parthasarathy srinivasan

Inspirational

4.5  

parthasarathy srinivasan

Inspirational

பிச்சைப் புகினும்

பிச்சைப் புகினும்

6 mins
311


சென்னையில் திதி செய்வது இவ்வளவு கடினம் என்று தெரியவில்லை. என்னுடைய மாமனாருடைைய இரண்டாமாண்டு திதி நாளை மறுநாள் வருகிறது. என் மனைவி ஒரே மகள் என்பதால் இது சம்பந்தமான சடங்குகளை செய்யும் பொறுப்பு என்னிடம் வந்துள்ளது. சென்ற வருடம் அவர் சொந்த ஊரான தென்காசியில் செய்ததால் எளிதாக முடிந்தது. இந்த முறை என் மனைவியின் உடல் நிலையை உத்தேசித்து சென்னையிலேயே செய்வதாக முடிவு செய்தோம். அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால் புரோகிதர் யாரும் வீட்டுக்கு வரத்தயாராக இல்லை.


அருகிலுள்ள ஞானவாபியில் மூன்றாவதாக செய்து தர ஒரு புரோகிதர் ஒத்துக்கொண்டார். ஆனால் சாப்பிட எங்கள் சமூகத்தை சேர்ந்த இருவரை ஏற்பாடு செய்வது என் பொறுப்பு என்று சொல்லிவிட்டார்.


பல நண்பர்களிடம் கேட்டுவிட்டேன். எல்லாருமே மறுத்து விட்டனர். 


புரோகிதர் ஒரு வழி சொன்னார், இரண்டாவது திதிக்கு வருபவர்களையே சற்று தாமதிக்க செய்து சமையலுக்கு வேண்டிய மளிகை மற்றும் காய்கறிகளை தானமாகக் கொடுத்து ஹிரண்ய சிரார்த்தமாக செய்யலாம் என்றார். என் மனைவி ஏற்கவில்லை. 

"உங்கள் அப்பாவின் சிரார்த்தம் எவ்வளவு கிரமமாக நடக்கிறது. நாமும் உங்கள் அண்ணா வீட்டுக்கு தவறாமல் சென்று கலந்து கொள்கிறோம். எங்கப்பா என்றால் இளப்பமா?" 


"அப்படியில்லை அகிலா, அந்த திதி முகூர்த்த நாட்களில் வருவதில்லை, ஆடிமாதம். இந்த மாதிரி சடங்குகளுக்கு வருபவர்கள் சமையல் வேலையும் செய்கிறார்கள். அதனால்தான் சிக்கல். இந்த முறை இப்படி நடக்கட்டும். அடுத்த வருடத்தில் இருந்து தென்காசியிலேயே ஏற்பாடு செய்யலாம்."

"அதெல்லாம் தெரியாது, மயிலாப்பூருக்குச் சென்று இரண்டு பேரை ஏற்பாடு செய்யுங்கள். போக வர ஆட்டோ அமர்த்தலாம்."


பொதுவாகவே எனக்கு சில குறிப்பிட்ட துறைகளில் உள்ளவர்கள் மீதும், சில குறிப்பிட்ட தொழில் செய்பவர்கள் மீதும் நல்ல அபிப்பிராயம் கிடையாது - அரசியல்வாதிகள் , வக்கீல்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் , கட்டுமான தொழில் செய்பவர்கள், ஆட்டோ காரர்கள் என இது ஒரு பெரிய பட்டியல். இதில் சில வருடங்கள் முன் என் தகப்பனார் இறந்த போது சேர்க்கப்பட்டது வைதீகம் செய்பவர்கள். இவர்களிடம் ஒரு அடிப்படை நேர்மையும், நம்பகத்தன்மையும் இருப்பதில்லை. எவ்வளவுதான் சம்பளம் பேசியிருந்தாலும் நாம் செய்யும் காரியத்தைவிட சற்று அதிகமான வருமானம் வர வாய்ப்பிருந்தால் நமக்கு சரியான காரணம் கூட சொல்லாமல் ஏதோ சொல்லி கழட்டி விட்டுவிடுவார்கள். அப்படியே வந்தாலும் குறித்த நேரத்திற்கு வராமல் நம்மை கடைசிவரை டென்ஷனில் வைத்திருப்பார்கள்.

எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லாத துறையில் முன் பின் தெரியாத ஒரு நபரைத் தேடி மயிலாப்பூர் புறப்பட்டேன். 


