்களையும், எதிர் கட்டிடத்திலிருந்து வந்த சத்தத்தையும், வாகனங்கள் கடந்து போகும் சத்தத்தையும், அவள் அதை எப்படிப் பார்க்கிறாள் என்ற தன் பார்வையையும் குழந்தையுடன் பகிர்ந்துகொண்டேன் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள்.


"டேய் குட்டி நீ அம்மா மாதிரி இருக்க கூடாது, உனக்கு என்ன புடிக்குமோ அத தான் செய்யனும், அய்யயோ அவங்க என்ன சொல்லுவாங்க ,இவங்க என்ன சொல்லுவாங்கன்னு அம்மா மாதிரி யோசிச்சுட்டு நிக்காம தைரியமா புடுச்சத எல்லாம் செய்யனும், முக்கியமா யார் கையையும் எதிர் பார்க்காம நீயா உன் சொந்த கால்ல நிக்கிற அளவு சம்பாதிக்கனும், ஒரு வேள நானே உன்ன ஏதாவது செய்ய கூடாது இதெல்லாம் குடும்பத்துக்கு ஒத்து வராதுன்னு பழைய பஞ்சாங்கம் மாதிரி பேசினா என்னையே நீ எதிர்த்து பேசுற மாதிரி இருக்கனும் புரிஞ்சுதா"


என இவள் சொல்ல தன் பிஞ்சு விரல்களை வாயில் வைத்து கடித்துக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தது குழந்தை. 


"இதோ இந்த வானம் மாதிரி எல்லையில்லாத கனவு காணனும், அப்படியே ரெக்க மொளச்சு நீ சுதந்திரமா பறக்கனும்"


இவள் பேசுவது ஏதோ புரிந்தது போல குழந்தையும் கைகளை ஆட்டி ஆரவாரம் செய்து.



இப்படியாக கொஞ்சநேரம் போனதும் வெளியில் யாரோ காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு "உங்க அப்பாவா தான் இருக்கும்" என சொல்லிக் கொண்டே கதவை திறக்க வந்தாள். ஆம் அவள் எதிர்பார்த்தது சரிதான், அவள் கணவன் தான். வரும் போதே ஏதோ எரிச்சல் நிறைந்த முகத்துடன் கடுகடுவென வீட்டிற்குள் நுழைந்தான்.


"என்னங்க காபி போடட்டா" என அவள் கேட்டதும் "ம்" என பதிலளித்து அறைக்குச் சென்றவன், படுக்கையில் கண்ணை மூடி சாய்ந்து உட்கார்ந்து இருந்தான்.


குழந்தையை வந்து அவன் பக்கத்தில் படுக்கையில் போட்டுவிட்டு, அவனுக்கு காபி போட்டு எடுத்துவர சமையலறைக்குச் சென்றாள். அந்த நேரம் பார்த்து குழந்தை வீல் என்று கத்த, எரிச்சலடைந்த இவன், கண்களைத் திறந்து சமையலறையை எட்டிப் பார்த்து "காலையில் இருந்து சாயங்காலம் வரை மனுஷன் வேலைக்கு போயிட்டு தலைவலியோடு வந்தா, கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுறீங்களா, நீங்களும் சேர்ந்து என்ன டார்ச்சர் பண்றீங்க" என கடிந்து கொண்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். இவள் சமையலறையிலிருந்து வேக வேகமாக ஓடி வந்து குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு சமாதானம் செய்து சமையல் அறைக்கு சென்றாள். 


குழந்தையை ஒரு கையில் வைத்துக்கொண்டு ஒரு கையில் காபி போட்டு எடுத்து வந்து அறையில் வைத்துவிட்டு வடையை எடுத்து வந்து வைத்தாள்.



அவன் காபியும் வடையும் சாப்பிட்டுக்கொண்டே கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். இவள் " நாளை குழந்தைக்கு வாக்சின் போட மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என சொல்ல ஆரம்பிக்கும் போதே, "கொஞ்ச நேரம் பேசாம இரு, நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆய்ட்டு பேசுறேன்" என சற்று தணிந்த குரலில் அவன் கூறினான். 


சரி, எதற்கு வம்பு என அவளும் அமைதியாய் காபி குடித்துக்கொண்டே குழந்தையை ஒரு கையில் வைத்து சமாதானப்படுத்திக் கொண்டு, இரவு சமையலுக்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் அப்போது மணி இரவு ஏழு ஆகியிறுந்தது, இப்போது இரவு உணவை தயார் செய்ய சமையல் அறைக்குள் நுழைந்தவள் சற்று சமாதானமாக இருந்தாள். காரணம் குழந்தையை அவன் பார்த்துக் கொண்டிருந்தான் குழந்தை அழாமல் அவனுடன் விளையாடிக்கொண்டிருந்தது.



