parthasarathy srinivasan

Drama

4  

parthasarathy srinivasan

Drama

விலாசம்

விலாசம்

8 mins
371


முருகேசன் அன்று மாலை சற்று தாமதமாக வீட்டிலிருந்து கிளம்பியதால் நடைப்பயிற்சிக்கு கடற்கரைக்கு பதில் அருகிலுள்ள மாநகராட்சி பூங்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 6 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் இந்தளவு போக்குவரத்து நெரிசல் அதிகரித்திருப்பது மிக அதிர்ச்சியை அளித்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெரிசலைக் தவிர்க்க இரு சக்கர வாகனங்களும் மற்ற சிறு வாகனங்களும் வால்மமீகி நகர் சாலையைப் பயன்படுத்துவது 

ஒரு முக்கிய காரணம். நடப்பதற்கே இடமில்லை. 55 வயதில் முருகேசனே

சாலையைக் கடக்க முடியாதபோது

70, 80 வயதான முதியவர்கள் அங்கங்கே தடுமாறி நிற்பதைக் கண்டு, இந்த நேரத்தில் அப்படி என்ன காரணமாக வெளியில் வர அவசியம் ஏற்பட்டிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தார். 


"பாண்டியன் பழமுதிர்ச்சோலை" யைத் தாண்டி வலதுபுறம் மாநகராட்சி பூங்காவை நோக்கி திரும்ப யத்தனித்தபோது ஒரு முதியவர் நாற்சந்தியில் ஒரு மூலையில் கையில் பையுடன் இரண்டு பக்கமும் பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டார். அவரை நெருங்கி "ஐயா, சாலையைக் கடக்கணுமா?" என்று கேட்டார். 


"எனக்கு எந்தப் பக்கம் போகணும்னு தெரியவில்லை" என்று சொன்னார். 

"நீங்க எப்படி வந்தீங்க?" .

"வரும்போது ஆட்டோவில வந்தேன். கடைவாசலில் இறங்கினேன். திரும்பப் போக விலாசம் ஞாபகமில்லை." முருகேசன் வியப்புடன்," எவ்வளவு நாளாக இந்தப் பகுதியில் இருக்கீங்க?"

"ஒரு மாதம் இருக்கும்"

"நீங்க யார் கூட இருக்கீங்க? தனி வீடா அல்லது அபார்ட்மெண்டா?"

"என் மகன் கூட இருக்கேன்.அடுக்கு மாடி குடியிருப்பு, பெயர் ஞாபகமில்லை "

"கைபேசி இருக்கா?"

"இல்லை "

"உங்கள் மகனின் கைபேசி எண் நியாபகம் இருக்கா?."

இல்லையென்று தலையாட்டினார். முருகேசனுக்கு புரிந்தது. 70 வயது தாண்டிய வர்களுக்கு இது போன்ற நியாபக மறதி வருவதுண்டு. கடந்த ஆண்டு காலமான அவருடைய அப்பாவுக்கு இருந்தது. அருகிலுள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி பெரியவருக்கு கொடுத்தார். அவர் தண்ணீரை நன்றியுடன் வாங்கிக் குடித்தார். அருகில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் "இவர் எவ்வளவு நேரம் இங்கே நிற்கிறார்?" என்று கேட்டார். "அரை மணி இருக்கும், சார்" என்று பதில் வந்தது.

"ஐயா, உங்க பேர், மகன் பேர்?"

"ஜானகிராமன் , மகன் பேர், விவேகானந்தன்"


"ஐயா உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கறேன்." எடுத்துக்கொண்டார். அவர் பழம் வாங்கிய கடைக்கு அழைத்துச் சென்றார். கடைக்காரர் பரிச்சயமானவர்தான்.

"ஐயா, ஒரு உதவி. இந்த பெரியவர் உங்க கடைக்கு வந்தவர்தான். திரும்பிப் போக வழி தெரியாம தவிக்கிறார். இவருடைய படத்தையும் பெயரையும் உங்க கை பேசிக்கு அனுப்பறேன். யாராவது தேடிக்கிட்டு வந்தா என்னைத் தொடர்பு கொள்ள சொல்லுங்க " கடைக்காரர் பெரியவரை ஒரு முறை பார்த்தார். சரியென்று தலையசைத்தார்.