காலை 9 மணிக்கு கபாலீஸ்வரையும், கற்பகாம்பாளையும் வழிபட்டு விட்டு, கற்பகாம்பாள் மெஸ்ஸில் டிபன், காபி சாப்பிடச் சென்றேன். ஆர்டர் செய்துவிட்டு மெதுவாக அங்குள்ள சப்ளையரிடம் விசாரித்தேன். "சார், நீங்க சாப்பிடுங்க. எனக்கு தெரிந்த ஒருவர் அபகாரியங்களுக்கு ஏற்பாடு செய்கிறார், உங்களை வந்து இங்கேயே பார்க்க சொல்கிறேன்."


டிபன் சாப்பிட்டுவிட்டு 15 நிமிடங்கள் காத்திருந்தேன். ஒரு நபர் லேட்டஸ்ட் மாடல் ஸ்கூட்டரில் வந்து இறங்கினார். 50 வயது மதிக்கலாம். " நான் கணேசன்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருக்கு ஒரு காபி ஆர்டர் செய்துவிட்டு என் தேவையைச் சொன்னேன். அவர் சொன்னார், " சார் அவ்வளவு தூரம் வந்து , 3 மணி வரை காத்திருக்க யாரும் சம்மதிக்க மாட்டார்கள். எனக்கு தெரிந்த 80 வயதான புரோகிதர் இரண்டு தெருக்கள் தாண்டி இருக்கிறார். ஸ்வாமி நாத சாஸ்த்திரிகள்னு பேர். அவர் இப்போது நடமாட்டம் குறைவு. அவர் வீட்டிலேயே செய்தாலுண்டு. அக்கம்பக்கத்தில் இரண்டு பேரை சாப்பிட ஏற்பாடு செய்ய இயலும். நான் அழைத்து செல்கிறேன். நீங்களே பவ்யமாக விண்ணப்பம் செய்யுங்கள்."  "என்ன பெரிய பவ்யம் 5000க்கு பதில் 10000 கொடுக்க வேண்டியிருக்கும்" என்று மனதில் நினைத்து கொண்டேன்.


இருவரும் அவர் ஸ்கூட்டரிலேயே சென்றோம். வீடு சுண்ணாம்பைப் பார்த்து பல ஆண்டுகள் இருக்கும். குடியியிருப்பவரின் வறுமையை பறைசாற்றும் வகையில் இருந்தது.


கணேசன் மிக பவ்யமாக உள்ளே நுழைந்தார். கூடத்தில் ஒரு வயோதிகர் ஏதோ பெரிய புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார். நெற்றியில் திருநீறுடன், கழுத்தில் உத்திராஷத்துடன் ரிக்ஷி போல தோன்றினார். நிமிர்ந்து பார்த்தவர், "வாடா, கணேசா. என்ன அதிசயமா இந்தப் பக்கம்?". கணேசன் சட்டென்று நமஸ்காரம் செய்தார். "ஷேமமாயிறு " என்று வாழ்த்தினார். நானும் உடனே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். என்னையும் வாழ்த்தினார். கணேசன் , "இவர் பெயர் ராமச்சந்திரன். உங்களை அவசரமாக பார்க்கணும்னார் . அழைச்சுட்டு வந்தேன். " "சார். நீங்க பேசிகிட்டிருங்க. நான் இதோ வந்துட்டேன்." 


"மாமி, கணேசன் வந்திருக்கேன் " என்றபடி அடுக்களைக்குள் சென்றார். 

என்னுடைய பிரச்சினையை பவ்யமாக அவர் முன் வைத்தேன். "நான் ஒரு வருஷமா எங்கேயும் போறதில்லை. ஆனா, இந்த மாதிரி காரியங்களை மறுக்கக் கூடாதுங்கறது தர்மம். எதுக்கும் எங்காத்துக்காரியை ஒரு வார்த்தை கேட்கறேன்."


"விசாலம்!" என்றைழைத்தார். அடுத்த நிமிடம் சாஷாத் கற்பகாம்பாள் போல ஒரு பழுத்த சுமங்கலி வந்து நின்றார். கைகூப்பி நமஸ்காரம் செய்தேன் ‌. "வாங்கோ" என்றார்.


