மதுரை முரளி

Classics Inspirational Children

5  

மதுரை முரளி

Classics Inspirational Children

தாயா? தாயமா?

தாயா? தாயமா?

13 mins
421


                                தாயா? தாயமா? – மதுரை முரளி

          குமரனுக்குப் படுக்கையில் பலமுறை புரண்டும், உறக்கம் வரவில்லை.

          உடம்பெல்லாம் ஒரே வலி.  அதையும் விட,  மனதில் இரணம். அதன் வலி ஒப்பிட முடியாதது. பக்கவாட்டில் கையை நீட்டி, துலாவிப் பார்த்தான்... மகள் ரேகாவை.

        மனைவி கவிதாவுடன்,  மகள் மாயமாகிவிட்டாள். உண்மையில்லை தான் ஆனாலும், உண்மை.

        நேற்றிரவு தான் மளிகைக் கடை கணக்கு வழக்கை முடித்து , கதவடைத்து , 

        தன் வீட்டுக்கதவை, குமரன் தட்டிய போது , இரவு மணி 11.

       “  வாப்பா.  ஏன் இன்னிக்கும் கால தாமதமா வீட்டுக்கு வர்றே?”  அதிசயமாய் அம்மா பார்வதி கதவு திறந்ததும் புரிந்து விட்டது.

       மனைவி கவிதா,ஏழுவயசு குழந்தை ரேகாவுடன்,  அவளுடைய அப்பா வீட்டுக்கு மாயம்.. என. 

       “ அ..அம்மா , கவிதா தூங்கிக்கிட்டு இருக்காளா? “ தெரிந்தும் கேட்டான் குமரன்.

        பார்வையில் வீட்டுப் பரிமாணத்தையே கண்களால் படம் பிடித்து , அவளைக் காணாது பரிதவித்துப் போனான்.

       “ இல்லைடா. என்னிக்கு உன் மனைவி நம்மளோட ஒட்டியிருந்தா?  அவளுக்கு,  அவங்க அப்பா வீட்டு வசதி இங்கேயும் வேணும்.  நீ என்ன குறைச்சலாவா வைச்சிருக்க?  உன் சக்தியையும் மீறி , படுக்கை அறையில கூட, ஏசி வசதி பண்ணியும்,  பேத்தி ரேகாவையும் கூட்டிகிட்டு போயிட்டா. அதுவும் வீட்ல, விளக்கு வச்ச நேரத்துல ‘விருட்’டுன்னு கிளம்பிப் போயிட்டா. அதை விடு.  நீ போய் கை, கால் , முகம் கழுவிண்டு வா. சூடா நாலு தோசை போட்டுத் தர்றேன். “

       அந்த நடு இரவிலும் தாய் பார்வதி,  தனது மகன் குமரனைப் பாசமாய்ச் சாப்பிட அழைக்க, 

       வாழ்க்கை சலிப்பு தட்டியது குமரனுக்கு .

       “ வே..வேணாம்மா . நான் புரோட்டா பார்சல் வாங்கி, கடையிலேயே சாப்பிட்டேன். “  வயிறு பசித்தும், அதை மறைத்து, அம்மாவின்  கைப்பிடித்து,  பக்குவமாய் உள்ளே அழைத்துப்போனான் குமரன். 

      “ இங்கே பாருடா, தன் குழந்தையோட பசி,  ஒரு தாய்க்கு தெரியாதா?  நீ போய் முகம் கழுவி வா.  அவ அலைபேசியில, உன்கிட்ட  தகவல் சொல்லலையா? “  என்றவளாய் அவன் கையை விடுத்து, பார்வதி அடுப்பறைக்கு நகர்ந்தாள்.

       அம்மாவின் அன்பை தட்ட முடியாது, அம்மாவுக்காகத் தான் விழுங்கிய மூணு தோசைகள் செரிக்காமல், தொண்டை குழிக்குள் தன் துக்கத்தைப் போல் அடைக்க,

       வெறுத்துப் போய் எழுந்து அமர்ந்து,  விட்டத்தை பார்த்த குமரன், ‘மடக்’கென சொம்பு நீரைத் தொண்டை குழியில் கொட்டியவனாய், அடுத்த நாள் தொடங்கிய பொழுதில், உறக்கத்திற்கு இறுகக் கண்ணை மூடினான். 