கடைக்கு வெளியே வந்த முருகேசன் பெரியவரிடம்," பக்கத்தில் ஒரு பூங்கா இருக்கு. அங்க உட்கார்ந்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம் என்றார். இருவரும் மெதுவாக நடக்கத் தொடங்கினர்.


"ஐயா, உங்களுக்கு பரிச்சயமானவர்கள் யாராவது எதிரில் வந்தால் உடனே தெரிவியுங்கள்."

"சரி"

பூங்காவில் இருந்து நிறைய பேர் கிளம்பிச் சென்று கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்ததும் உள்ள பெஞ்சில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருந்தார். அவரருகில் இருவரும் அமர்ந்தார்கள். முருகேசன் தன்னுடைய கைபேசியை எடுத்து பெரியவரின் படத்தையும் பெயரையும் குறிப்பிட்டு திருவான்மியூரைச் சேர்ந்த சில வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தார். 

"ஐயா, இங்க உட்கார்ந்து இருங்க. நான் இரண்டு சுற்று நடந்துட்டு வந்துடறேன்." என்று சொல்லிவிட்டு அருகிலுள்ள பெண்மணியிடம் விவரத்தை சொல்லிவிட்டு முருகேசன் நடக்க ஆரம்பித்தார். நடந்துகொண்டே மனைவி சுமதியை அழைத்து விவரத்தை சொன்னார்., "சுமதி நான் வர 9 மணியாக விடும். அம்மா காத்திருக்க வேண்டாம். சாப்பிட சொல்லிடு. "


" பெரியவர் படத்தை எனக்கும் அனுப்புங்க. நான் என்னோட குழுக்களிலும் போடறேன். எதுக்கும் போலிசுக்கு சொல்லிடுங்க." 

சுமதியின் யோசனை சரியென்று பட்டது. இரண்டு சுற்றுகள் முடிந்து சென்றபோது மேலும் மூன்று பெரியவர்களோடு பேசிக்கொண்டு இருந்தார். அந்த பெண்மணி," தம்பி, நாங்க விசாரிச்சதில 10 மாடிகளுக்கு மேலுள்ள அபார்ட்மென்ட் போல இருக்கு. லிப்டில் 8யை அழுத்துவேன்னு சொல்றார். அவர்கள் வளாகத்தில் ஒரு சின்ன பூங்கா இருக்குன்னு சொல்றார்." அங்கு உள்ளவர்களும் அவருடைய படத்தையும் விவரத்தையும் பகிர்ந்து அடையாளம் தெரிந்தவர்கள் முருகேசன் கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளும்படி சில குழுக்களில் வாட்ஸ்அப் செய்தார்கள்.

அந்த பெண்மணி, "என்ன செய்யப் போறீங்க?" என்று கேட்டார். "போலீசில் தகவல் சொல்லிவிட்டு, ஒன்றிரண்டு அபார்ட்மென்ட்களுக்கு அழைத்து செல்கிறேன். இன்று ஒருநாள் என் வீட்டில் தங்க வைத்துவிட்டு நாளை காலையில்தான் ஏதாவது முடிவு செய்ய வேண்டும்." சற்று யோசித்த பெண்மணி,"அப்படியே செய்யுங்கள். எனக்கு தெரிந்த முதியோர் இல்லம் இருக்கு. தேவைப்பட்டால் அங்கு அழைத்து செல்லலாம்."

அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு பெரியவருடன் ஆட்டோவில் கிளம்பினார். "ஐயா, போலீஸ் ஸ்டேஷனில் தகவல் சொல்லிவிட்டு போயிடலாம். ஒருவேளை உங்களைத் தேடி வந்தாங்கன்னா உதவியா இருக்கும்." பெரியவர் சரியென்றார்.

ஸ்டேஷன் வாசலில் ஆட்டோ நின்றது.

"டிரைவர் 10 நிமிடம் வெயிட் பண்ணுங்க நாங்க வந்துடுவொம்"  


இன்ஸ்பெக்டர் அறை வாசலில் இருந்த காவலரிடம் விவரத்தை சொன்னார். ஒரு நிமிடத்தில் வெளியே வந்த காவலர் "ஐயா, கூப்பிடறார் . போங்க." என்றார்.