சாஸ்திரிகள் விஷயத்தை சொல்லும் முன்னாலேயே, "கணேசன், எல்லா விவரமும் சொன்னான். ஏத்துக்கோங்கோ. நான் சமையல் செஞ்சுடறேன். கணேசன் காய்கறி, மளிகை சாமான் எல்லாம் அனுப்பறேன்றான். ஒத்தாசைக்கு ஒருத்தரையும் அனுப்பறேன்றான். பண்ணிடலாம் " என்றார்.


சாஸ்திரிகள், கணேசனைப் பார்த்து, "நாலாவது ஆத்துல , வேம்பு இருப்பான். நான் சொன்னேன்னு கூட்டிண்டு வா." என்றார். "இதோ." என்று போன கணேசன் இரண்டே நிமிடங்களில் வேம்பு உடன் வந்தார்.


"வேம்பு, நாளை மறுநாள் உனக்கும், உன் மச்சினன்னுக்கும் நம்மாத்துல சாப்பாடு. ஆத்துக்காரிகிட்ட சொல்லிடு. அவளும் நம்மாத்துலேயே சாப்பிடலாம்." வேம்பு தயங்கினார். "என்னடா, வேற எங்கேயாவது ஒத்துண்டிருக்கியா?". 

"அதில்லை மாமா‌. இப்ப சுகர் இருக்கு. பசங்க காரியங்கள்ல சாப்பிட வேண்டாம்னு சொல்றாங்க ‌."


"பேஷ், என்ன முடியுமோ அதை சாப்பிடு. அதுக்காக கடமையைத் தட்டி கழிப்பியா. நாம பழசை மறக்கக் கூடாது. அவங்களை எப்படி படிக்க வைச்சன்னு சொல்லுடா. சரி, விடு நான் பாத்துக்கிறேன்".

வேம்பு நகரவில்லை, "நீங்க சொன்னா, சரி மாமா. நாங்க ரெண்டு பேரும் வந்துடறோம்."


"நல்லது. 10 மணிக்கு வந்துடு. மாத்திரை போட்டுக்கணும்னா , ஒரு டம்ளர் கஞ்சி சாப்பிடு தோஷமில்ல‌."

வேம்பு நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்பினார். 


சாஸ்திரிகள் என்னைப் பார்த்து, "சரி, பண்ணிடலாம். சரியா , 9.45க்கு வந்துடுங்கோ‌. ஏற்கனவே ஒத்துண்டவருக்கு ஒரு 100 ரூபாயாவது கொடுங்கோ." 


"அப்படியே செய்யறேன், மாமா." என்றவன். மேலே பேச எத்தனிக்க கணேசன் என்னை கையமர்த்தி, "அப்போ, நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம், மாமா" என்று கிளம்பினார். மாமியிடமும் சொல்லிக்கொண்டு 

வெளியில் வந்தவுடன் "அவருக்கு எவ்வளவு சம்பாவனை‌?. மாமிக்கு சமையலுக்கு வேற தரணும். சாப்பிட வரவங்களுக்கு எவ்வளவு தரணும்?"

"உங்கள் விருப்பம் போல, செய்யுங்க. அவர் இவ்வளவு கொடு என்று யாரையும் கேட்டது கிடையாது."

"உங்களுக்கு?"


"அவர் என்னை கை தூக்கி விட்டவர். அவர் சம்பந்தமான காரியங்களுக்கு 10 பைசா வாங்க மாட்டேன். மளிகைக்கும், காய்கறிக்கும் ஒரு 2000 கொடுங்கோ போதும். மிச்சமிருந்தா கொடுக்கிறேன். கூட ஆச்சுன்னா வாங்கிக்கறேன்."


நான் 2000 கொடுத்து விட்டு " கடவுள் மாதிரி வந்து உதவினீங்க . ரொம்ப நன்றி" என்றேன். "பரவாயில்லை, சார். இதோ, என் கார்டு. கேட்டரிங் செய்யறேன். சின்ன ஃபங்ஷன்கள், மற்ற தேவைகளுக்கு செய்யறேன். வேணும்னா சொல்லுங்க."


கணேசன் கிளம்பியதும் மயிலாப்பூர் குளம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என் மனைவிக்கு போன் செய்து விவரங்களைக் கூறினேன். அவளால் நம்பமுடியவில்லை. நான் மேலும் சாஸ்திரிகளுக்கும், அவர் மனைவிக்கும், சாப்பிட வருபவர்களுக்கும் வைத்துக் கொடுக்க ஜவுளி எடுத்து வரட்டுமா என்று கேட்டேன். "நிச்சயமாக" என்றாள். மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையில் வாங்கிக் கொண்டு ஆட்டோ பிடித்தேன்.