      ‘ஆறு’ மணி அலாரம்..’ தாலாட்டு’ பல பாடியும், மனமும் உடலும் ஒத்துழைக்க மறுக்கவே,

      படுக்கையில் பலமுறை புரண்டவன்,  பதறி அடித்து கிளம்ப,

      அங்கே குமரனை வரவேற்க,  கடைவாசலில் காத்துக் கிடந்தனர் சில்லரை வாடிக்கையாளர்கள்.

      வியாபாரம் என்னவோ பாதி பற்று--வரவில் தான் .

      பரபரப்பாய்க் கழிந்த பொட்டல மடிப்புகளுக்கு இடையே,  அழைத்தது அவனது அலைபேசி.

     “ உனக்கென்ன வேணும் சொல்லு ”  பாடல். பாய்ந்தெடுத்தவன் காதில் தேனாய்,  மகள் ரேகாவின் குரல்.

      “ அ..அப்பா,. குட் மார்னிங். என்னையப் பார்க்க எப்ப வர்றே? “   அடைத்துக்கொண்ட தொண்டையைக் கனைத்து  சரி செய்த குமரன் ,

      “ அ..அப்பா சாயந்திரம் வந்திடறேன்.  நீ பத்திரமா ஸ்கூலுக்குப் போ. 

அ., அம்மாக்கிட்ட  போனைக் கொடு. “  தாலி கட்டியவளைத் தயக்கமாய்க் கூப்பிட,

      “ ஹ., கேட்குது. நீங்க என்னிக்கு அந்தக் கிழவியை தொலைக்கறீங்களோ, அன்னிக்கு தான் நம்ம வாழ்க்கையில வசந்தம் வரும்”  தொடர்ந்து கவிதா இவனையும் வசைப்பாட,

     “ அ.. அண்ணே , அஞ்சு ரூபாய்க்குப் பச்சை மிளகாய் வேணும் . தாமதமானா, வீட்ல விரட்டுவாங்க  அண்ணே ” வாடிக்கையாளர் ஒருவர்,  இவன் நிலையை வாசம் பிடித்தது போல் கேட்க,

     “ பு.. புரியுது கவிதா . நா.. நான் நேர்ல வந்து..”  இவன் சொல்லி முடிக்கும் முன், அழைப்பு துண்டிக்கப்பட்டது எதிர்முனையில்.

      “ சே! நாரப்பொழப்புடா. ஒரு பக்கம் வயசான நோயாளியான அம்மா. மறுபக்கம் மனைவி-- மகள், மாற்று அணியில்  “ சத்தமாய் வாய்விட்டு குமரன் புலம்ப,

     “  அண்ணே.. விடுங்க. வீட்டுக்கு வீடு இதான் நிலைமை.  ஆம்பளைங்க அதுவும்,  புருசங்க பொழப்பே இதுதான். “  ஆறுதலாய் அதே வாடிக்கையாளர்.

       கண்களின் ஓரத்தில் கசிந்த நீரைக் கையை உயர்த்தி,  பனியனில் துடைத்தவனாய்,  பச்சை மிளகாயைப் பொட்டலம் மடித்தான் குமரன்.

      அன்று மாலை 5 மணியளவில் கடையடைத்து, மகள் ரேகா நினைப்பில், மாமனார் வீட்டு அழைப்பு மணியைக் குமரன் அழுத்த,

     சில நிமிட தாமதத்திற்கு பின்,  கதவு திறந்தாள் மனைவி கவிதா.

     “ ம்.,  வாங்க. “  குரலில் கனிவுக்கு பதில் கண்டிப்பு.

     “ எங்கே ரே.. ரேகா? “ பரிதவிப்பாய்க் குமரன்.

     “ம்., எங்கப்பா கூட,  அவ வெளியே போயிருக்கா. பேத்திக்கு ஆசை, ஆசையாய் வாங்கித்தர கூட்டிட்டு போயிருக்காரு. உங்களுக்குத்தான்  எங்களோட பேச, ஏன் பார்க்கவே நேரம் கிடையாதே! ”  என உள்அறைக்கு போனவள், சோபாவை கைக்காட்ட,

      கூசிப் போனவனாய்,  உடல் குறுக்கி அமர்ந்தான் குமரன்.

