வல்லன் (Vallan)

Classics Inspirational

4  

வல்லன் (Vallan)

Classics Inspirational

வேலுநாச்சி 10

வேலுநாச்சி 10

12 mins
1.1K


அத்தியாயம் 12 நாடோடி வாழ்க்கை


   இருபத்தாறு ஆண்டுகள் பிரியாத வாழ்வு வாழ்ந்த கணவனையும், மக்கள் மனங்குளிர அரசாண்ட நாட்டையும், சூடிய பூவும், பூசிய மஞ்சளும், நிறைந்த தாலியும் இழந்து இன்று நாதியற்று நிற்கும் நிலை யாருக்கும் வந்துவிடக்கூடாது என மனதுள் எண்ணியவாரே அடுத்து என்ன செய்ய வேண்டும் அமைச்சரே? என்று தாண்டவராயன் பிள்ளையை நோக்கினார் வேலுநாச்சியார்.


   அம்மா நான் சொல்லி தங்களுக்குத் தெரிவிக்க ஏதும் இல்லை, நவாப் மற்றும் வெள்ளையரின் படைகள் விரைவில் நம்மை சூழ்ந்து கொள்ளும் அபாயம் உள்ளது, எனவே யோசிக்க நேரமில்லை விரைவில் நாம் விருப்பாச்சி கோபால் நாயக்கர் அண்மனை நோக்கி செல்ல வேண்டும், அவர் மைசூரு அரசுக்குக் கட்டுப்பட்டவர். அதுமட்டுமல்லாது தற்போடதைய சூழலுக்கு நமக்குப் பாதுகாப்பளிக்கும் இடமும் அதுவே.

கண்ணில் தனல் பறக்க, கண்ணீர் வழிய பெரும் ஆவேசங்கொண்டு என்னை யாருமில்லா அநாதையாக்கி, நிற்கதியாய் இருக்க இடமில்லாமல் ஒண்ட இடம் தேடவைத்த உங்களை நான் ஒழிக்காமல் ஓயமாட்டேன். நாட்களை எண்ணுங்கள் நயவஞ்சகர்களே... விரைவில் உங்கள் காலனை வரவேற்க ஆயத்தமாய் இருங்கள்.


   பிள்ளை அவர்களே, நாம் புறப்படலாமா விருப்பாச்சி கோபால நாயக்கர் மாளிகை நோக்கி? இனி நமக்கு ஓய்வுக்கு நேரமில்லை, நிரம்ப வேலைகள் இருக்கின்றது. சண்டாளர்களை சடுதியாய் தீர்க்க வேண்டும். கொள்ளையர்களைக் கொன்றொழிக்க வேண்டும். 


   காடு வனாந்திரமெல்லாம் கடந்து, கயவர்கள் கண்ணில் படாமல் நான்கு நாள் நடைபயணமாய் கல் முள் பாராமல் கால்கள் கடுக்க, தேகம் வலிக்க, நாடி நரம்பெல்லாம் நடுநடுங்க, உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி அறியாக் குழந்தை ஒருபுறம், மூப்பெய்திய தாண்டவராயன் பிள்ளை ஒருபுறம் என எல்லாவற்றையும் தாங்கிக் கடந்து, மெல்ல மூவரும் விருப்பாச்சியை அடைந்தனர். ஏற்கனவே வேலுநாச்சியார் முதலான மூவரும் வருவதாக செய்தி அனுப்பியிருந்தனர். 


   அவர்கள் வருவதை அறிந்த கோபால நாயக்கர் மலர்ந்த முகத்தோடு அரண்மனை வாயிலில் நின்றிருந்தார். அளவான உயரம், நல்ல கருத்த தலைமயிர், சற்று பருத்த உடல், அமைதி குடிகொண்ட முகம்... 


   வாருங்கள் அரசியாரே! வாருங்கள் பிள்ளை அவர்களே! நடந்தவற்றை அறிந்தேன், படுபாதகர்கள் ஆயுதமற்ற ஒருவரை கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் கொல்லத் துணிந்தனர். நிலையில்லா உலகிலே எதைக் கொண்டுபோகப் போகின்றார்கள், நவாப்பும் வெள்ளையனும் சேர்ந்து இன்னும் என்னென்ன அக்கிரமங்களையெல்லாம் செய்யப்போகின்றனரே தெரியவில்லை, எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம் என்று தன் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தார் நாயக்கர்.


   நீங்கள் மூவரும் உள்கட்டுக்குச் சென்று களைப்பு தீர ஓய்வெடுத்து, வயிற்றுப்பசியை ஆற்றுங்கள். மற்றவற்றை பிறகு நிதானமாக மற்ற விசயங்களைப் பேசுவோம் என அவர்களை அரண்மனை உள்ளே அனுப்பிவைத்தார். 