 வைதீகம் செய்பவர்கள் மீது எனக்கு இருந்த அபிப்ராயம் ஸ்வாமிநாத சாஸ்திரிகளை சந்தித்த பின், சற்று மாறியது. ஆட்டோக்காரர், "சார், கோயிலுக்கு வந்துட்டு போறிங்களா?" என பேச்சு கொடுத்தார். நான் வந்த விவரத்தையும், சாஸ்திரிகளைப் பார்த்ததையும் சொன்னேன். "சார், அவர் தங்கமான, மனுஷன், சார். எல்லாருக்கும் வித்தியாசம் பார்க்காம உதவி செய்வார். ஒரே பையன். அமெரிக்காவுல இருக்கார் . அப்பா , அம்மாவுக்காக மந்தைவெளில ஃபளாட் வாங்கியிருக்கிறார் . இவர் மயிலாப்பூரை விட்டு போகமாட்டேங்கறாரு. இப்ப அவர் இருக்கிறது வாடகை வீடு. வெறும் ஆயிரம் ரூபாய்தான். ஓனர் " நீங்க விருப்பப்படற வரைக்கும் இருங்க" அப்படின்னு சொல்லிட்டார். இரண்டு, மூணு பெரிய மனுஷங்க மாதா மாதம் வேண்டிய சாமான்களை வாங்கிப் போட்டுட்டு கால்ல விழுந்துட்டு போறாங்க. அவர் யார் கிட்டேயும் எதுவும் கேட்கமாட்டார். ஒரு தபா எனக்கு ஒரு நெருக்கடி என் பொண்டாட்டிக்கு வயித்துல ஆபரேஷன். கைல பணம் இல்லை. இவர் கிட்ட போய் நின்னேன். ஒரு போன்தான் அடிச்சாரு . பிரபல நர்சிங் ஹோம்ல இலவசமாக செஞ்சாங்க. அதிலிருந்து அவரையும் அவர் வீட்டுக்காரம்மாவையும் வண்டில ஏத்துனா காசு வாங்கறதில்ல சார். ரொம்ப சொன்னார்னா உங்க பையன் கிட்ட வாங்கிக்கறேன்னு சொல்லுவேன். அவர் பையன் வரும்போது ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுத்திட்டு போவார். அவர் பண்ண தர்மம் அவரைக் காப்பாத்துது சார். புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஆஸ்பத்திரி பக்கமே போனதில்லை சார்."


அதற்குள் வீடு வந்துவிட்டது. 500 ரூபாய்க்கு எதிர்பாராத அதிகமான தொகையை பாக்கியாகக் கொடுத்தார். எல்லாம் ஸ்வாமிநாத சாஸ்திரிகள் உபயம் என்று நினைத்தேன். 


வீட்டுக்கு வந்தவுடன், "அகிலா, இவர் மயிலாப்பூரில் மிக மதிக்கப்படுகிற புரோகிதர். நாம் நல்ல விதமாக காரியத்தை செய்து கொள்ள வேண்டும்." என்றேன். "புரிகிறது" என்று தலையாட்டினாள்.

திதி கிரமப்படி நடந்தது. அதிதிகள் சாப்பிட்டவுடன் தலைக்கு 1000 சம்பாவனை செய்தேன். சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்கள். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு முடிக்க 2.30 ஆகியது ‌. "அருமையான சாப்பாடு. 50 வருடங்களுக்கு முன்னால் என் பாட்டி கையால் சாப்பிட்டது . அதே பக்குவம்" என்றேன். அகிலாவும் பாராட்டினாள். மாமி ஒரு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.


அகிலா, புடவை வேஷ்டியுடன் தாம்பூலத் தட்டை தயார் செய்தாள். ரகசியமாக "5000 வையுங்கோ" என்றாள். மகிழ்ச்சியுடன் எடுத்து வைத்தேன். இருவரையும் நமஸ்கரித்து தட்டை நீட்டினோம். சாஸ்திரிகள், "என்ன இது என்றவர். 1000 மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை தட்டிலேயே வைத்து விட்டார். 