உள்ளே நுழைந்ததும் அமரும்படி சொன்னார் இன்ஸ்பெக்டர். பெரியவரிடம் , கேட்டார் "ஐயா கை உங்க பேர்?"

"ஜானகிராமன்."

"என்ன வயது?"

"எண்பது."

"சொந்த ஊர்?"

"முசிறி. திருச்சி கிட்ட."

"என்ன வேலை பாத்தீங்க?"

"பள்ளி ஆசிரியரா இருந்தேன்."

"எந்த பள்ளி?"

"அரசு உயர்நிலை பள்ளி."

"எப்ப சென்னை வந்தீங்க?"

"ஒரு மாதம் இருக்கும்."

"அதற்கு முன்னால்?"

"முசிறி தான்."

"உங்க மனைவியும் இங்கதான் இருக்காங்களா?"

"இல்லை. அமெரிக்கால உள்ள மகள் வீட்டுக்கு போயிருக்கா."

"நீங்க போகலியா?"

"எனக்கு விசா கிடைக்கவில்லை."

"ஒரு மாதம் முன்னாடி தான் அமெரிக்கா போனாங்களா?"

"ஆமாம்."

"உங்க மகன் வீட்டுல யார், யார் இருக்காங்க?"

"மகன், மருமகள், பேரன்."

"மருமகள் வேலைக்கு போறாங்களா?"

"ஆமாம்."

"பேரன் வயது?"

"15 இருக்கும்."

"நீங்க வரும்போது வீட்டில் யார் இருந்தாங்க?"

"யாரும் இல்லை."

"பேரன்?"

"ட்யூஷன் போயிட்டான்."

"எதற்காக தனியா பழம் வாங்க போனீங்க?"

"மகனும், மருமகளும் வர 8 மணியாகிவிடும் . நாளை என்னுடைய நண்பர் ஒருவர் வருகிறார். அதனால் பழம் வாங்க போனேன்."

"அவர் பெயர்?"

"சுவாமி நாதன்."

"எங்கே இருக்கார்?"

"சென்னையில்தான் இருக்கார். எங்கேன்னு தெரியவில்லை."

"உங்க கூட வேலை பார்த்தவரா?"

"இல்லை. எங்கூட திருச்சி தேசிய கல்லூரியில் படித்தவர்."

"வருடம் நினைவிருக்கா?"

"1957 முதல் 60 வரை."

"எந்த துறை?"

"தமிழ்."

"உங்கள் கைபேசி என்னாச்சு?"

"வீட்டுலயே வைச்சுட்டு வந்துட்டேன்."

"எண் நியாபகம் இருக்கா?"

"இல்லை."

"உங்க சட்டைப்பையில் உள்ள பொருட்களை கொஞ்சம் வெளியே எடுங்க."

பெரியவர் சட்டைப்பையில் உள்ளவற்றை மேசை மீது எடுத்து வைத்தார். சில நூறு ரூபாய் நோட்டுகள். பத்து, இருபது ரூபாய் நோட்டுகள். மூன்று பில் காகிதங்கள்.

ஒரு சாவி கொத்து. இன்ஸ்பெக்டர் பில் காகிதங்களை பரிசோதித்தார்.

ஒன்று பாண்டியன் பழ முதிர்ச்சோலை, இரண்டாவது ஒரு மருந்து கடை பில், மூன்றாவது ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பில் .

"இந்த இரண்டு கடைகளும் உங்க வீட்டு கிட்டக்க உள்ள கடைகளா?"

"ஆமாம்."

முருகேசன் பக்கம் திரும்பி இன்ஸ்பெக்டர், "சார், நான் ஒரு கான்ஸ்டபிளை இந்த பெரியவருடன் அனுப்பி இந்த கடைகள் இருக்கிற பகுதியில் விசாரிக்க சொல்றேன். நீங்க ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி கொடுத்துட்டு போங்க." என்றார்.

"நானும் கூட போறேன் சார். ஒரு வேளை விலாசம் கண்டு பிடிக்க முடியலைன்னா இன்றைக்கு ஒரு நாள் எங்க வீட்டுல இருக்கட்டும். நாளைக்கு நான் ஸ்டேஷன்ல கொண்டு வந்து விட்டுறேன்." என்றார் முருகேசன்.