   தனியே அமர்ந்த விருப்பாச்சி நாயக்கர் ஆழ்ந்த சிந்தனைக்குள் சென்றார். சிறிது நேரத்துக்குப் பிறகு சிவகங்கையின் நிலையைப் பற்றி மருது சகோதரர்களிடம் இருந்து ஒற்றன் மூலம் செய்தி வந்தது.


   சிந்தனையிலிருப்பவரை களைக்க வேண்டாமென சற்று தயங்கியபடி நின்றிருந்தான். சற்கே ஏறிட்டுப் பார்த்த நாயக்கர் என்ன செய்தியப்பா? எவ்வளவு நேரம் இப்படி நிற்கிறாய்? வந்தவுடன் அழைத்திருக்கலாம் அல்லவா? 


   வணக்கம் ஐயா! சிவகங்கையில் இருந்து மருது சகோதரர்களிடம் இருந்து செய்தி கொண்டுவந்துள்ளேன். கோட்டையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, இன்று இரவு வரை தாக்குப்பிடிப்பதே பெரிது. கிழக்கில் இருந்து ஸ்மித்தும் நவாப்பின் படைகளும், மேற்கில் இருந்து பாஞ்சோரும் வந்து தாக்கியதில் சிவகங்கை படைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. இனி கோட்டையைப் பாதுகாப்பது என்பது நமக்கு நாமே சமாதி கட்டிக்கொள்வதற்குச் சமம். எனவே, மருதிருவரும் மற்ற முக்கிய பிரதானிகளும் தப்பித்து இன்னும் மூன்று நாட்களுக்குள் வந்துவிடுவதாக சொல்லி அனுப்பினார்கள் என படபடவென பேசி முடித்தான். 


   

நிலைமையை புரிந்து கொண்ட நாயக்கர், ஆகட்டும் நடப்பவற்றை நம்மால் ஏதும் செய்ய முடியாது, கடவுள் என்பவன் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதானே இருக்கிறான். 


   நான் வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்கிறேன், அவர்கள் வருவதற்குள் மற்ற வேலைகளைக் கவனிக்க வேண்டும். அரசியார் மற்றும் பிள்ளை அவர்களும் ஓய்வில் இருக்கிகார்கள், நான் இந்த செய்தியை பக்குவமாக தெரிவித்துக் கொள்கிறேன். நீ சென்று மருது சகோதரர்களிடம் அவர்கள் மூவரும் நலமாக இருப்பதாக சொல்லிவிடு. பின்னர் நடப்பவற்றைப் பார்த்து கொள்ளலாம் என வந்த தூதனுக்குப் பதில் கூறி அனுப்பிவைத்து நெடிய பெருமூச்சு விட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். 


அரண்மனை உள்ளே ஓய்வறையில், நான்கு நாட்கள் நடந்த களைப்பிலும், பசியிலும் துன்பப்பட்டதால் வெள்ளச்சியும், தாண்டவராயன் பிள்ளையும் அயர்ந்து தூங்கிவிட்டனர். ஆனால், வேலுநாச்சியாரின் நெஞ்சம் உறங்காமல் செந்தனலாக சுடர்விட்டு எரியத் தொடங்கியது.
















அத்தியாயம் 13 மந்திராலோசனை



அடுத்தநாள் காலை, ஞாயிறு தன் கதிர் கரங்களை நீட்டி உலகின் இருள் போர்வையை விலக்கி மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கினான், அனுமதி இல்லாமல் இப்படி வருகிறாயே என பறவைகள் சத்தமிட்டு கடிந்துகொண்டன. ஞாயிற்றுக்கு ஏது அனுமதி அவன் அனுமதித்தால் தானே உலகே இயங்கும். ஆனால் உலக வேலுநாச்சியாரின் உலகை மட்டும் கிரனக்கைகள் இன்னும் தொடவில்லை, ஏனோ அதுமட்டும் இருட்டியே இருந்தது. அலைந்து திரிந்த களைப்பில் உடல் அசந்து ஓய்வெடுத்தாலும் மனம் சிறிதும் அசந்து போகாமல் நெருப்பைக் கக்க காத்துக்கொண்டிருக்கும் பெரும் எரிமலையென உள்ளுக்குள் குமுறிக்கொண்டுதான் இருந்தது. 


