மதுரை முரளி

Classics Inspirational Children

4  

மதுரை முரளி

Classics Inspirational Children

தேவதை பாசம்

தேவதை பாசம்

6 mins
316


                           “தேவதை பாசம்” -  சிறுகதை

                                                        --  மதுரை முரளி

       “ பூங்கதவே தாழ் திறவாய் “ முணுமுணுப்பாய்ப் பாடிய கிருஷ்ணன், இலேசாய்த் தட்டியும் கதவு திறக்கப்படாது போக,

         கை விரலால் பலமாகத் தாளமிட்டு,  தன்  மகள் மீனாவை துயில் எழுப்ப , சத்தமாய்ப் பாடினார் கிருஷ்ணன்.

        ‘ பட்’ கதவு திறந்தது.

        மீனாவின் பெரிய விழிகளில், தூக்கம் தொலைய மறுத்து துயிலுக்கு மீண்டும் அழைக்க ,

       “காபி., காபி”  இரயில்வே காபி இராகத்தில் பாடிய கிருஷ்ணன்,

        பக்கத்தில் இருந்த டேபிளில் காபியை வைத்துவிட்டு,  வேகமாய் உள்ளே பாய்ந்து,  தரையில் கிடந்த மீனாவின் மெத்தையை சுருட்டினார்.

       “ ஐயோ.,  அப்பா.  போன வருஷம் வரைக்கும் தான்  காலேஜ் படிப்புன்னு என்னை நீங்க தூங்க விடல.  இப்ப, எனக்கு  ஆபீஸ் தானே.  அதுவும் பத்து மணிக்கு..”  குறுக்கே வந்த கொட்டாவியை இடையில் விட்டு கோபமாய்க் கத்த,

        “கூல்., கூல் “  எனச் சமாதானப்படுத்திய கிருஷ்ணன், 

        “ இதேயிது,  உங்கம்மா கீதா இருந்திருந்தா, உனக்கு என் தொல்லையே இருக்காது.  என்ன செய்ய?  அவ மேலே போய் வருஷம் ஆறு ஆயிடுச்சு. “  சென்டிமெண்டலாய் மீனாவின் மனதைத் தொட,

      “ அடடா,  ஆரம்பிச்சிடுவியேப்பா... புரியுது.  இப்ப மணி எட்டு.  இன்னும் அரை மணியில,  நான் ரெடி. இனிமே,  எனக்கு எல்லாமே நீ தானே “ என  அப்பா மீது பாய்ந்து,  செல்லம்மாய்க் கிருஷ்ணனை கட்டிக் கொண்டாள் மீனா.

        மீனாவின் அம்மா கீதா இவளது பள்ளி இறுதி வகுப்பிலேயே தவறிப் போனாள்.

அதுவும்,  மீனாவின் தேர்வு முடிவு... பள்ளியிலேயே முதல் நிலை என வந்த நிலையில்.

      அதைச் சொல்ல,  பாய்ந்து ஓடி வந்த மீனாவை ஆர்த்தி எடுத்து வரவேற்க , அவள் அம்மா இல்லை வீட்டில்.

      முந்தின நாள் வரை,ஆஸ்பத்திரியில் அரை நினைவிலிருந்தவள்,  முழுதாய் மூடிவிட்டால் கண்ணை அன்று. 

     அன்றிலிருந்து,  இன்று வரை.. இனியும் , அப்பா கிருஷ்ணன் தான் சகலமும் மீனாவிற்கு.

    “  மீனம்மா., மீனம்மா”  அடுத்த பாட்டு கிருஷ்ணனிடமிருந்து.  ‘ஆசை’யாய்த் தன் மகளுக்காக கையில் குளிக்க துண்டு மற்றும் இத்யாதிகள். 

    “ஐயோ., அப்பா, முடியல.  இப்படி என்னை செயல்படவே விட மாட்டேங்குற.  அதீத பாசம்.. ஆபத்துன்னு நீ தானே அடிக்கடி சொல்லுவேப்பா.  நீ கொஞ்ச நேரம் ஓய்வாயிறு. மீதி சமையலை நான் முடிக்கிறேன். “  ஓட்டமும் , நடையுமாய் சமையலைறையை இவள் அடைய,

     அங்கே காலை டிபன் தொடங்கி,  மதியச் சாப்பாடு வரை சுடச்சுட,  இவள் கேரியரைப் பங்கு போட்டு பல்லிளத்தன.