சற்று வியப்புடன் பார்த்த இன்ஸ்பெக்டர்," உங்களால முடியும்னா தாராளமாக கூட போங்க."

வாசலில் இருந்த காவலரிடம் , "சார் கிட்ட ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிக்கங்க. பெரியவர் படத்தை கண்ட்ரோல் ரூமுக்கு அனுப்பி விவரம் தேட சொல்லுங்க. முசிறி பள்ளி தலைமை ஆசிரியர் கைபேசி எண்ணை வாங்கி எனக்கு கொடுங்க. 

சண்முகத்தை சார் கூட அனுப்புங்க. அந்த பில்கள்ல இருக்கற கடைகள் பக்கத்தில் இருக்கும் அபார்ட்மென்ட்ஸ்ல விசாரிக்க சொல்லுங்க. இன்னும் ஒரு மணி நேரத்தில் எனக்கு விவரம் சொல்லுங்க."

இன்ஸ்பெக்டரிடம் விடை பெற்றுக் கொண்டு, ஸ்டேட்மெண்ட் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.

சண்முகம் என்ற காவலர் வந்தார். "சார், நான் என் வண்டில வர்றேன். நீங்க ஆட்டோல பின்னாடி வாங்க " என்றார். 


ஆட்டோ டிரைவரிடம் மெடிக்கல் ஷாப் முகவரியை சொல்லி அங்கே வர சொல்லிவிட்டு முன்னால் கிளம்பினார். மணி எட்டு.ஆட்டோ மெதுவாக திரும்பி அவரை தொடர்ந்தது. முருகேசன், "ஐயா, ஏதாவது சாப்பிடுறீங்களா? பசிக்குதா?" என்று கேட்டார். "இல்லை, நான் 9 மணிக்குதான் சாப்பிடுவேன்" என்றார்.


மெடிக்கல் ஷாப் போகும்போது காவலர் விசாரித்துக் கொண்டிருந்தார். பின் பெரியவரைக் காட்டி ," இவரைத் தெரியுமா?" என்று கேட்டார். கடைக்காரர், "பார்த்தமாதிரி இருக்கு. ஆனால் ரெகுலர் கஸ்டமர் கிடையாது." என்றார். சற்று தூரத்தில் இருந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலும் விசாரித்தார்கள். கடைக்காரர் தெரியாதென்று சொல்லிவிட்டு அருகிலுள்ள பத்து மாடிக்கு மேலுள்ள மூன்று குடியிருப்புகள் பெயர்களை எழுதிக் கொடுத்தார்.

வின்டேஜ் எலைட், அட்சயாஸ் ஐஸ்வர்யம், ஆதித்யா என்க்லேவ்.


அங்கிருந்து கிளம்பும்போது முருகேசன் காவலரிடம் சொன்னார், "அபார்ட்மென்ட் உள்ளேயே ஒரு பூங்கா இருந்ததாகச் சொன்னார் ‌" 

வின்டேஜ் எலைட்டில் இருந்த காவலாளிக்கு இவரைத் தெரியவில்லை. அங்கு பூங்கா இல்லை. பெரியவரும் அந்த வளாகம் பரிச்சயமாக இல்லை என்றார்.


அட்சயாஸ் ஐஸ்வர்யம் முன் பூங்கா இருந்தது. பெரியவர் இதுவாக இருக்கலாம் என்றார். காவலளி அவரை பார்த்திருப்பதாக சொன்னார். "இரண்டு பிளாக் இருக்கு. இவர் பையன் பேரு இந்த லிஸ்ட்டில் இருக்கா பாருங்க." என்றார்.

"எட்டாவது மாடியைப் பாருங்க " என்றார் முருகேசன். பிளாக் ஏஇல் ஒரு மாடிக்கு 12 வீடுகளும், பிளாக் பியில் 12 வீடுகளும் இருந்தன. பிளாக் ஏ 801-812 வரை வீடுகளில் பெயர் இல்லை. பிளாக் பியில் 813 - 824 வீடுகளில் , 820க்கு நேர் விவேகானந்தன் என்ற பெயர் இருந்தது. காவலாளியிடம் 820யை இன்டர்காமில் தொடர்பு கொள்ள சொன்னார். காவலாளி தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னார். பிறகு சண்முகத்திடம், "இவரோட மருமகதான் இருக்காங்க.

பேசுங்க." என்று போனைக் கொடுத்தார்.


சண்முகம் போனில் , "அம்மா, இவர் உங்க மாமனார்தானா?"

"ஆமாம்."

"கேட்டுக்கு வந்து அவரை அழைச்சுட்டு போங்க." என்று போனை வைத்தார்.


அப்போது ஒரு பெரிய கார் உள்ளே நுழைந்தது. காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்ததும் சண்முகம் விரைப்பாக சல்யூட் அடித்தார். கார் அங்கு சற்று தாமதிக்க. சண்முகம் கார் அருகில் சென்று பேசினார். பெரியவரைப் பார்த்த அந்த நபர் காரை நிறுத்தி இறங்கி வந்தார்.


"ஐயா, என்னைத் தெரியுதா?" அவரை வணங்கிக் கொண்டே வினவினார்.

பெரியவர், "பார்த்த மாதிரி இருக்கு. ஆனா பெயர் நியாபகமில்லை." 

"நான் உங்க மாணவன் - நாகராஜன். 1972 முதல் 1977 வரை உங்க கிட்ட தமிழ் படிச்சிருக்கேன்."

"அப்படியா. நல்லது.இப்ப என்ன செய்யறீங்க?"

"ஐயா, உங்கள் ஆசிர்வாதத்தில் தமிழக காவல்துறையில் ஒரு அதிகாரியா இருக்கேன்."

"மிக மகிழ்ச்சியாய் இருக்கு."


அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சண்முகம் ஒரு ஓரமாக ஒதுங்கி கைபேசியில் இன்ஸ்பெக்டரிடம் பேசினார், "ஐயா, அந்த பெரியவர் வீட்டைக் கண்டுபிடிச்சுட்டோம். ஆர்டிஓ ஆபீஸ் பின் பக்கம் அட்சயாஸ் ஐஸ்வர்யம். டிஜிபி இங்க மக வீட்டுக்கு வந்திருக்காரு. அந்த பெரியவர் டிஜிபி ஐயாவோட ஆசிரியராம். அவர் பேசிகிட்டு இருக்காரு"


"நான் உடனே அங்க வரேன். நீங்க அங்கேயே இருங்க." என்றார் இன்ஸ்பெக்டர்.


அதற்குள் ஒரு பெண்மணி காரிலிருந்து இறங்கி வந்தார்.

"கோமதி, ஐயா, என்னோட தமிழ் ஆசிரியர். இங்கதான் அவர் பையன் வீட்டில் இருக்காராம்."இருவரும் அவரைக் காலைத் தொட்டு வணங்கினர்.


"வாழ்க வளமுடன்" என்று வாழ்த்தினார்.

அந்த பெண்மணி,"ஐயா. எங்க மகள் இங்க குடியிருக்கா. இன்று எங்கள் பேரன் பிறந்த நாள். நீங்க வந்து வாழ்த்தணும்." என்று வேண்டினார்.

"ஆமாம், ஐயா. ஒரு பத்து நிமிஷம் வந்துட்டு போங்க." என்று டிஜிபியும் வேண்டினார். "என் மருமகள் தேடி வருவாளே." என்று தயங்கினார். டிஜிபி சண்முகத்தை அழைத்து, "இவர் மருமகளிடம் ஐயா என் கூட இருக்காதுன்னு சொல்லு. நானே கொண்டு வந்து வீட்டில் விடறேன்னு சொல்லு. வீட்டு நம்பர் என்ன?"

"820 ஐயா, பி பிளாக்."

"ஐயா, அவர் விவரம் சொல்லிடுவார் . நாம போகலாம், வாங்க." என்றார்.

பெரியவர் முருகேசன் பக்கம் திரும்பி, "தம்பி, மிக்க நன்றி "

என்று கைகூப்பினார். டிஜிபியிடம்,"இவர்தான் இரண்டு மணி நேரமாக என் கூட அலைஞ்சுகிட்டிருக்காரு. ரொம்ப உதவும் பண்பு." டிஜிபி கைக்குலுக்கி, "மிக்க நன்றி. உங்கள மாதிரி பொறுப்புணர்வு உள்ளவர்களால எங்க வேலை எளிதாயிடுது‌." என்று முருகேசனைப் பாராட்டினார். 