கணவனை இழந்து சொந்த நாட்டைப் பறிகொடுத்து உயிர் பிழைக்க ஓடி ஒழிந்து இன்று வேறொரு பாளையத்தின் அரண்மனை உள்ளே ஒழிந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் இதற்கெல்லாம் ஒரே காரணம் நவாப்பின் வஞ்சமும் வெள்ளையரின் சூழ்ச்சியுமே. வஞ்சகங்களும் சூழ்ச்சிகளும் நெடுநாட்கள் வெற்றிபெறுவது இல்லை, கூடிய விரைவில் உங்களுக்கு முடிவுகட்டுகிறேன். விளையாட்டாய் எண்ணி புலி வாலைப் பிடித்துவிட்டீர்கள் இனி நீங்களே நினைத்தாலும் விடமுடியாது, விட்டாலும் தப்ப முடியாது என எண்ணியவாறே அரண்மனை மேல்மாட உப்பரிகையில் இங்குமங்கும் நடந்துகொண்டு இருந்தார்.


கோபால நாயக்கர் நேரே வேலுநாச்சியார் இருந்த இடம் நோக்கி வந்தார், அம்மா மருது சகோதரர்களிடம் இருந்து சிவகங்கை கோட்டையின் நிலையைப் பற்றிய செய்தி வந்துள்ளது. கோட்டையை நிலை நிறுத்த இயலாது, இன்னும் இரண்டு நாட்கள் தாக்குப்பிடிப்பதே பெரும் பிரயாசையாம். மருது சகோதரர்கள் தப்பி விரைவில் இங்கு வந்து சேருவதாக ஒற்றன் மூலம் செய்தி வந்தது. நேற்றே தங்களிடம் சொல்லலாம் என நினைத்தேன். 


பயனக்களைப்பில் இருப்பீர்கள் என்றே விட்டுவிட்டேன். சரி வாருங்கள் உணவு உண்ண போகலாம்.

நாயக்கரே உங்கள் உபசரிப்பும், எனக்கு கொடுத்த அடைக்கலத்தையும் என்றைக்கும் நான் மறவேன். நான் உங்களுக்கு மிகுந்த கடன்பட்டவள், திக்கற்று இருந்தவளுக்கு இப்படி தங்க இடமும் உண்ண உணவும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்கின்ற உங்கள் மனத்தை எண்ணி மிகவும் வியக்கிறேன். எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது இருந்தாலும் நான் நன்றி சொல்கிறேன். இப்போதைக்கு இதை மட்டுமே என்னால் செல்ல முடியும் நாயக்கரே... என மழை மேகங்கள் கருத்து திரண்டு பொழிவது போல அழுதுஅழுது கருவளையம் படர்ந்த கண்களில் இருந்து வழியும் கண்ணீரோடு நின்றிருந்தார்.


தாயே ! இப்படி பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்த வேண்டாம் அம்மா... என்னை உங்கள் தந்தையாக எண்ணி எதையும் மனதில் வைத்துக் கொள்ளாது உரிமையுடன் இருங்கள் அது போதும். இப்போது வந்து உணவை உண்டுவிட்டு பின்னர் என்ன செய்யலாம் என்பதை பேசலாம். தாண்டவராயன் பிள்ளை அவர்களும் நமக்காக கீழே காத்திருக்கிறார் வாருங்கள் போகலாம் என்று அழைத்துச் சென்றார். 

பலவித பண்டங்கள், உணவுகள், வகைவகையான பொறியல்கள், சுவையான பாயாசம் ஏலக்காய் மணத்துடன் கண்கள் நிறைய எல்லாம் இருந்தும் வயிறு நிறைய உண்ண மனதிலும் வயிற்றிலும் ஏனோ இடமில்லை... எல்லா வஞ்சங்களும், கோபங்களும், உணர்ச்சிகளும் வந்து தொண்டையை அடைத்தது நின்றுவிட்டன. மற்றவர்களும் குறைவாகவே உண்டனர். உணவு முடிந்ததும் எல்லோரும் ஒரு சிறிய அறைக்குச் சென்றுவிட்டனர். வெள்ளச்சி நாச்சியாரை ஒரு தோழியுடன் அவர் அறைக்கு அனுப்பி வைத்தனர்.


நெடிய பெருமூச்சு விட்டவராக கோபால நாயக்கர் பேச்சைத் தொடங்கினார், பிள்ளை அவர்களே நேற்று இரவு சிவகங்கையில் இருந்து செய்தி வந்தது. காலையிலேதான் அரசியாரிடம் தெரிவித்தேன். நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது, மருது சகோதரர்கள் தப்பி இன்னும் இரண்டொரு நாட்களில் தப்பி வந்துவிடுவார்கள். இதற்கு மேல்தான் நமக்கு பெரும் சவால்கள் பல காத்திருக்கின்றன. இனி என்ன செய்யலாம் என பொறுமையா நிதானமாக யோசித்து செயலைச் செய்ய வேண்டும். 

நாயக்கரே! அமைதியாக இத்தனையும் கேட்டுக்கொண்டு இருந்த இராணி வேலுநாச்சியார் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தது போல மெல்ல அழைத்தார். எனக்கு நீங்கள் சில இரகசிய காரியங்கள் செய்ய வேண்டும். இப்போது உள்ள நிலையில் நம்மால் நவாப்பின் படைகளையும் வெள்ளையர்களின் படையையும் சமாளிக்க முடியாது. நல்ல பயிற்சியுடன் ஒழுக்கமான நடத்தைகளுடைய வீரமான மறவர்களை ஒன்று திரட்டி இரகசிய இடங்களில் பயிற்சி அளிக்க வேண்டும், நல்ல தரமான ஆயுதங்களை நம் கண்பார்வை முன்னே கொல்லர்களின் உலைகலன்களை அமைத்து வடித்தெடுக்க வேண்டும். நான் சேர்க்கப் போகும் படையில் பெண்களுக்கென்று ஒரு பிரிவு வேண்டும். முக்கியமாக இந்த இரகசிய இடங்கள் ஒவ்வொன்றும் அருகருகே இல்லாதிருக்க வேண்டும். நான் அடிக்கடி பயனப்பட ஏதுவாகவும் இருக்க வேண்டும். ஓய்வுக்கு நேரமில்லை, விரைந்து செயல்பட்டால் தான் நம் நாட்டை மீட்க முடியும்.


       இவ்வாறு நீண்டபெரும் பட்டியலை முன்வைத்தார் அரசியார். ஆகட்டும் தாயே! நான் இடங்களை சொல்கிறேன் நீங்களே தேர்ந்தெடுங்கள். ஆயுத உற்பத்தி பற்றிய கவலை இனி தங்களுக்கு வேண்டாம் அது என் பொறுப்பு. இனி எல்லாமே நல்லவையாக நடக்கட்டும். நாம் சிறிதுதான் சரிவுற்று இருக்கிறோம். விரைவில் மீண்டு மேலே வந்திடுவோம்... வெற்றி வேல்! வீர வேல்!.. 


       இவ்வாறாக இன்றைய பொழுதும் போனது, அங்கே கோட்டையும் பறிபோனது. நாமும் காத்திருப்போம் இனி நல்லவையே நடக்கும் என்று.










அத்தியாயம் 14 இரகசியக் கோட்டைகள்



பெரும் பெரும் காரியங்களை எளிதில் சாதித்தவர்கள் ஏதேனும் ஒரு சிறு காரியங்களில் பின்னடைவைச் சந்திகக்கின்றனர். அது எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் சரி இயற்கை சில தடைகளை வைக்கும். 


அப்படி தான் இன்று திக்கற்று விருந்தாளியாய் மாற்றார் கோட்டையில் சென்று தஞ்சமடைந்து நிற்கும் நிலையில் வேலுநாச்சியை நிறுத்தியுள்ளது. 


இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி படை திரட்டி பயிற்சி செய்து ஆயுதம் வார்த்து வெள்ளையனையும் நவாப்பையும் முறியடிப்பது மட்டுமே. அதற்கான ஆரம்பகட்ட பணியையோ கோபால நாயக்கரிடம் ஒப்படைத்திருக்கிறார் வேலுநாச்சி. கோட்டைகள் எல்லாம் யாரும் எளிதில் அனுகமுடியாத, யாரும் அதிகம் புழங்கும் வகையில் இல்லாத, மறைவான இடங்களாக வேண்டும் என்று கேட்டிருந்தார்.  

அத்தகைய இடங்களை கோபால நாயக்கர், தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் இணைந்து தேர்ந்தெடுத்தனர். அவை திருப்பத்தூர் கோட்டை, சக்கரபதி கோட்டை, அரண்மனை சிறுவயல் கோட்டை, படமாத்தூர் கோட்டை, பாண்டியன் கோட்டை, அரியாக்குறிச்சி கோட்டை, மானாமதுரை கோட்டை என பல கோட்டைகள் அமைதியான ஆள் அரவம் இல்லாத இடங்களாக தேர்ந்தெடுத்தனர். இந்த இடங்கள் தான் ஆயுதங்களின் கிடங்குகளாகவும், படை வீரர்களின் பயிற்சிக் களமாகவும், மறைமுக ஆலோசனைக் கூடங்களாகவும் செயல்படப் போகின்றன. அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவைதான் இராணிக்கு மறைவிடமாகவுப், போர் பயிற்சிக் களங்களாகவும் இருக்கப் போகின்றன. 


ஊர் ஊராக ஒற்றர்கள், நம்பிக்கைக்கு உரிய நபர்கள் போன்றவர்களைக் கொண்டு படை திரட்டும் வேலையை ஒப்படைத்திருந்தனர். பெண்களும் படையில் சேர்க்கப்பட்டனர். மருது சகோதரர்களும், குயிலி போன்ற வித்தையில் வல்லவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்தனர். 


கொல்லர்களின் உலைக்கலன்கள் வேலுநாச்சியின் மனதைப்போல குமுறிக்கொண்டு இருந்தன. சம்மட்டியின் சத்தம்கூட வெளியே வராது வாள்களும், வேல்களும், அம்புகளும், வளரிகளும் வார்த்து அடித்து எடுத்து அடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தன ஓயாமல். 

இதற்கிடையில் வேலுநாச்சியும் அடிக்கடி ஒவ்வொரு கோட்டைக்கும் பயணமானார், தானே சில நேரங்களில் பயிற்சியும் அளித்தார். பெண்கள் படைப் பிரிவு ஒன்றை உருவாக்கி சிறுமி உடையாளின் நினைவாக உடையாள் படைப்பிரிவு என்று பெயரிட்டார்.


தளவாய் தாண்டவராயன் பிள்ளையும் வெள்ளச்சி நாச்சியாரும் மட்டும் விருப்பாச்சி கோட்டையிலேயே தங்கியிருந்தனர். இந்த நேரத்திலேயே இளவரசிக்கு அரசியல் பற்றியும், சிவகங்கை அரசின் சிக்கல்களையும், எதிரிகளை எதிர்கொள்வது, போர் பயிற்சி போன்றவற்றை தாண்டவராயன் பிள்ளை கவனித்துக் கொண்டார்.


இந்த சமயத்தில் தான் மைசூர் சுல்தான் ஹைதர் அலி திண்டுக்கல் கோட்டைக்கு வருவதாக செய்தி என கோபால நாயக்கர் மூலம் செய்தி வந்து சேர்ந்தது. எதிர்பார்த்திருந்த நேரம் நெருங்கியதையே நல்ல சகுனமாக எண்ணி மனதுக்குள் உவகைப் பூத்தார் வேலுநாச்சி. கோபால நாயக்கர் மூலம் ஹைதர் அலியை சந்திக்க ஏற்பாடு செய்யும் வேலைகளில் மும்மரமானார். வேலுநாச்சியும் என்ன உதவியை எந்த நேரத்தில் கேட்கவேண்டும் என்றும் எப்படி திண்டுக்கல் கோட்டையை அடைவது என்றும் திட்டம் வகுப்பதில் ஆழ்ந்து சிந்திக்கலானார்.  


ஹைதரிடம் இருந்து கோபால நாயக்கருக்கு இசைவு கிடைத்தது. இந்த செய்தி நாச்சியாருக்கு பெருமகிழ்வை ஏற்படுத்தியது. திண்டுக்கல் கோட்டைக்கு செய்தியை அனுப்ப ஆயத்தமானார்.  


நான்கு குதிரைப்படை வீரர்கள் செய்தியோடு திண்டுக்கல் கோட்டை வருவதாக ஹைதருக்கு கோபால நாயக்கர் கூறியிருந்தார். எனவே இது பற்றி வீரர்களுக்கும் சொல்லியிருந்தனர். முத்திரை காட்டுபவர்களை மட்டுமே கோட்டைக்குள் அனுமதிப்பது ஹைதரின் வழக்கம். 


நல்ல ஆஜானுபாகுவான நான்கு வீரர்களும் குதிரையில் ஆரோகணித்து ஜாஜ்வல்ரமாக வந்து இறங்கினர். முத்திரையை வாயிலில் காண்பித்து கோட்டைக்குள் நுழைந்து அரசவையை நோக்கி நடந்தனர். அவைக்கு வந்த வீரர்களை நோக்கி ஏன் உங்கள் இராணி வரவில்லை போலும் என்று வினவ, அந்த வீரர்களில் ஒருவன் மட்டும் முன்வந்து தன் தலைப்பாகையையும் முகத்தில் இருந்த துணியையும் விலக்கினான். 


சபையே சற்றுநேரம் அமைதியில் மூழ்கியது... 










அத்தியாயம் 15 கூட்டணி



தலைப்பாகையைக் கழட்டிய வீரனைக் கண்டதும் சபையே சற்று மௌனத்தில் மூழ்கி மெல்ல மீண்டது. பார்த்த கண்களில் வியப்பே மேலிட்டு நின்றது, சிறிது நேரத்துக்குள் யாரது யாரது என்று முனுப்பு பெருகி பேரிரைச்சலாக மாறிற்று. 


எப்படி வியப்பு மேலிடாமல் இருக்கமுடியும்? மாறுவேடத்தில் வந்தது புலியல்லவா..! போர் வித்தைகளில் திறமை இருந்தால் மட்டும் போதாது சமயோசித புத்தியும் ஆழ்ந்து சிந்திக்கும் மனதும், அதிகம் ஆராயும் மூளையுமே ஒருவரை என்றும் அரணாக காக்கும் அருவி என்று வள்ளுவன் அன்றே சொன்னதுதானே. அப்படிப்பட்ட ஒரு ஆளுமைதான் வேலுநாச்சி. 