"இந்த காரியத்துக்கு இதுதான் நியாயமான தட்சிணை. அதற்கு மேல் வாங்குவது அதர்மம்." என்றார்.


 வஸ்திரங்களையும் மறுத்தார். அகிலா மாமியிடம் போய் கெஞ்சினாள். மாமி, "ஏன்னா, அந்தப் பெண் ரொம்ப விசனப்படறா. வஸ்திரங்களை மறுக்க வேண்டாம்." என்றார். சாஸ்திரிகள் அரை மனதுடன் தலையாட்டினார். மாமி பணத்தை எடுத்து என் அருகில் வைத்து விட்டு தட்டை உள்ளே எடுத்துச் சென்றார். நான் மிகவும் தயங்கியதைப் பார்த்த சாஸ்திரிகள், "இந்த பணத்தை கோவிலருகேயிருக்கும் ஏழைகளுக்கு தலைக்கு 100 ரூபாயாகக் கொடுங்கள். சாதி மத பேதம் பார்க்க வேண்டாம் ‌. தெற்கு மாட வீதியில் இருக்கும் மளிகைக் கடையில் சில்லறை கிடைக்கும்." என்றார். நான் அகிலாவை அங்கேயே காத்திருக்க சொல்லிவிட்டு மளிகைக் கடையில் சில்லறை மாற்றச் சென்றேன். சாஸ்திரிகள் பெயரைச் சொன்னதும் உடனே சில்லறை கிடைத்தது. கோவிலுக்கு அருகில் 35 பேருக்கு கொடுக்க முடிந்தது. மீதியுடன் திரும்பினேன். "அப்போ, உத்தரவு வாங்கிக்கிறோம்" என்று வணங்கிவிட்டுக் கிளம்பினோம் .

காரில் அகிலா அயர்ந்து தூங்கினாள். வீட்டுக்கு போனதும் சிறிது ஓய்வெடுத்தோம். 


மாலையில் மிக மன நிறைவுடன் பேசிக்கொண்டு இருந்தோம். "பணத்தை துச்சமாக மதிக்கிற, இப்படி ஒரு நிறைவான தம்பதிகளை இது வரை பார்த்ததில்லை. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை." என்றாள். எனக்கு திருமணம் ஆகி 35 ஆண்டுகளில் இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததில்லை. 


"கணேசனுக்கு போன் செய்யுங்கள் " என்றாள்.


கணேசன் உடனே எடுக்கவில்லை. பத்து நிமிடத்தில் கூப்பிட்டார். "சார், எல்லாம் நல்ல படியாக முடிந்ததா?" என்று கேட்டார். "இதைவிட மன திருப்தி எங்களுக்கு ஏற்பட்டதில்லை. எல்லாம் நீங்கள் செய்த உதவி." என்றேன். "எல்லாம் ஈஸ்வரன் செயல். நான் வெறும் கருவி." என்றார். 

"உங்களுக்கு நான் மேலும் எவ்வளவு தர வேண்டும்?" என்று கேட்டேன். "நான்தான் உங்களுக்கு 120 தரவேண்டும். கூகிள் பே செய்கிறேன்" என்றார். நான் "வேண்டாம். எனக்காக அலைந்திருக்கிறீர்கள். பெட்ரோல் செலவுக்காகவாவது இருக்கட்டும் " என்றேன்.


அகிலா போனை வாங்கி மிக சிலாகித்து பேசினாள். "அவசியம் ஒரு நாள் ஆத்துக்கு வாங்கோ. வைஃபையும் கூட்டிண்டு வாங்கோ‌." என்று முடித்தாள்.


 மிஞ்சிய 500 ரூபாயை பத்திரமாக ஒரு கவரில் போட்டு, மேலே "ஸ்வாமிநாத சாஸ்திரிகள் போட்ட பிச்சை" என்று எழுதினேன். பின்னர் யாருக்காவது உதவலாம் என்று உத்தேசம். 

அன்றிலிருந்து எந்த தொழில் செய்பவர்களைப் பற்றியும் ஒரு தவறான பார்வையைத் தவிர்க்கிறேன். பெரும்பாலானவர்கள் நியாயமான முறையில் நடப்பவர்கள், மரியாதைக்குரியவர்கள். ஒரு சில கருப்பு ஆடுகளுக்காக ஒரு சாராரையே குறை சொல்வது அறிவீனம்.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational