Dr.PadminiPhD Kumar

Action

3  

Dr.PadminiPhD Kumar

Action

கபாலன்

கபாலன்

2 mins
185


                                  கபாலன்

                   விஷயம் விபரீதமானது. ஆம், கபாலன் இன்றும் ஒரு லாரியை கேட்டில் மடக்கி பிடித்து வெளியே அனுப்ப அனுமதி அளிக்கவில்லை. முன்பிருந்த செக்யூரிட்டி சத்தமில்லாமல் காசு வாங்கிக்கொண்டு கம்பெனியிலிருந்து முக்கியமான கணக்கில் வராத சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி செல்ல வழி விட்டு விடுவார். ஆனால் கபாலனோ டார்ச் லைட் அடித்து விசில் சத்தத்துடன்,”நிறுத்து, லாரியை நிறுத்து. எங்கே கொண்டு போகிறீர்கள் இந்த சரக்கை எல்லாம்?” கண்டிப்புடன் சத்தம் போட்டு லாரியை நிறுத்தி விட்டார்.

              கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்பவர் கபாலன். அவரது முழுப்பெயர் என்னமோ க. பாலசுப்பிரமணியன் தான். ஆனால் அதனை ஆபீசர்கள் சுருக்கி கபாலன் என கூப்பிட்டதில் உடன் வேலை செய்பவர்கள் அனைவரும் அவரை கபாலன் என்றே மிகவும் அன்புடன் அழைக்கத் தொடங்கிய பின் அவரும் தன்னைக் கபாலன் என்றே சொல்லிக்கொள்வார். இந்திய விமானப்படையில் தனது 17வது வயதில் சேர்ந்து பதினோரு ஆண்டுகள் கடமையாற்றியவர் கபாலன். தமிழ் நாட்டில் பிறந்தாலும் கான்பூர், அசாம், பெங்களூர் என வேறு மாநிலங்களில் வேலை பார்த்ததால் மிகுந்த அனுபவசாலியாக இருந்தார். கல்லூரிப் படிப்பு செலவிற்காக அம்மா அப்பா திணறுவார்கள் என்பதால் படிப்பே வேண்டாம் என்று ஸ்கூல் படிப்பு முடிந்ததுமே விமானப் படையில் சேர்ந்து விட்டார். சர்வீஸ் மேன் என்ற மரியாதை அவருக்கு தமிழ்நாட்டில் ஒரு மிகப் பெரிய கம்பெனியின் செக்யூரிட்டி வேலை கிடைக்க ஏதுவாயிற்று.

       ஆனால் எல்லையில் கடமையை திறம்பட ஆற்றிய வீரர்கள் பலரும் எல்லை காக்கும் பணியை விட்டு வந்த பின்னரே உலகில் ஊழலை அடக்க முடியாமல் மக்கள் திண்டாடுவதையும் அல்லல் படுவதையும் உணர்ந்தனர். இதற்கு கபாலன் மட்டும் விதிவிலக்கா என்ன! கம்பெனியின் சரக்குகளை மறைமுகமாக கணக்கில் விற்க லாரியில் கடத்த முயன்றவர் ஒரு எம்பி என்பதை கம்பெனியிலேயே பலரும் அறிந்திருந்தனர். எனவே அனைவரும் ஆபீஸில் கபாலனின் நடவடிக்கை குறித்து அங்கலாய்த்து பேசினார்கள்.

“ இவனுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது”

“ பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கானே”

“அவனுக்கு என்ன இப்ப மெடலா குத்தப்போறாங்க! கண்டுக்காம விட வேண்டியதுதானே……..”

 என ஆளாளுக்கு பேசினார்களே தவிர யாருமே கபாலன் செய்தது சரி என கூறவில்லை.

        கபாலனின் சஸ்பென்ட் ஆர்டர் கையெழுத்தானது. அனைவரும் உச்சுக் கொட்டினார்களே தவிர நேர்மைக்கு குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை. குடும்பத்தில் காதல் மனைவி, மூன்று குழந்தைகள்- இரண்டு பெண், ஒரு ஆண்- என ஐந்து நபர்கள். பென்சன் பணம் வீட்டு வாடகைக்கும் மளிகைக்கடை பில்லிற்கும் தான் சரியாக இருக்கும். பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸ், யூனிபார்ம், புத்தகம் என பட்ஜெட் நீண்டு கொண்டே போவதால் வேலையும் பார்க்க வேண்டிய நிலை. இவர் நிலை அறிந்த உடன் வேலை பார்க்கும் ஆபிஸர்கள் சஸ்பென்ட் ஆர்டர் வாங்க கபாலன் கவலையுடன் வருவான் என எண்ணினர்.

                             ஆனால் நடந்ததோ வேறு. கபாலன் சிறிதும் கலங்கவில்லை. பற்றாக்குறை பட்ஜெட் பற்றிய கவலை மனதில் எழுந்தாலும் கடமையில் தன் கண்ணியத்தைக் காப்பாற்றியதை எண்ணி பெருமை கொண்டான். எனவே சஸ்பென்ட் ஆர்டரில் கையெழுத்திட்ட ஆபீசர்கள் அனைவரும் தலைகுனிந்து அமர்ந்திருக்க கபாலன் என்றும் போல் சிரித்த முகத்துடன் அனைவருக்கும்,” குட் மார்னிங், சார்” என தன் கணீர் குரலால் சொல்லி சலாம் செய்து அவர்களிடமிருந்து சஸ்பென்ட் ஆர்டர் வாங்கி வெளியே செல்லும்போது அனைவரின் பார்வைக்கும் அவன் ஏதோ மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க பையை எடுத்துக் கொண்டு கைகளை வீசிக் கொண்டு செல்வதைப் போல தோன்றினான். கபாலனின் கண்ணியம் அவனுக்கு கம்பீரத்தை கொடுத்தது. அவனல்லவா ஆண்மகன்!


Rate this content
Log in

Similar tamil story from Action