இந்த நேரத்தில் ஹைதர் உண்மையிலே வாயடைத்துதான் உட்கார்ந்திருந்தார். இதுவரை இப்படியொரு பெண் இந்த வகையில் ஆபத்துகளைக் கடந்து எந்தவொரு பெண்ணும் போராடி வந்து அவர் கண்டதில்லை. மேலும் கோபால நாயக்கரின் முன் அறிமுகம் வேறு இருந்ததால் ஏற்பட்ட ஆவல் இந்த நிகழ்வைக் கண்டதும் உண்மையிலேயே சற்று பிரமித்துதான் போயிருந்தார். 


இந்த ஆர்பாட்டங்கள் சற்றே நேரத்தில் அடங்கிட வேலுநாச்சி தான் வந்த நோக்கத்தைப் பற்றி பேசத்தொடங்கினார். உருது மொழியிலே வணக்கம் கூறி பேச்சைத் தொடங்க மேலும் ஆச்சர்யமடைந்தார் ஹைதர். 


மைசூரு சுல்தானுக்கு என் வணக்கங்கள். இன்று நான் தங்களைக் காண வந்திருப்பது உதவி ஒன்றின் பேரில்தான். ஏனெனில் எதிரி ஒருவன் அவனால் பாதிக்கப்பட்டது நாமிருவர். எதிரிக்கு எதிரி நண்பனல்லவா! அவர்களைத் தனியே எதிர்ப்பதைவிட நாம் இருவரும் சேர்ந்து எதிர்கொண்டால் எளிதில் வீழ்த்தலாம். திட்டங்களால் அவர்களின் படைகளைப் பிரித்துச் சூரையாடலாம். என் கணவனையும் தங்கையையும் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கிய அந்த சூழ்ச்சிக்கார நரிகளை நாம் சூழ்ச்சியால் மட்டுமே வெல்ல முடியும். தாயாய் நினைத்த மக்களை துன்பத்தில் உழல விட்டு நான் தனியே நிற்பது உறுத்தலாக இருக்கிறது, என் நாட்டை மீட்க வேண்டும் அதுவே என் முதல் குறி. 


இன்று நான் கோபால நாயக்கரிடம் அடைக்கலமாய் இருக்கிறேன், இருந்தபோதும் என்னால் முடிந்தவரை எனக்கு ஆதரவான பிரஜைகளைக் கொண்டு எனக்கான படைகளையும் ஆயுதங்களையும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன். தனிமரமாய் இருக்கும் எனக்கு ஆதரவு என் ஒரே மகளும் நாடும் தான். மகள் இருக்கிறாள் நாடு இல்லை, நாடும் வந்தால் என் வாழ்வு முழுமையடையும். 


என் கணவனுக்கும் தங்கைக்கும் வாக்குரைத்துள்ளேன் நாட்டை மீண்டும் கைப்பற்றுவேன், உங்கள் களங்கத்தைத் துடைப்பேன், மக்களின் நன்மைக்கு உறுதியளிக்கிறேன் என்று. அந்த வாக்கையும் நான் காக்க வேண்டும். எனக்கு தற்போது உங்களிடம் இருந்து படை உதவி ஒன்றே தேவை அதனை எதிர்பார்த்து இன்று இவ்விடம் பிட்ச்சை கேட்க வந்துள்ளேன். இதுவே என் விண்ணப்பம் என்று முடித்தார். 

மௌனத்தில் ஆழ்ந்து சிறிய யோசனைக்குப் பிறகு ஹைதர், அம்மா உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது, உங்கள் வாக்கையும் லட்சியத்தையும் காக்கும் போராட்டத்தில் என் உதவியை நாடி வந்துள்ளீர்கள். நிச்சயம் என் உதவி நீங்கள் கேட்கும் தக்கசமயம் தேடிவந்துச் சேரும் என இங்கு இச்சவையின் முன் உறுதியளிக்கிறேன் என்றார்.


ஹைதரின் இந்த நேர்மறையான பதில் வேலுநாச்சியாரின் முகத்தில் ஒரு நம்பிக்கையை உருவாக்கியது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடக்கும் போது வேலுநச்சி ஹைதருடன் போர் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் நான் நவாப்பின் மீது போர் அறிவிக்கின்ற சமயம் நீங்கள் வெள்ளையர்கள் மேல் போர் அறிவியுங்கள். அவர்களின் கூட்டணியை உடைத்து அவ்விடம் நம் கூட்டணியை நிறுவ வேண்டும். இது நான் மனதளவில் உறுதியாய் கூறும் ஒரு வாக்கு, இதனை என்றைக்கும் மறக்க வேண்டாம் என்றார். 