"இது ஒரு சின்ன விஷயம் " என்று முருகேசன் புன்னகைத்தார். டிஜிபி தன் விசிட்டிங் கார்டை முருகேசனிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார்.

மணி ஒன்பது.


சண்முகத்திடம் விடை பெற்று முருகேசன் கிளம்ப எத்தனித்தபோது ஒரு நடு வயது பெண் அவர்களை நோக்கி வந்தார். சண்முகத்தை பார்த்து," நான் விவேகானந்தன் மனைவி. என் மாமனார் எங்கே?" என்றார். சண்முகம் டிஜிபி அழைத்துச் சென்றதைக் குறிப்பிட்டு அவரே கொண்டு வந்து விடுவார் என்றும் கூறினார்.


அந்த பெண்ணின் முகம் மாறியது. "ஏங்க அவர் வயசானவர். அவர் சாப்பிட்டு மருந்து சாப்பிடற நேரம்.

இப்படி என்கிட்ட சொல்லாம கூட்டிட்டு போலாமா?"


"நீங்க வீட்டுக்கு போங்கம்மா. பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க. அப்புறம் சார்தான் ஐயாவை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்தார்."


அந்த பெண்மணி முருகேசனிடம், "ரொம்ப நன்றி சார்." என்றார்.


முருகேசன் ,"பரவாயில்லை. எதற்கும் ஒரு நியூராலஜிஸ்ட் கிட்ட காட்டுங்க. என் அப்பாவுக்கும் இது போன்ற மறதி இருந்தது."


ஆட்டோ முருகேசன் வீடு சென்றடையும்போது மணி 9.15. ஆட்டோ டிரைவர் 100 ரூபாய் போதும் என்றார். " நீங்க செய்தது மிகப்பெரிய காரியம், சார்." முருகேசன் புன்னகைத்தபடி விடை பெற்றார். 


வீட்டில் நுழைந்ததும், "அம்மா, சாப்பிட்டுட்டாங்களா?" என்று கேட்டார்.

"8.30க்கு சாப்பிட்டாங்க." என்ற சுமதி , "நீங்க போன காரியம் என்னாச்சு?" என்று கேட்டார்.


"பெரியவர் வீட்டைக் கண்டு பிடிச்சுட்டோம்." என்று நடந்த விஷயங்களை விலாவாரியாக சொன்னார்.


சுமதி, "எனக்கு என்னமோ அவர் திரும்ப அவர் ஊருக்கே போறதுதான் நல்லதுன்னு தோணுது" என்றார்.


சாப்பிட்டுவிட்டு அம்மா அறைக்கு சென்று விவரங்களைச் சொன்னார் முருகேசன். "நல்ல காரியம் செஞ்சிருக்க. ஆண்டவன் ஆசிகள் உனக்கு எப்போதும் உண்டு." என கண்கள் பனிக்க சொன்னார் முருகேசனின் தாயார்.


அடுத்த நாள் மாலை கடற்கரையில் நடக்கும் போது திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் சேரனை சந்திக்க நேர்ந்தது. "சார், நேத்து டிஜிபி உங்களை ரொம்ப பாராட்டினார். எங்களையும் பாராட்டினார். ஒரு உதவி செய்யணும்."

"என்ன உதவி? சொல்லுங்க."

"தமிழ்நாடு காவல்துறை வெப்சைட்டில் இந்த நிகழ்வில் திருவான்மியூர் போலிசின் செயல்பாடு பற்றி உங்கள் அபிப்பிராயத்தை பதிவு செய்யுங்க."

"இன்னைக்கே செய்யறேன்."

"சார் இது என்னுடைய தனிப்பட்ட கைபேசி எண். என்ன அவசியம் ஏற்பட்டாலும் தொடர்பு கொள்ளலாம் "

என்று எண்ணைப் பகிர்ந்தார்.


இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நாள் மாநகராட்சி பூங்காவுக்கு சென்றபோது முருகேசன் பெரியவர் ஜானகிராமனை சந்தித்தார். "ஐயா, எப்படி இருக்கீங்க?" என்று விசாரித்தார். 

"நான் நல்லா இருக்கேன். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு ஆலோசகராக என்னை நியமிச்சிருக்காங்க‌. அன்னைக்கு சந்திச்சோமே என் மாணவர் போலிஸ் அதிகாரி ‌, அவர் ஏற்பாடு. வாரம் மூன்று நாள் பள்ளி கல்வி துறை அலுவலகத்துக்கு போகணும். அவங்க வண்டி அனுப்புவாங்க"

"இப்ப எப்படி வந்தீங்க?"அவர் பதில் சொல்வதற்குள் ஒரு இளம்பெண் அருகில் வந்து, "ஐயா, போலாமா?" என்று கேட்டாள். பெரியவர் முருகேசனிடம், "இந்தப் பெண்தான் என்கூட தினம் வந்துட்டு கூட்டிட்டு போறா. டிஜிபி நாகராஜன் பொண்ணு." அந்த பெண் முருகேசனுக்கு வணக்கம் தெரிவித்தாள். "என் பேர் அகிலா. அப்பா சொல்லியிருக்காங்க தினமும் ஐயாவோட ஒரு மணி நேரமாவது செலவு பண்ணும்னு. தினமும் மாலையில் ஐயாவை இங்க நடைப் பயிற்சிக்கு அழைச்சுட்டு வர்றேன். நடந்து வந்துட்டு நடந்து போவோம். இப்ப நான் தமிழில் எம் ஏ படிக்கிறேன். காலைல பத்து மணிக்கு ஐயாகிட்ட தமிழ்பாடம் ஒரு மணி நேரம் , அவர் வீட்டில் இருக்கும் நாட்களில் மட்டும்."


"கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவர் மகன் மருமகளுக்கு இதில் உடன்பாடா?"


"மகன் ஒண்ணும் சொல்லலை, ஆனா மருமகளுக்கு உடன்பாடு இல்லை. 'இதெல்லாம் ஆரம்பத்தில் நல்லாதான் இருக்கும், ஆனா பிரச்சினை வந்தா நாங்க தான் எதிர் கொள்ளணும்' அப்படின்னு சொன்னாங்க. அப்பா , 'நீங்க அவருடைய சுதந்திரத்தை கட்டுப்படுத்தினீங்கன்னா , நான் அரசாங்க வீட்டுக்கு ஏற்பாடு செய்து, ஆள் போட்டு பார்த்துக்குவேன்' அப்படின்னு சொல்லிட்டார். அவர் பையன் தலையிட்டு அந்தம்மாவை பொருட்படுத்த வேண்டாம்னு சொல்லிட்டார்." பெரியவர் தன் கைபேசியை அகிலாவிடம் தந்து முருகேசன் எண்ணை பதியச் சொன்னார். அகிலா முருகேசனிடம் எண்ணை வாங்கி பதிந்து விட்டு ஒரு முறை அழைத்தாள். முருகேசன் அவருடைய எண்ணைப் பதிந்து கொண்டார். அந்த பெண், "ஐயா என் வீட்டு எண் 402. அவசியம் ஒரு நாள் வீட்டுக்கு வாங்க." என்று சொன்னாள்.


முருகேசன் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு தன்னுடைய நடைப்பயிற்சியைத் தொடர்ந்தார். அவருடைய அப்பா கடைசி மூச்சு வரை , தன் சொந்த ஊரை விட்டு வர மறுத்தது நியாபகம் வந்தது. விலாசம் என்பது வெறும் கட்டிடத்தின் குறியீடு அல்ல, வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம் என்பது புரிந்தது.

 கிராமங்களில் ஒரு ஊரிலுள்ள அனைவரையும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நகரங்களில் அடுத்த வீட்டிலிருப்பவரையே அறியாமல் வாழ்வது சகஜம். "பிரைவசி" எனப்படும் தனிமனித சொகுசு சமூக அக்கறையை விழுங்கிவிட்டது. 


வீட்டுக்கு போனதும் அம்மாவிடம் "அம்மா, ஊர்ல உள்ள வீட்டை விற்க வேணாம். 5 வருஷம் வாடகைக்கு விடுவோம். நான் ரிடையர் ஆனதும் அங்கேயே போயிடலாம்." என்றார் முருகேசன். அது நடக்கலாம், நடக்காமல் போகலாம். அதற்கான வாய்ப்பு இருப்பது நல்லது என்று அவருக்கு தோன்றியது.







Rate this content
Log in

Similar tamil story from Drama