      “ இந்தாங்க காபி . நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்.  நான் அப்ப பேசியதையே இப்பவும் சொல்றேன்.  நீங்க எப்போ உங்க அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போறீங்க? “  முகத்தில் அறை வாங்கிய உணர்வில்,

       குடிச்ச காபி டம்ளரை பாதியிலேயே’ படக்’கென  டேபிள் வைத்த குமரன்,

     “ நீ.. நீ இப்படி பேசுறது சரியா?  அவங்க என் அம்மா.  நீ என்ன கேட்டாலும்,  நான் உடனே வாங்கித் தரேன்.  உன்னோட உணர்வுகளை, ஆசைகளை புரிஞ்சுகிட்டு நடக்குறேன்.  நான் அவங்களோட ஒரே வாரிசு.  சின்ன வயசிலேயே எங்க அப்பா காலமாகி,  அவங்க தான்..”  பேசிய குமரனை , தன் வலது கையை தூக்கி பேச்சை நிறுத்தச் சொன்னாள் கவிதா.

      “ ஆமா..அவங்க,  அதான் உங்க அம்மாதான், உங்களை ஆளாக்க,  வடை சுட்டாங்க.  பல வீட்ல பாத்திரம் தேய்ச்சாங்கன்னு,   ஒரே புலம்பலா ஆரம்பிச்சு.. புராணம் பாடாதீங்க.  புதுசா ஏதாவது ? “  வாயைச் சுழிச்சு கவிதா பேச ,

     “ அ..அப்ப, நான் சொல்றது பொய்யா ? உன்னோட தாயம் விளையாட்டில, என்னை இப்படி ஏன் உருட்டற?  எனக்கு வர்ற கோபத்தில..” வாயில் சொற்கள் சிக்கவே, கோபமாய்க் குதித்து எழுந்தான் குமரன் .

       கால் நிமிடம் உள்ளுக்குள் பதைபதைத்துப் போனாள் கவிதா.

      “ எ.. என்ன வீரமா?  எல்லாம் என்கிட்ட தான். அப்படியே  அமைதியாக உட்கார்ந்து ஆலோசனைப் பண்ணுங்க.  அதுவும்,  உங்க உயிர் நண்பன் விஜய் இருக்காரே,  அவர்கிட்டயும் இதைக் கேளுங்க.  அதுக்கப்புறம்,  நான் சொன்ன முடிவோட எங்க வீட்டுக்கு வாங்க . “  எனச் சொல்லியவாறே அவள் எழ,

      “ ரே..ரேகாவை நான் பார்க்கணும்.  “ உடைந்த குரலில்  மீண்டும் குமரன்.

      “  இன்னுமாப் புரியல உங்க புத்திக்கு?  நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சு தானே, நான் அவளை வெளியில அனுப்பிட்டேன். “ குதர்க்கமாய்ப் பேசி, வாய்க்கோணி சிரித்தாள் கவிதா .

      “ உ..உன்னை.. ஐயோ, நான் என்ன பண்ணுவேன்? “  தலையில் அடித்தவனாய் வாசலை நோக்கி நடந்தான் குமரன்.

     நேராய்க் கடையை  அடைந்தவனை,  எதிர்நோக்கி வாசலிலேயே சில வாடிக்கையாளர்கள்.

     “  அண்ணே,  கடையை அடைக்கவே மாட்டிங்களே!  பார்த்தா ரொம்ப சோர்வா,  சோகமா தெரியறீங்க. உடம்பு சரியில்லையா? “  பாசமாய் ஒரு பெண்மணி,  சகோதரி உணர்வில்.. உறவில் வினவ,

       உள்ளுக்குள் துக்கினாலும்,  சில வினாடிகள் திக்கித்துப் போனான்.

      “ இ..இல்லைக்கா.  அது.. என்ன சொல்ல ? சரி, சரி,  மன்னிச்சிடுங்க.  வரிசையாச் சொல்லுங்க “  பெயரளவில் சுறுசுறுப்பான குமரன்,பொட்டல மடிப்பில் ஒழுங்கில்லாமல் கை தவறி கீழேப் போட, தானியங்கள் பல உருண்டு போயின கடைக்குள்.