ஆலோசனைகள் முடிந்து விருந்துக்கு ஏற்பாடானது. தேடி வந்தவருக்கு விருந்திடுவது நம் நாட்டு பண்பல்லவா! பலவகைப் பதாரத்தங்கள் பார்த்தவார்கள் நாவூறும் படி கண்களுக்கும், வாய்க்குள் போகும் போது வயிற்றுக்கும் விருந்தாக அமையும்படி செய்திருந்தனர். 


நல்லபடியான ஒரு கூட்டணிக்குப் பிறகு வேலுநாச்சி தன் வீரர்களை முழு வீச்சில் பயிற்சியில் ஈடுபட வைத்தார், உற்சாகமூட்டி நல்ல பயிற்சியை நல்கினார். இந்த படைகளின் பெரும்பலம் மருது சகோதரர்களின் வழிநடத்தல் ஆகும் என்றால் மிகையாகாது. படை திரட்டியதில் இருந்து பயிற்சியளிப்பது முதலாக இரகசிய இடங்களைப் பாதுகாத்து அனைவரையும் ஆபத்து இல்லாது காப்பதுவரை அவர்களின் பொறுப்பாயிற்று. 


வீறு கொண்டு வெறியேறிய வேங்கை எதிர்பார்த்து நின்றிருந்த நாள் வெகு தொலைவில் இல்லை. காலம் விரைந்து சுழல்கிறது என்பதை வெள்ளையர்களும் நவாப்பும் விரைவில் உணரப்பபோகின்றனர்.






அத்தியாயம் 16 குரங்கு கையில் பூமாலை



ஆங்கிலேயருக்கும் ஆற்காட்டு நவாப்புக்கும் பரமவைரியான ஹைதர் உடன் வேலுநாச்சி கூட்டணி அமைத்தது பின்னாளில் தென்னிந்திய அரசியல் வரலாற்றின் விதியையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது என அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. பேச்சுவார்த்தைகள் முடிந்து திரும்பியாயிற்று அனைவரும். 


எல்லையைப் பறிகொடுத்த சிங்கம் என்றைக்கும் ஓய்வெடுக்காது, எப்படி மீட்பது என்றே சிந்தையில் ஆழ்ந்திருக்கும். ஆனால் வென்ற சிங்கமோ கூடிப் புணர்ந்து புது வாழ்வில் களித்திருக்கும். சமயம் பார்த்து குரல்வளைப் பற்றி எல்லையை மீட்டுக் கொள்ளும். அப்படிப்பட்ட தருணத்திற்குதான் வேலுநாச்சி காத்திருக்கிறார்.


மறவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டில் வெள்ளையர்களும் நவாப்பும் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 

நாட்டின் முக்கிய அடைமாளமான பெயரையே மாற்றிவிட்டனர் சிவகங்கையை ஹுசைன் நகர் என்றும் இராமநாதபுரத்தை அலி நகர் என்றும் வைத்தனர். ஏற்கனவே அங்கு புழக்கத்தில் இருந்த நாணயங்களையும் மதிப்பிழக்கச் செய்து ஆற்காட்டு வெள்ளி நாணயத்தை அறிமுகப்படுத்தினர்.  


போர்ச்சுகீசியர்களின் வணிகமும் ஆதிக்கமும் ஒடுக்கப்பட்டு ஆங்கிலேயருக்கான சலுகைகள் பெருக்கப்பட்டது. இது பொருளாதாரத்தில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியது. 


ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக பாரசீகம் மாற்றப்பட்டது. ஹிஜ்ரி நாட்காட்டி முறையும் பசலி கணக்கீடு முறையும் புகுத்தப்பட்டது. 


பாதுகாப்பு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் ஆங்கிலப்படையுடன் கூட்டு சேர்ந்து அமைக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. உள்நாட்டு வாணிபம் அறவே தடை செய்யப்பட்டு இருந்தது. வெள்ளையர்களின் பொருட்கள் கட்டாயமாக சந்தைப்படுத்தப்பட்டன. சொர்க்க பூமியாக இருந்த சிவகங்கையை நரகமாக மாற்றியிருந்தார்கள் அவர்கள். 


இடையிடையே மருது சகோதரர்களால் ஏற்பட்ட தாக்குதலாலும் வேலுநாச்சியின் மீதிருந்த பயத்தினாலும் ஆற்காட்டு நவாப் சிவகங்கையை வெள்ளச்சி தலைமையில் கப்பம் கட்டி அரசாளும் படி உரிமை கொடுத்தனர். இது மேலும் பெரிய சாதகமான சூழலை உருவாக்கியது. 


இந்த நிலையில் நாட்டுக்குள் வேலுநாச்சியின் ஆதரவாளர்களை ஒன்று திரட்டி ஒரு இரகசிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெண்கள் பலரும் தாங்களாக முன்வந்து உமையாள் படையில் இணைந்து நாட்டுக்குள்ளே இருந்து உளவு பார்ப்பது, சாதகமான சூழலை கணித்து தகவல் அளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள பெரிதும் உதவியாக இருந்தனர். 


குரங்கு கையில் கிடைத்த பூமாலை எப்படி பிய்த்து எறியப்படுமே அப்படி நாட்டையே நிலைகுலையச் செய்திருந்தது நவாப்பின் ஆட்சி. பொருளாதார ரீதியாகவும், மக்களின் சுதந்தரமும், பல உரிமைகளும் பறிக்கப்பட்டு அடிமை போல வைத்திருந்தனர். அதனை வெள்ளச்சி நாச்சியாரும் மருது சகோதரர்களும் மாற்றி அமைக்க சில காலம் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் வேலுநாச்சி படைகளை வலுப்படுத்துவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். 


தாண்டவராயன் பிள்ளை இரண்டு தலைமுறை மன்னர்களைக் கடந்து மூன்றாம் தலைமுறை வாரிசான வெள்ளச்சிக்கும் ஆசானாக இருந்தார். இராஜ தந்திரங்களிலும், போர் வியூகங்களை கணிப்பதிலும், பல்வேறு நிலைகளில் துணை நின்ற ஒரு நிகரற்ற விசுவாசி. மூப்பு நிறைந்து போயிற்று காலன் என்று என காத்திருக்கிறான் பிள்ளையை உடன் கூட்டிச்செல்ல. அதற்கான நேரமும் வந்தது, பிள்ளையிடம் இருந்து சில நாட்களாக எந்த செய்தியும் வரவில்லை. உடல் நலிவுற்று படுக்கையில் இருந்தார். ஒற்றர்கள் மூலம் தாண்டவராயன் பிள்ளையின் நிலை அறிந்துவர நினைத்து ஆட்களையும் அனுப்பினார்.


ஆனால், வந்தது பிள்ளையின் இறப்புச் செய்தி! 


தனக்கு இருந்த பேராதரவான ஒரு நேர்மையான மனிதர். ஆபத்து வேளைகளில் நகராது உடன் நின்று உறுதுணையாக நின்றவர். யார் தவறு செய்தாலும் தட்டிக்கேட்கும் உண்மை மனம் கொண்டவர். மூன்று தலைமுறைகளுக்கு அயராது உழைத்த உன்னத மனிதர். காளையார் கோயில் போரில் தன் உயிரைக் காத்தவர்... இன்னும் நிறைய சொல்லலாம். தாண்டவராயன் பிள்ளை எனக்கு இன்னொரு தந்தை போன்றவர்... என்று பலவாறு எண்ணவோட்டங்களுக்குள் அகப்பட்டு தற்போது இருந்த பெரிய அனுபவம் எனும் துணையையும் என்னிடம் இருந்து பறித்துவிட்டாயே இறைவனே! உனக்கே இது ஞாயமா? 


இத்தனையும் நினைக்க நினைக்க கண்கள் அருவி பொழிய ஆரம்பிக்கத் தொடங்கின... வற்றிப்போன கண்ணீர் குளங்கள் இன்று மீண்டும் ஊற்றெடுத்து நிரம்பி வழிந்தது தாண்டவராயன் பிள்ளையின் பொருட்டு. இராஜ மரியாதையுடன் தளவாய் தாண்டவராயன் பிள்ளையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசியின் மனது மட்டும் ஏனோ வெறுமை சூழ்ந்து இருட்டுக்குள் அடைபட்ட பறவை போல சோவென்று முடங்கிக்கிடந்தது. 


நமக்கு முக்கியமாகப்படுகின்ற சிலரை சிலவற்றை, அவற்றின் தேவைக்கான இன்றியமையாத நேரத்தில் ஏனோ நம்மிடம் இருந்து யாரே பற்றி இழுத்துப் பிடுங்கிச் சென்றுவிடுவார்கள். இது இயற்கையின் நியதி போலும். இன்றைக்கு வேலுநாச்சியாரின் நிலையும் இதுவே. 


கெட்டது நடந்த இடத்தில் உடனே நல்லது நடக்க வேண்டும் என்று சொல்வார்களே அதற்கான அச்சாரமாய் வேலுநாச்சியாரின் மனதில் ஒரு எண்ணம் உதித்தது.



Rate this content
Log in

Similar tamil story from Classics