      “ ஓ.. முடியல  “ மீண்டும் திரும்பி அப்பா கிருஷ்ணனைப் பார்க்க,

      தோளில் கிடந்த துண்டால் விழி ஓரத்தில் கசிந்த கண்ணீரை ஒற்றியவராய்க் கிருஷ்ணன்.

      இப்படி தினந்தினம் ஓடிய மீனாவின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் .

      நேற்று இரவு ஆபீஸ் முடிந்து,  மழையில் முழுமையாய் நனைந்து வீட்டுக்கு போனதும்,  அப்பாவுடன் நடந்த உரையாடல் இப்போது நினைவுக்கு வந்தது.

    ‘ கிர்’  காலிங்பெல் அடித்த மறுநிமிடமே,  கதவைத் திறந்த அப்பா கிருஷ்ணன்,  தன்னைக் கடுமையாய் பேசினது நினைவுக்கு வந்தது.

     “ மீனா,  என்ன இது? நான்  உனக்கு பல தடவை

 சொல்லியிருக்கேன்.  உன்னோட அலுவலகப் பையில,  ஒரு மடக்கு குடைய நிரந்தரமா வச்சுக்கோன்னு. இது மழைக்காலம்னு எச்சரிக்கை செய்திருக்கேன். “  உரக்கக் கத்தியவர் வேகமாய் ஒரு துண்டை நீட்ட,

      இலேசான உடல் நடுக்கத்துடன்,  வெடுக்கென பிடுங்கினாள் மீனா. 

      காலில் ஈரம் ஒட்டி கட்டிய சுடிதார் பேண்ட்டுடன் தன் அறைக்குள் தடுமாறி நுழைந்தவள்,  ஐந்து நிமிட ஆடை மாற்றலுக்கு பின்,

     தலையை இலேசாய் அவிழ்த்து விட்டவாறே, ஆவேசமாக ஹாலுக்கு திரும்பினாள்.

    “ ஏம்பா.,  இப்படிக் கத்துறீங்க?  அதுவும்,  ஆபீஸ்ல இருந்து திரும்பியதும்,  வீட்டு வாசல்ல வைச்சே? ஒரு நாள் மழையில நனைஞ்சா என்ன ஆயிடப் போகுது?  அப்படிக் காய்ச்சல் வந்தா இருக்கவே இருக்கு ..டோலோ 650. “  எனத் தன் பங்குக்கு குரல் உயர்த்த,

       கிருஷ்ணனுக்கு உஷ்ணம் சற்று கூடியது.

      “ இங்கே பாரும்மா.  வியாதியை நாம தேடிப் போகக் கூடாது.  அதான் என்னுடைய பாலிசி”  என்றவாறே மீனாவுக்கு உதவ முயல,

      அப்பாவின் கையை தடுத்து இடைமறித்தாள் மீனா. 

      “ அப்பா.,  ப்ளீஸ். நிச்சயமா என்னால முடியல.  திரும்ப, திரும்பச் சொல்றேன். உன் சொற்பொழிவைக் கொஞ்சம்  நிறுத்து. இப்படியே கொள்கைன்னு ஒரு டஜன் அடுக்குவே. நான் என்ன சின்ன குழந்தையா?  எப்பப்பார்த்தாலும், ‘இப்படிச் செய்’, ‘அப்படிச் செய்’ ன்னு எனக்கு உத்தரவு போடறதே உனக்கு ஒரு வேலையாப் போச்சு. சுயமா,  என்ன செயல்பட விடவே மாட்டேங்கிற. “  பேச்சைத் தொடர்ந்தாள் ஆக்ரோஷமாய் மீனா.      

     “ உன்னோட எண்ணத்தை என்கிட்ட திணிக்காதப்பா. நான் செயல்பட எனக்குன்னு ஒரு இடம் கொடு.  எதையுமே நானே செஞ்சாதான் எனக்கு அது அனுபவமா புரியும், தெரியும். என் மேல உள்ள அதீத அன்பில,  நீ என்னை முழுமையா ஆக்கிரமிக்கப் பார்க்கிற.  பலன்., என்னை , எனக்கே பிடிக்காமப் போகுது சில சமயம். என்னுடைய ஒரிஜினாலிட்டி தெரியாம,  என் முகம் மறந்து,  உன் முகமே எனக்கு முதல்ல.. மனசுல வந்து போகுது. “