      “ என்ன தம்பீ ? பதட்டமா தெரியறீங்க. ரொம்பச் சரியா வேலை செய்ற நீங்களா இன்னிக்கு , இப்படி? “  பக்கத்து தெரு பெரியவர் பதறினார்.      

      “ ஓ..ஒண்ணுமில்லே.  நான் கூட, கடையைச் சீக்கிரம் அடைக்கணும்னு முடிவில இருக்கேன் ஐயா.  கொஞ்சம் சொந்த வேலை “  மேற்கொண்டு பேசி பிரச்சனைக்குள் போகாது, 

       வாடிக்கையாளர்களை நகர்த்திய குமரன்,  சற்று சோகமான மனநிலையில் , கதவை மூடி ,  தகவல் அட்டையை மாட்டினான்.

                          “ இரண்டு நாள் விடுமுறை”

      வீட்டை அடைந்த குமரனை எதிர்நோக்கி,  வாசலிலேயே காத்திருந்தாள் பார்வதிம்மா.

     “ டேய், என்னடா மணி இரவு ஒன்பது கூட ஆகலை ?  அதுக்குள்ள வந்துட்ட !  உடம்பு முடியலையா? “  பார்வதி , தள்ளாடி நுழைந்த குமரனை பிடித்து நெற்றி, முகம் என மாற்றி மாற்றி தொட்டுப் பார்த்தாள்.

     “  அம்மா  “ வெடித்து அழுதான் குமரன்.

     “  என்னப்பா? “  பார்வதியும் கலங்கிப் போனாள். அப்படியே, மகனைக் வாரிக் கட்டியணைத்தவள்,

     “  சொல்லுப்பா..மனசில எதையும் பாரமா வைச்சுக்காதப்பா.  அம்மா மேல வருத்தமா ?  எனக்கு கூட,  வீடு ரொம்ப அமைதியா, ஏதோ சூன்யபூமி மாதிரி தெரியுது. அதுவும்,  என் பேத்தி ரேகா இல்லாம, அவ  கால் கொலுசு சத்தம் கேட்காம மனசு தவிக்குதுடா. “  அம்மாவின்  அரற்றலில்,  மேலும் உடைந்தான் குமரன்.

     “  அம்மா.. நான் பாவிம்மா . நம்ம குடும்பத்தில, ஏன் இப்படி  சண்டை வந்துகிட்டே இருக்கு ?  உனக்கோ மகள் கிடையாது.  நான் மட்டுந்தான். கவிதாவையே, உன் மகளா நினைச்சுக்க கூடாதா?  எனக்கு நிம்மதியே இல்லை.  வீட்டுக்கு வரவே பிடிக்கலைம்மா. அப்படியே எங்கேயாவது..” 

வேகமாய்க் குமரனின் வாயைப் பொத்திய பார்வதி,

     “ இதுக்கு மேல நீ பேசின,  நானும் உங்க அப்பா போன இடத்துக்கே போயிடுவேன் “  பார்வதி கையை உயர்த்தி,  மேலே காட்ட,

    “  அம்மா..”  மீண்டும் உடைந்து,  அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதான் குமரன் .

    அடுத்த நாளும்,  அதே மனநிலை குமரனுக்கு.

     கவிதா குறிப்பிட்ட தன் உயிர்நண்பன் விஜய்யை, அலைபேசியில் அழைத்துப் பேசி,  மாலையில்  சந்தித்தான். 

     “ டேய் குமரா, என்ன இப்படியிருக்கே? எதையோ இழக்கக்கூடாதை இழந்தவன் மாதிரி இருக்கே. “  ஆதரவாய்,  தோளை அணைத்து விஜய் பிடிக்க,

     அப்படியே சரிந்தான் நண்பன் மீது..குமரன்.

    “  என்னால தாங்க முடியலை.  நீதான்  இதுக்கு தீர்வு சொல்லணும். “  ‘படபட’ வென பத்தே நிமிடத்தில் அனைத்தையும் அவனிடம் கொட்டினான் குமரன். 