இரவு உணவு தயாரானதும் டேபிளில் எடுத்து வைத்துவிட்டு அவனை சாப்பிட கூப்பிட்டாள், இதற்கிடையில் ஒரு முறை குழந்தைக்கு வந்து பால் புகட்டி விட்டு சமையல் செய்ததால் குழந்தை அவ்வளவு நேரமும் அழாமல் இருந்தது. பின் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அவனுக்கு பரிமாறி விட்டு, அவளும் சாப்பிட உட்கார்ந்தாள். "என்னங்க நாளைக்கு பாப்ப்பாக்கு வாக்சின் போட போகனும்"


"இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டியா, அத விட உனக்கு என்ன முக்கியமான வேல, வீட்ல சும்மா தான இருக்க ஒரு வார்த்த ஃபோன் பண்ணி சொல்லீருந்தா லீவ் சொல்லியிருப்பேன், காலையில கெளம்பும் போதாவது சொல்லீருக்கலாம்ல, எல்லாத்துலயும் அலட்சியம்"


"இல்லங்க நான் சொல்றதுக்கு முன்னாடி நீங்க கட் பண்ணிட்டீங்க"


"ம்ம்.... எல்லாத்துக்கும் இப்படி ஒரு காரணம் சொல்லு" என சலிப்புடன் சொன்னான்.


"நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, நீயே போயிட்டு வந்துரு, நான் கேப் புக் பண்ணீருறேன், பாப்பாவ பத்திரமா கூப்டு போயிட்டு வந்துருவைல்ல" என கேட்டுக்கொண்டே தன் கடமையை தான் சரியாக செய்கிறோம் எனும் பெருமிதத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 


அந்த நேரம் பார்த்து குழந்தை தன் கால் சட்டை நனைத்து, அந்த அசௌகரியத்தால் அழ ஆரம்பித்தது. "அச்சச்சோ..... அழாதீங்கடா... இருங்க இருங்க இருங்க இப்ப மாத்தீரலாம்" என சொல்லிக்கொண்டே சாப்பாட்டின் பாதியிலேயே எழுந்து கையை கழுவி விட்டு குழந்தைக்கு கால்சட்டையை மாற்ற சென்றாள். 


அவள் குழந்தைக்கு கால்சட்டையை மாற்றிய பின், மீண்டும் அவளுக்கு சாப்பிட தோன்றவில்லை. தட்டில் வைத்திருந்த மூன்று இட்லியில் இரண்டு மட்டுமே சாப்பிட்டிருந்த நிலையில் ஒரு இட்லி குப்பைகளுடன் சேர்ந்தது. 


குழந்தைக்கு பால் புகட்டி படுக்கையில் போட்டு, அவனிடம் சிறிது நேரம் பார்க்கச் சொல்லிவிட்டு, டேபிளில் இருந்த அனைத்தையும் அப்புறப்படுத்தி கழுவ வேண்டிய பாத்திரங்களை சிங்க்கிலும் மீதம் இருந்த சாப்பாட்டை பிரிட்ஜிலும் வைத்து, பாத்திரம் கழுவி, சமையல் அறையை ஒதுக்கி, நாளை காலை இட்லிக்கு தேவையான மாவையும் அரைத்து எடுத்து வைத்துவிட்டு, கதவு பூட்டி இருக்கிறதா என சரி பார்த்து, பின் சமையலறை மற்ற அறைகளில் விளக்குகளை அணைத்து, எல்லா வேலையும் முடிந்ததா என மீண்டும் மீண்டும் சரி பார்த்து விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.



குழந்தை அவனுடன் விளையாடி விளையாடி அசந்து தூங்க ஆரம்பித்திருந்தது. அவனோ கைப்பேசியில் எதையோ மிக மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தான். இவள் அறைக்குள் நுழைந்து முகம் கை கால்களை துடைத்துவிட்டு, அவன் அருகே சென்று ஏதோ பேச முற்படுகையில், இவள் அருகில் இருப்பது கூட தெரியவில்லை என்ற மட்டில் கைபேசியில் மூழ்கி இருந்தான் அவன்.



இப்போது மீண்டும் அவனைத் தொந்தரவு செய்தால் அவன் என்ன சொல்வானோ என தனக்குத் தானே கேட்டுக் கொண்டு அவனிடமிருந்து விலகி, தனக்கு எப்போதும் துணையாக இருக்கும் அந்த ஷெல்ஃபில் இருந்த புத்தகங்களை பார்த்தாள்.


அதில் தான் படித்து பாதியில் நிறுத்தி வைத்திருந்த ஒரு புத்தகத்தை கையில் எடுத்து படிக்க துவங்குகையில், அந்த அறை சட்டென இருளில் மூழ்கியது. புத்தகப் பக்கத்தை பார்க்கத் துவங்கிய அவள் கண்களை உயர்த்தி பார்த்தாள், அவள் கணவன் உறங்க ஆயத்தமாயிருந்ததால், விளக்குகளை அணைத்து படுத்தான். இவளோ கையில் தான் படிப்பதற்காக எடுத்த புத்தகத்தை அப்படியே வைத்துக்கொண்டு, படுக்கையில் அமர்ந்திருந்தவள் அந்த சுவரில் மெல்ல தலையை சாய்த்து, ஜன்னலின் வழியே வீட்டிற்குள் வந்த வெளிச்சத்தை பார்த்தாள். இருண்ட அந்த அறையிலிருந்து ஜன்னல் வழியே அவள் பார்த்த பரந்துவிரிந்த வானத்தில் மின்னிடும் நட்சத்திரங்களும், ஒளிவீசும் நிலவும் இவளிடம் ஏதோ சொல்லுவது போல தோன்றியது. பாதி படித்த புத்தகத்தின் கதை போல, முடிவு என்னவென்று தெரியாத தன் கனவை கையில் ஏந்தி முடிவிற்காக காத்திருந்தாள்.


End ❤️


~ Dr. நாகஜோதி



Rate this content
Log in

Similar tamil story from Drama