Deepa Sridharan

Romance

4.6  

Deepa Sridharan

Romance

டின்டர் முத்தம் (Part3)

டின்டர் முத்தம் (Part3)

4 mins
774


வலிகளையும், மனக் குழப்பங்களையும் தொலைய விடும் கால இழுவை தூக்கத்திற்கு உண்டு. அடுத்த நாள் காலை கண் விழிக்கையில் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாள். நாட்கள் நகர்ந்தன. அவள் தன் வேலையில் ஐக்கியமானாள். சில நாட்களில் அவள் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றாள். புதிய இடம், புதிய மனிதர்கள். மனிதத் தேடல்களை நிவர்த்தி செய்து கொண்டே இருக்கும் அட்சயப் பாத்திரமா இந்த பிரபஞ்சம்? எவ்வளவு தேடினாலும் புதுமை பூத்துக்கொண்டே இருக்கிறது.


அங்கு சென்ற சில நாட்களை அவளின் வேலை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது. திடீரென ஒரு நாள் அவள் டின்டர் செயலியில் மைக்கேல் என்பவனிடமிருந்து அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அவர்கள் இருவரும் டின்டரில் இணைக்கப்பட்டார்கள்.


அவள் இருந்த நகரத்தில் தான் மைக்கேலும் இருந்தான். அவர்கள் இருவரும் சில நாட்கள் டின்டரில் பேசிக்கொண்டார்கள். புது மனிதர்களுடன் பேசுவது அவளுக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று. எந்தவித எதிர்ப்பார்ப்புகளோ, தீர்மானங்களோ இல்லாத உரையாடல்கள்.


இரு வேறு மூளைகள் தங்களை சுற்றியிருப்பவற்றை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை என்று பல சுவாரசியமான அனுபவங்களையும் புரிதலையும் அது கொடுக்கும். அவளுக்கு மைக்கேலுடன் உரையாடுவது மிகவும் பிடித்திருந்தது. அவன் ரஷ்யாவைச் சேர்ந்தவன். அவனின் அனுகுமுறையும், கருத்துகளும் அவளுக்குப் புதிதாகவே இருந்தது. தன் தனிமையை நிரப்பிடும் அவனின் புன்னகை அவளை ஈர்த்தது. அவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ள தீர்மானித்தார்கள்.


பெண்களின் உலகம் அழகானது, வண்ணமயமான சம்பவங்கள் நிறைந்தது. அதுவும் டேட்டிங் என்றால் கூடுதலான அழகு. என்ன உடை அணிந்து கொள்வது, அதற்கு மேட்சிங்காக என்ன ஆக்சசரீஸ் போட்டுக்கொள்வது, ஹேர் ஸ்டைல், மேக்கப் என்று பலவிதமான முன்னேற்பாடுகள். அவை ஒவ்வொன்றிலும் பெண்களுக்குத்தான் எத்தனை ரசனை. எனினும் ரசனை அனைவருக்கும் சொந்தமானதல்ல. 


ஒரு சிலரால் சிதறும் மழைத்துளியை கூட ரசிக்க முடியாது. அன்று அவள் தன் ரசனையில் மூழ்கிப் போனாள். கண்ணாடி முன் நின்று தன்னை அழகுபடுத்திக் கொண்டாள். அன்று வெதர் ரம்மியமாகவும் ரொமான்டிக் ஆகவும் இருந்தது. மைக்கேலும் அவளும் ஹைக்கிங் போகலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.


" ஹாய் நிரஞ்சனா நைஸ் மீட்டிங்" என்று கையை நீட்டினான் மைக்கேல். அவளும் "ஹாய் மைக்கேல்" என்று பதிலுக்குக் கையை நீட்டினாள். இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். பின்பு இருவரும் ஒரு ட்ரெயினில் ஏறி அமர்ந்து கொண்டார்கள். மைக்கேல் தான் ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியர் என்றும் அந்த நகரத்தில் அவன் ஆறு வருடங்களாக இருப்பதாகவும் கூறினான். இருவரும் தங்கள் வேலைகளைப் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.


சற்று நேரத்தில் அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தது. அவர்கள் இருவரும் இறங்கி ஹைக்கிங் ட்ரெயல்ஸ்க்கு சென்றார்கள். அந்த மலை மிகவும் பசுமையானதாகவும் அழகானதாகவும் இருந்தது. குளிர் காற்றின் தீண்டல் நிரஞ்சனாவைச் சிலிர்க்கச் செய்தது. அவள் விரித்து விட்டிருந்த கூந்தல் அவளின் முகமெங்கும் படர்ந்தது. அந்த மயிர்க் கீற்றுகளின் இடையே அவள் இமைச் சிறகுகளை சற்றே குறுக்கிக்கொண்டு குளிர்காற்றை கண்ணுக்குள் நுழைய விடாமல் பார்த்துக்கொண்டாள். மைக்கேல் அவள் கைகளை பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். 


அவர்கள் இருவரும் தங்கள் குடும்பம், தங்கள் நாட்டு கலாச்சாரங்கள் போன்றவற்றைப் பற்றி பேசிக்கொண்டே நடந்தார்கள். டின்டரில் தன்னுடன் பேசிய மைக்கேலுக்கும் நேரில் சந்தித்த மைக்கேலுக்கும் சில வேறுபாடுகள் இருப்பதாக நிரஞ்சனா உணர்ந்தாள். நேரில் பார்த்து பேசும் பொழுது அவன் கொஞ்சம் ஷையாகவே தென்பட்டான். 


என்னதான் அவன் பேசினாலும் அவன் பேச்சில் பெரிதாக ஒரு சுவாரசியம் இல்லை. அவன் எதையும் ரசித்து உணர்ந்து பேசுவதாய் அவளுக்குத் தெரியவில்லை. எதைப்பற்றி பேசினாலும் அவனுடைய எக்ஸ்பிரஷன்ஸ் நியூட்ரலாகவே இருந்தது. ஆனால் அவளின் பேச்சிலோ ஏற்றங்களும் இறக்கங்களும் புன்னகையும் ஆச்சரியமும் நிரம்பி வழிந்தது. நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இருவரும் அந்த மலையின் உச்சிக்கு சென்றடைந்தார்கள். 


மலை உச்சியிலிருந்து பார்க்கும் பொழுது அந்த நகரத்தின் அழகு சற்றே கூடுதலாய்த் தெரிந்தது. இந்த உலகை மனிதன் எவ்வளவுதான் ஆக்கிரமித்துக் கொண்டாலும் இயற்கையின் அழகு குறைந்ததாக தெரியவில்லை. தூரத்தில் தெரியும் கடலும், பசுமை நிறைந்த மலைத்தொடர்களும், மனித நாகரீகத்தை வெளிப்படுத்தும் வானளாவிய கட்டிடங்களும், எறும்பென படையெடுக்கும் ஊர்திகளும் அவர்களின் கண்களை நிரப்பிக் கொண்டிருந்தன. "என்றும் நீ இன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணியே" என்ற பாடல் திடீரென நிரஞ்சனாவிற்கு ஞாபகம் வந்தது. இயற்கையும் மனிதர்களும் அதைப் பாடிக் கொள்வதாக தோன்றியது அவளுக்கு.


மைக்கேலும் அவளும் அங்கு இருந்த ஒரு சிறிய கட்டிடத்திற்குள் நுழைந்தார்கள். அது ஒரு புத்த மடம் போல் இருந்தது. அங்கிருந்த ஒரு முதியவர் அவர்கள் இருவரிடமும் வந்து ஏதேதோ பிலாசபிக்கல் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.


அந்த கேள்விகளுக்கெல்லாம் நிரஞ்சனாவால் பதில் சொல்ல முடிந்தது. ஆனால் மைக்கேலுக்கோ அவர் என்ன பேசுகின்றார் என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. சில கேள்விகளை அவனால் உள்வாங்கிக்கொள்ள கூட முடியவில்லை. அவன் நிரஞ்சனாவை பார்த்துக் கொண்டே இருந்தான். அவர்களிடம் பேசிவிட்டு அந்த பெரியவர் அவர்கள் இருவருக்கும் ஒரு புத்தகத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். 


நிரஞ்சனாவும் மைக்கேலும் அங்கிருந்த ஒரு சிறிய உணவகத்தில் உணவு உண்டனர். பின்பு வெளியே சென்று மீண்டும் இயற்கையோடு கலந்தார்கள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்லலாம் என்று இருவரும் முடிவு செய்தார்கள். 


அவர்கள் புறப்படும் வேளையில் மைக்கேல் நிரஞ்சனாவைக் கட்டித் தழுவிக் கொண்டான். ஒரு கணம் நிரஞ்சனாவின் மூளை, மனம், உடல் முழுவதையும் சில வாரங்களுக்கு முன்னால் அவள் சந்தித்த அந்த வசீகரன் ஆக்கிரமித்துக் கொண்டான். நிரஞ்சனாவிற்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவள் மைக்கலிடமிருந்து தன்னைச் சட்டென்று விடுவித்துக் கொண்டாள்.


"ஐயம் சாரி . ஐயம் நாட் பீலின்ங் கம்பர்டேபில்" என்று கூறிவிட்டு நகர்ந்தாள். 

"சாரி அபௌட் இட்" என்றான் மைக்கேல். 

அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். அவள் முழுவதும் அந்த வசீகரனின் முகமும், குரலும், வாசமும் நிறைந்திருந்தது.  


அவள் வீடு வந்து சேரும் வரை அவளுக்குள் என்ன நடக்கிறது என்றே அவளுக்குப் புரியவில்லை. வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் அவன் பாடிய பாடல் ஒன்றை ப்ளே செய்தாள். "மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தமொன்று" அதைக் கேட்ட கணத்தில் அவளுக்குள் ஒரு ஹார்மோனல் ரஷ். அது வரை அவள் உணர்ந்திராத உணர்வு. இத்தனை நாட்கள் அவள் மனதில் எட்டிப் பார்க்காத அந்த முகம் எங்கிருந்து வந்து அவளை ஒட்டிக் கொண்டது என்று யோசித்தாள் அவள்.


தனது அலைபேசியை எடுத்து அவனுடனான பழைய வாட்சப் சாட்டுகளை ஒரு முறை படித்துப் பார்த்தாள். அவற்றில் ஒரு துளி கூட அன்பின் அடையாளம் தென்படவில்லை. அவனுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் போல தோன்றியது அவளுக்கு.


பத்து முறையேனும் டைப் செய்து டிலீட் செய்திருப்பாள். ஆமை ஓட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்து பின் உள்ளே அடங்கும் ஆமையின் சிறு தலை போல மனித உறவுகளைப் பதம் பார்க்கும் தன்மானம், சுயமரியாதை, தன்முனைப்பு என்று இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் வந்து எட்டிப் பார்த்து பின் அடங்கியது அவள் மனதில். அடங்கியதா இல்லை அவனின் நினைவு அடக்கியதா?


 எதுவாக இருந்தாலென்ன அவள்

 "ஹாய் வினய்

 ஹௌ ஆர் யூ?

"ஐ வுட் லைக் டு டாக் டு யூ. ஆர் யூ இன்டரெஸ்டட்?" 

என்ற குறிஞ்செய்தியை அவனுக்கு அனுப்பி விட்டாள். அவன் பதிலுக்காக காத்துக்கொண்டிருந்த அந்த இருட்டு வேளையில் அவளுக்குள் ஏதோ ஒரு படபடப்பு!



Rate this content
Log in

Similar tamil story from Romance