     சற்று சோகமாயும்,  ஆறுதலாயும் சிரித்த விஜய்,

   “ முதல்ல,  நீ சகஜமான மனநிலைக்கு வா.  இந்த மாமியார்-- மருமகள் பிரச்சனை உன்னோடது மட்டும் இல்லை, என்னோடதும் கூட.  சொல்லப்போனா,  உலகம் முழுதும் உள்ள பிரச்சனை.  தீர்வைத் தேடி தீவு, தீவாப் போனாலும் தீராது. “

    “ டேய், என்ன பேச்சுடா இது?  ஒரு ஆலோசனை கேட்டா,  அடுக்கிறியேடா உன் வசனத்தை . “

     “ ஒரு கசப்பான உண்மை சொல்றேன் . ஆனா,  மறுக்க முடியாத உண்மை.  நீ இதை எப்படி எடுத்துப்பியோ எனக்கு தெரியலை . ஆனா, கேளு... “ சற்று இடைவெளிவிட்டு தொடர்ந்தான் நண்பன் விஜய். 

     “ அம்மா.. ஓர் ஆணின் ஆயுளில் முதல் 25 ஆண்டுகள்.  அதற்கு அடுத்த ஐம்பது ஆண்டுகள்,  ஒரு ஆண் தன் மனைவியுடன் சேர்ந்து வாழணும்.  அது கூடவோ குறைவாகவோ ஆகலாம்.  அது..அவங்க,  அவங்களோட பாக்கியம். “  சொல்லியவனாய்ச் சிரித்தான் விஜய்.

    “  எப்படிடா , உன்னால சிரிக்க முடியுது ? உனக்கும் இந்த பிரச்சனை உண்டா? “ ஆழமாய் நண்பனைப் பார்த்தான் குமரன்.

    “  ஏற்கனவே  நான் சொன்ன பதில்.  இது,  உலகளாவிய உளவியல் பிரச்சனை.  கவனி.  அம்மா பாசம் எப்போதும்  குறையவே குறையாது.ஆனா,  பையனின் திருமணத்திற்கு பின்னாடி, அதில மாற்றம் வரும்.  எப்போதுமே அம்மா மகனுக்கு இடையே,  கண்ணுக்கு தெரியாத மெல்லிய தடுப்புச் சுவர் உண்டு.  ஆனா..”  சற்று நிறுத்தினான் விஜய்.

      “  ஆனா?..”  அதையே திரும்பச் சொன்னான் குமரன்.

      “  பொறுமையாக் கேளுடா.  கணவனுக்கும்,  மனைவிக்கும் இடையே எவ்வித ஒளிவு மறைவும் இல்லை.  கூடாது.  காரணம்,  பரஸ்பர  அர்ப்பணிப்பு தான் நல்ல அன்பின் அஸ்திவாரம்.  அதனால , நீ  உன் அம்மாவை,  வாழ்க்கைங்கிற பயணத்துல பின் இருக்கையில அமர்த்தி,  முன்னிருக்கையை மனைவிக்கு கொடு. “

      “ இது எப்படி?  உன்னோட இந்த கருத்துக்கு என்ன காரணம்? “  சமாதானம் அடையாமல் குமரன் கோபப்பட்டான்.

      “ இது என் கருத்தில்லை. என்னோட குடும்பத்திலேயும் வந்தது  இதே நிலை . அப்பொழுது, நான் சந்தித்த மனநல ஆலோசகர் கொடுத்த அறிவுரை.. வழிகாட்டல். “

     “  நீ சொல்றபடி பார்த்தா.. என் மனைவி,  எங்கம்மாவை வீட்டைவிட்டே வெளியே விரட்ட சொல்றா.  அதை அப்படியே நான் கேட்கணுமா? “  ஆவேசப்பட்டான் குமரன் .

     “ மீண்டும் சொல்றேன். இது,  உன்னோட சமாளிப்புப் திறனை பொறுத்தது அல்லது அவங்க இரண்டு பேருடைய மனநிலை மற்றும் புரிதல் சார்ந்த விஷயம்.  ஆனா,  உனக்கு மன அமைதியான,  சந்தோசமான வாழ்க்கை வேணும். இப்ப நீ தான் , உன் நிலையை தீர்மானிக்கணும். “ 

     விஜய் தன் கருத்தை  குமரனிடம் ஆழமாய்ப் பதிவு பண்ணி விட்டு காத்திருக்க,

   “  சரிடா,  உன் உதவி எனக்கு தேவைப்படுது . நான் ரெண்டு நாளைக்கு கடைக்கு விடுமுறை விட்டுட்டேன்.  கவிதாவுக்கும் ,  எங்க அம்மாவுக்கும் பிரச்சனை பல  வருஷமா இருக்கு.  எனக்கு ஒரு நல்ல முதியோர் இல்லம் காண்பி.  அதுவும்,  நம் பகுதியிலேயோ அல்லது வெகு அருகிலேயோ”  சொன்னவன்,

     விஜய்யுடன் களத்தில் இறங்கி , ‘அந்த’ இல்லம் தேடி விவரங்களை சேகரித்தான்.