 மீனா மேலே பேசப் பேச,

     ‘ சட்’ டென கொதிநிலைக்குப் போன கிருஷ்ணன்,

     “ நிறுத்து.  உனக்கு என்ன தேவைன்னு உன்னைப் பெத்த, வளர்த்த எங்களுக்குத் தெரியாதா?  அதுவும்,  உன் அம்மா இல்லாததுனால எனக்கு பொறுப்பு ரெண்டு மடங்கு.  அனுபவம் இரண்டு வகைப்படும் . ஒண்ணு சுய அனுபவம். மற்றது பிறரது

 அனுபவப்பாடம். எல்லாத்தையும் சுயமாச் செய்து பாடம் படிக்கணும்னா,  வாழ்நாள் போறாது. அதுக்குத்தான் பெரியவங்க தான் அனுபவப்பட்டதைச் சொல்லி,  சின்னவங்களை வழி நடத்தி,  நல்ல பாதைக்கு வழி காட்டுறாங்க.”

     “ அப்பா, மீண்டும் சொல்றேன்.  உன்னோட பொறுப்பு எனக்கு புரியுது.  என்னோட பொறுமையோட எல்லை உனக்கு புரியல. எனக்குன்னு ஒரு மனம் இருக்கு.  அது, சில சமயம் ஜாலியா இருக்க தோணும்.  அப்படித்தான் இன்னிக்கு நான் மழையில நனைஞ்சுகிட்டே பஸ் ஸ்டாப்ல இருந்து நடந்து வந்தேன்.  இது தவறா?  உனக்கு எல்லாமே நேரப்படி நடக்கணும்.  நீங்க உட்காரும்போது கெடிகாரத்தைப் பார்த்துகிட்டு உட்காருவே. பத்து நிமிஷம் ஓய்வு . அடுத்தது இந்த வேலைன்னு புலம்புவ. நான் ரொம்ப ‘ரிலாக்ஸ்’ டைப்.  எனக்கு எப்பத் தோணுதோ அப்பத்தான் அந்த வேலையை செய்வேன்.  அப்பத்தான், அதில எனக்கு முழு ஈடுபாடு கிடைக்கும். “

    “ இப்ப,  நீ என்ன சொல்ல வர்ற? உன் விஷயத்துல என்னைய தலையிடாதேன்னு,  மறைமுகமா இல்லையில்லை, நேர்முகமாக எனக்குச் சொல்ற . எனக்கு நல்லா புரிஞ்சுடுச்சு. “  கடும் கோபமாய்க் கிருஷ்ணன் ஹாலை விட்டு நகர முயல,

     “ இருப்பா . எப்போதுமே , உன் தரப்பு வார்த்தையை,  வாதத்தை மட்டும் பதிவு பண்ணிட்டு,  பதிலே எதிர்பார்க்காம நகர்றதே உனக்கு வாடிக்கையா போச்சுப்பா. நான் உன்னோட பொண்ணு.  என்னாலேயும் ஒரு விஷயத்தை ஆராய முடியும்.  தீர்மானம் எடுக்க முடியும். அதை நம்பு..என்னை நம்பு.  உன்னை,  உன்னோட கருத்துக்களை நான் கவனிக்கிற மாதிரி,  என்னையும் கவனி.  என் உணர்வுகளையும் புரிஞ்சுக்கோப்பா.”

       மிக நீண்ட விவாதத்தின் முடிவில் ,

      “ இனிமே,  உன் நலன் தொடர்பா நீயே முடிவு எடுக்கலாம்.  தேவைப்பட்டா.. என்னிடம் ஆலோசிக்கலாம்.. நீங்க . “ தோளில் கிடந்த துண்டை உதறி,  இடுப்பில் கட்டியவராய் ,கையெடுத்து மீனாவை கிருஷ்ணன் கும்பிட,

    ‘ குபுக்’ கெனக்  கொட்டிய கண்ணீரில் தான் நனைந்தது இப்போதும் நினைவுக்கு வந்தது மீனாவுக்கு.

      தலையை நிமிர்த்தி , அலுவலகக் கெடிகாரத்தை  மீனா பார்க்க,

     அலுவலகம் முடியும் நேரமான, மாலை 6 மணிக்கு,  இனியும் பத்து நிமிடம் பாக்கி இருந்தது.

     இலேசாக ஒரு பக்கம் தலை பாரமாய்.. மனமும் கூட . ஒருவேளை,  நேற்றைய மழையின் பாதிப்போ? மனதுக்குள் சின்ன சந்தேகம்.

      ‘சட்’ டென தன்னுடைய தோழி ராஜி அவசர தேவையாய் இன்று காலை பத்தாயிரம் ரூபாய் செல்போனில் கேட்டது நினைவுக்கு வர,

     “  ஏன், இப்படிச் சுத்தமா எனக்கு மறந்துப்போச்சு? “ என 

‘விறு, விறு’ வென வங்கிக் கணக்குச் செயலியில் அவளது எண்ணைத் தேடி,

     தன் பாஸ்வேர்ட்டைத் தட்ட,

     'பச்'. தங்களது ‘பாஸ்வேர்ட் எண்ணை’ச் சரி பார்க்கவும்.. குறுஞ்செய்தி.

மீனாவின் முயற்சி தோல்வி அடைய,

      தொடர்ந்த அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிய,  வாய்ப்புகள் அனைத்தும் முடிந்து போனது.

       உடலெங்கும் பதட்டம் பற்றிக்கொள்ள ,செல்போன் திரையில் ஓர் அழைப்பு .

      அதே தோழியின் எண்.

      “ ஓ..”  முதன்முறையாய், தன் மேல் கோபமும்,  சலிப்பும் மேலோங்க,

       ஆலோசனை கேட்க அழைத்தாள் அப்பா கிருஷ்ணனை.

      ஆனால்,  இன்று காலை முதலே அப்பா தன்னுடன் நேரடியாக பேசுவதைத் தவிர்த்து,  செய்கையிலும்,  குறுந்தகவல் மூலமாகவும்  உரையாடியது நினைவுக்கு வர,

      “  ஐயோ., கடவுளே.  எப்படியாவது,  அப்பா என் அழைப்பை எடுக்கணுமே  “ வேண்டுதலோடு அப்பாவை மீனா அழைக்க,

       சோதனையாய் மீனாவின் செல்போன் சேமிப்பு சக்தி சிவப்பு நிலையில் கண்ணை சிமிட்டியது. 

       சரி, குறுந்தகவல் அனுப்பலாமா?  எனக் குழம்பியவள், மீண்டும் ஒருமுறை அழைத்துப் பார்ப்பதற்குள், அப்பாவே அழைத்து விட்டார்.

       “ ம்., சொல்லு”  அப்பாவின் குரலில் உற்சாகமில்லை.       

      சுருக்கமாய் தன் நிலைமையை இவள் கூற,

       “வீட்டில பாஸ்வேர்ட் எண்ணை எதிலையாவது எழுதி வைத்துள்ளாயா?”ன்னு அவர் வினவ,

        “இல்லை” என வருத்தமாய் மீனா.

        சாதுர்யமாய் இவளது தோழியின் வங்கிக் கணக்கு விபரத்தை கேட்டுப் பெற்ற அப்பா,

        அடுத்த நிமிஷத்தில், அவளுக்கு தன் வங்கிக்

 கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் செய்து,  மீனாவிற்கு தகவல் அனுப்ப,

      “  அப்பாடா “  என பெருமூச்சொன்று வெளிவந்தது மீனாவிடமிருந்து.

        கூடவே ,  அந்தத் தகவலை, தன் தோழிக்கு பரிமாற்றம் செய்தவள்,

      "அப்பா.,உன் ஒழுங்கு முறை இப்போது எனக்குப் புரிகிறது.  நீ பலமுறை,  ஒவ்வொரு செயலியின் பாஸ்வேர்டை தனியாக குறிப்பெடுத்து பத்திரப்படுத்த சொன்னதின் முக்கியத்துவம் எனக்கு இப்போது புரிகிறது.  ‘அனுபவமே ஆசான்’... அதுதான் நீ . உன் அருமை எனக்கு இப்ப புரிஞ்சிடுச்சு. “  உள்ளுக்குள் பொங்கிய உணர்வுகளுடன்,

       வேகமாய் அப்பாவை நேரில் காணப் புறப்பட்டு வீட்டை அடைந்தாள் மீனா.

      கதவு திறக்க,  காலிங் பெல்லை அமுக்க கை வைக்க,

     அதற்கு அவசியமே இல்லாத மாதிரி வாசல் கதவருகே  கையில் காபியுடன் தயாராய் அப்பா கிருஷ்ணன்.

     “ வா.,  வா, என் தேவதையே  “ பாட்டை முணுமுணுத்தவராய்க் கண்களில் எப்போதும் தெரியும் பாச உணர்வுடன் கிருஷ்ணன்.

                                          ௦-௦-௦ 



Rate this content
Log in

Similar tamil story from Classics