     இடையிடையே மனம் பதட்டப்பட்டு,  பரிதவிக்கும் போது  எல்லாம் விஜய் சமாதானம் சொல்ல , சற்று நிதானப்படுவான் குமரன்.

     அடுத்து,  அம்மாவுக்கான தேவைகள் பற்றிய எண்ணம் வர,

     அனைத்தையும், அம்மாவுக்காக புதிதாய் வாங்க தீர்மானித்தான் குமரன்.      

     முதலில்,  அம்மாவுக்கு பிடித்த நீல நிற டிரங்குப் பெட்டி.

     உடுத்த பச்சை நிறப்புடவை மற்றும்  மற்ற உடுப்புகள் .

     இப்படி , கண்ணை மறைத்த கண்ணீருக்கிடையே, நேரங்காலம் பார்க்காது தேடித் தேடி  பொருட்களை வாங்கினான். 

     ஒருவழியாய் அம்மாவின் தேவைகளை யோசித்து,  யோசித்து சேகரித்த குமரன்,

    அம்மாவை தான் பிரிய வேண்டிய நிலையில்,  சுமக்க முடியாத சுமையாய், அவளுடைய பாசம் கண்ணீராய்க் கண்ணை மறைத்து.

    புது பெட்டியுடன் வண்டியில் இருந்து இறங்கியவன் , தன் வீட்டு வாசலை அடைந்து உள்ளே நுழைந்தான்.

   “  என்னடா,  எங்கே போனே? கடை திறக்கலையா ? “ என்றவளாய் வந்த பார்வதி,

    மகனின் கையிலிருந்த  பெட்டியைப் பார்த்து விக்கித்து போனாள்.

  “  அம்மா,  என்னைய மன்னிச்சிடு.  நான் வாழத் தகுதி இல்லாத,  தைரியம் இல்லாத உன் பையன். இ.. இது”  பெட்டியைக் காட்டியவன்,

    அதன் மீது ஓங்கி ஒரு குத்துவிட்டு, ‘ஓ’ வென அழ,

   “ டேய்., புரியுதுடா... உன்னோட நிலைமை.  இங்கே பாரு.  நான் உன்னோட தாய் . ரெண்டு நாளா,  நீ என்கிட்ட முகம் கொடுத்துப் பேசலை.  இதுக்கும் மேல என்னால இந்த நிலைமையை தாங்கிக்க முடியாதுடா.  அதான்..”  என்றவள்,

     வீட்டில் இருந்த ஒரு பழைய டிரங்கு பெட்டியை கொண்டு வந்து , குமரன் முன் வைக்க,

    அதிர்ச்சியில் ஆடிப் போனான் குமரன் .

    “ இதில,  எனக்குத் தேவையான இரண்டே இரண்டு செட் துணிமணி வச்சிருக்கேன் . கூட,  என் அன்றாட தேவைக்கான பொருட்கள்.  என்னைய,  நல்ல ஆசிரமா பார்த்து  சேர்த்திடு. உனக்கு கோடிப் புண்ணியமாப் போகும்.“  என்ற பார்வதி கையெடுத்து மகன் குமரனைக் கும்பிட,

  “ ஐயோ.. என்னோட இந்த  நிலைமை, உலகத்தில யாருக்கும் வரக்கூடாது “  கதறி அழுதான் குமரன்.

    பரபரப்பாயும், பாசமாயும் நகர்ந்தன..பல நிமிடங்கள்.

   அம்மாவின் ஒரு கையைப் பற்றிக்கொண்டு , மறு கையில் அவள் பெட்டியை சுமந்து கொண்டு  நடந்த குமரனின் மனதில்,

     பள்ளிக்கூடத்திற்கு அம்மா,  தன்னை இப்படி அழைத்து சென்ற காட்சிகள்.. குமரனின் கண்களில் , அலை, அலையாய் வந்து நின்றது கண்ணீராய் .

    வாசல் கதவு அடைக்க தயாரானவன்,

    ஆட்டோ ஒன்று வாசலில் நிற்கும் சத்தம் கேட்டுப் பார்வையை திருப்பினான்.

    பார்வதி அம்மாவும், மெல்ல தன்  பார்வையைத்  திருப்ப, 

    மருமகள் கவிதா கண்கலங்கியவளாய்..மகள் ரேகாவை கைப்பிடித்தபடி, வாசலில் வந்து இறங்கினாள்.

    பேத்தி  ரேகாவின் கையிலும் ஒரு பெட்டி.

    வேகமாய் ஓடி வந்த கவிதா, தன் கணவன் குமரன் மற்றும் மாமியார் பார்வதி காலில் விழ,

    அங்கே அதிர்ச்சியும் , ஆச்சரியமும்  ஒருசேரக் கைகோர்த்தன.

    “  கவிதா.. என்ன நடக்குது ? “  குமரன் குழப்பத்தின் உச்சியில்.

   “ முதல்ல, நீங்க ரெண்டு பெரும் என்னை மன்னிச்சு, நம்ம  வீட்டுக்குள்ள வாங்க. “ என்றவளாய்,

     தன் மாமியார் மற்றும் கணவன் குமரன் கூடவே,  குழந்தை ரேகா சகிதம் நுழைந்தவள் , உணர்ச்சிபொங்கப் பேசத் தொடங்கினாள். 

    “ நீங்க,  எங்க வீட்டுக்கு வந்து போனதும்.. எல்லா விவரத்தையும் எங்க அப்பாக்கிட்ட சொன்னேன்.  அவர் என்னைக் கண்டிச்சிட்டு,  பெத்த தாயை கடைசி வரை கண்கலங்காம காப்பாத்தற மருமகன் தான் நமக்கு அழிவில்லாத சொத்து.  என் காசு,  பணம் எல்லாம் அதுக்கு முன்னாடி குப்பை “ ன்னு  அறிவுரை சொன்னாரு .

    கவிதா பேசப்பேச, பார்வதிக்கும், குமரனுக்கும் பெரிய ஆச்சரியம்.

   “ அப்படியும் நான்,  அத்தையை பெட்டியோட , ஆசிரமத்திற்கு அனுப்ப உங்ககிட்ட சொன்னதை  அப்பாகிட்டச் சொன்னேன்.  அப்ப.. “ சொன்னவாறே ,  பக்கத்தில் நின்ற மகள் ரேகாவை கட்டியணைத்த கவிதா,

    “  உடனே,  அப்ப நானும் , பாட்டியோட கிளம்பறேன் . அப்பா—அம்மா, நீங்க  ரெண்டு பேரும் சண்டையை முடிச்சிட்டு,  என்னையும் பாட்டியையும் அங்கே வந்து பாருங்கன்னு.. இவ,  தன் ஸ்கூல் பெட்டியை தூக்கிட்டாங்க.நான் ரொம்ப அதிர்ச்சியாயிட்டேன்  . இவதான் எனக்கு பாசத்தை நல்லாப் புரிய வைச்சிட்டா.  இப்பதான்,  பாசத்தோட வலிமை எனக்கு புரிஞ்சது. இனிமே நாம ஒண்ணா இருப்போம் “ மனைவி கவிதா பேசப் பேச,

    புரிந்தும்,  புரியாத நிலையில் பேந்த பேந்த  முழித்த குமரன்,

    மகள் ரேகா தன் கையை பிடித்து, 

   “ அப்பா..”  என   அழைத்ததும், சுய உணர்வுக்கு வந்தான்.

    அம்மா பார்வதியும், மருமகள் கவிதாவை கட்டி அணைக்க, உடன்  

    மொத்தமாய் அம்மா, மனைவி,  மகள் ரேகாவைப் பாசமாய் வளைத்துப் பிடித்தான் குமரன் .

    “ என் தங்கமே..” எனக் கொஞ்சிய பாட்டியை, 

    “ஐய்ய.. விடு பாட்டி. ”  என  வெட்கப்பட்டு ,குஷியாய்ச் சிரித்தாள் குழந்தை ரேகா.

                                         -௦-௦-௦


Rate this content
Log in

Similar tamil story from Classics